பின்க் – உரத்த அறிவுரை
இந்தியாவில்
‘கோர்ட்-ரூம் டிராமா’ வகையிலான படங்கள்
அதிகம் தயாரிக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது எதார்த்த சினிமா விரும்பிகள் ஆதங்கப்படுகையில்,
எண்பதுகளில் தில்லி சாணக்யா திரையரங்கில் ‘க்ராமர்
வர்ஸஸ் க்ராமர்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து பிரமித்தது நினைவுக்கு வரும்.
ஆனால், பாலிவுட்டில் இவ்வகைப் படங்கள் 60-களிலேயே வரத் தொடங்கியதாக ஞாபகம். ‘வக்த்’ ‘மேரா சாயா’ போன்ற படங்களின் குறிப்பிடத்தக்க காட்சிகள் நீதிமன்றத்தில்
நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தன. 80-களில் கூட ‘மேரி ஜங்’(தமிழில் ‘ஒரு தாயின்
சபதம்’), 90-களில் ‘தாமினி’ (தமிழில்
ப்ரியங்கா) போன்ற படங்கள் வெளியாகத்தான்
செய்தன. 2014-ல் வெளியான மராத்திப்படம் ‘கோர்ட்’
ஆஸ்கார்வரைக்கும் போனது. ஆனால், ஏனைய மசாலாப்படங்களில் கோர்ட் சீன் என்ற பெயரில் நடத்திய
கேலிக்கூத்துகள் காரணமாக, கோர்ட் சீன் என்றாலே ஒரு விதமான நக்கல் விளைவது இயல்பாகி
விட்டது. கடுப்பேத்துறார் மைலார்ட்!
அந்த
வகையில், ‘பின்க்’ திரைப்படம் நிச்சயம் குறிப்பிடத்தக்க, பிரமிப்பூட்டுகிற, சமகால நிகழ்வுகளுடன்
இயைந்த ஒரு உண்மையான திரைப்படம் என்று முதலிலேயே ஒப்புக் கொள்ள வேண்டும். படம் முடிந்து
வெளியேறுகையில் கணிசமான நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதால், இந்தப் படத்தை இன்னும் சிறிது
நாட்களுக்கு நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.
ஒரு நிகழ்ச்சியில் மூன்று இளம்பெண்கள் மூன்று
வாலிபர்களைச் சந்தித்து, மானபங்கத்திலிருந்து தப்பிக்கிற முயற்சியில் ஒருவனுக்குப்
படுகாயம் ஏற்படுத்தி, அடுத்தடுத்து சந்திக்கிற சிக்கல்களைச் சித்தரிக்கிற முயற்சியில்,
பாலின சமன்பாடு குறித்த ஒரு அழுத்தமான செய்தியை, இயன்றவரை பிரச்சார நெடியின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதை வலியுறுத்த சில ‘நச்’ வசனங்கள்.
”ஷராப் கோ யஹான் கலத்
கேரக்டர் கி நிஷானி மானா ஜாதா ஹை; ஸிர்ஃப் லட்கியோன் கே லியே! லட்கோன் கே லியே தோ யே
ஸிர்ஃப் ஏக் ஹெல்த் ஹஜார்ட் ஹை!”
”மது அருந்துவது ஒழுக்கக்கேடாகக்
கருதப்படுகிறது; பெண்களைப் பொறுத்தவரை மட்டும். ஆண்களைப் பொறுத்தவரை அது ஒரு உடல்நலக்
கேடாகவே கருதப்படுகிறது.”
பெரும்பாலானோருக்கு இந்தக் கருத்து நெருடலாக
இருக்கலாம் என்றாலும், இதில் இருக்கிற எதார்த்தம் உறைக்காமல் இல்லை. ஆனால், என்னைப்
பொறுத்தவரை, இந்தப் படத்தின் முக்கியமான செய்தியே வேறு என்று தோன்றுகிறது.
”’நா’ ஸிர்ஃப் ஏக் ஷப்த் நஹி! அப்னே ஆப் மே பூரா வாக்ய
ஹை! இஸே கிஸி தர்க், ஸ்பஷ்டிகரண் யா வ்யாக்யா கி ஜரூரத் நஹீ!”
”’வேண்டாம்’ என்பது
ஒரு வார்த்தை இல்லை; அதுவே ஒரு முழு வாக்கியம் ஆகும். இதற்கு ஒரு பதவுரை, விளக்கம்,
பொழிப்புரை அவசியம் இல்லை.”
”வசந்த
மாளிகை’ படத்தில் சிவாஜி சொல்வாரே! ‘சரீன்னா யாரா இருந்தாலும் விடப்படாது. வேண்டாம்னா
விலைமாதா இருந்தாலும் தொடப்படாது.”
யெஸ்! இந்தப் படத்திலிருந்து முக்கியமாகச் சென்றடைய
வேண்டிய செய்தி இதுவாகத்தான் இருக்க வேண்டும். விருப்பமில்லாத பெண்களை பலாத்காரமாக
அடைய நினைக்கிற மூர்க்கத்தனம், குடிப்பழக்கத்தைக் காட்டிலும் தீமை விளைவிப்பது, ஆபத்தானது
என்று அடித்துச் சொல்லலாம்.
சுருக்கமான கதை!
மினல்(தாப்ஸி),
ஃபலக்(கீர்த்தி குல்ஹாரி) மற்றும் ஆண்ட்ரியா(ஆண்ட்ரியா தரியங்) மூவரும் தில்லியில் ஒரே
அறையில் வசிக்கிற இளம்பெண்கள். ஒவ்வொருவர் பின்புலத்திலும் ஒரு குட்டிக் கிளைக்கதை
இருக்கிறது; அவர்களுக்கென்று ஒரு கடந்தகாலம் இருக்கிறது. அது குறித்து கச்சிதமாக ஆங்காங்கே
இயக்குனர் தொட்டுக் காட்டியிருக்கிறார். (மினல் 19 வயதில் தன் கன்னித்தன்மையை இழந்து,
அதன்பிறகும் பிற ஆடவர்களுடன் சில முறை உடலுறவு கொண்டதாக நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொள்வது
ஒரு சாம்பிள்). அவர்கள் வசிக்கிற குடியிருப்புக்காரர்கள் சிலர் இவர்களது நடத்தையை சந்தேகத்துக்குரியதாகக்
கருதுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களை வலுக்கட்டாயமாக சுகிக்க அனுமதிக்கிற டிக்கெட்டுகள்
இல்லை அல்லவா?
ஒரு ராக் இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் இந்த
மூன்று பெண்களும் மதுவருந்திய நிலையில், ராஜ்வீர் என்ற பெரிய இடத்துப் பையன் மினலை
மானபங்கப்படுத்த முயல, தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற முயற்சியில் அவனை ஒரு பாட்டிலால்
தாக்கி காயப்படுத்துகிறாள் மினல். மூன்று பெண்களும் அங்கிருந்து தப்பித்து, ஒரு சில
நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு, தங்களைப் பழிவாங்கத் துடிக்கிற அந்தப் பணக்கார இளைஞர்களிடமிருந்து
தப்பிக்க, காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். வழக்கம்போல, பெரிய இடத்துத் தலையீடுகளால்
பிராது கொடுத்த மினலே கைது செய்யப்படுகிறாள். உடல்நிலை குலைந்து, வக்கீல் தொழிலுக்கு
முழுக்குப் போட்டுவிட்டு, உயிருக்குப் போராடுகிற தன் மனைவிக்கும் சேவை செய்து கொண்டிருக்கும்
தீபக் செஹ்கல்(அமிதாப் பச்சன்) என்ற வக்கீலின்
உதவியுடன், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுபடுகிறாள். இந்தப் போராட்டத்தின்
இடையில் அவர்கள் சந்திக்கிற அவமானங்கள், அவர்கள்மீது சுமத்தப்படுகிற களங்கங்கள், அபாண்டங்கள்,
கண்ணீர், வேதனை இவையெல்லாம்தான் இந்தப் படத்தின் சதையும் நரம்பும் இரத்தமுமாய் படம்
நெடுக!
ரத்தக்காயங்களுடன்
அந்தப் பணக்கார வாலிபன் ஹோட்டலிலிருந்து மருத்துவமனை நோக்கி விரைகிற முதல்காட்சி தொடங்கி,
இறுதியில் டைட்டிலில் நடந்த நிகழ்வுகளைப் பக்கவாட்டில் காட்டி முடிப்பதுவரை, இத்தனை
விறுவிறுப்பாக கதை சொல்லிய ஒரு இந்திப்படத்தை அண்மையில் நான் பார்த்ததாக நினைவுகூர
முடியவில்லை. அபாரம்! ஒரு குற்றசாட்டு; ஒரு வழக்கு; வாதப்பிரதிவாதங்கள் என்ற அளவில்
நேர்கோட்டில் பயணித்தாலும், அவ்வப்போது பொதுப்புத்தியை நினைவூட்டுகிற வசனங்களும், காட்சியமைப்புகளும்
திரைக்கதைக்கு வலு சேர்ப்பதுடன், கதையோட்டத்துடன் முற்றிலும் ஒன்ற வைத்து விடுகிறது.
ஒரு வறண்ட ஆவணப்படத்தைப் போல, நிறைய பெண்ணியத்தைத் தாளித்துக்கொட்டி, அனாவசியமான மூன்றாம்தரமான
வசனங்களைச் சேர்த்து, படம் பார்க்க வந்தவர்கள் முகத்திலேயே காறித்துப்புவது மாதிரி
(உதாரணம்: ஜோக்கர்) தன்னை ஒரு யோக்கியசிகாமணி
என்று படத்தின் இயக்குனர் எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்த முயலவில்லை. அதுதான் இந்தப்
படத்தின் மிகமுக்கியமான அம்சம்.
கிட்டத்தட்ட இதே கருவுடன் வெளிவந்த ‘தாமினி’ படத்தில், ‘நீ உங்கம்மாகிட்டேயிருந்து
எந்த வழியா வந்தியோ அங்கே கைவைச்சான். உங்கம்மாகிட்டே எங்கிருந்து பால்குடிச்சியோ அங்கே
கைவச்சான்’ என்றெல்லாம் பச்சைகொச்சையாய் வசனம் எழுதி, படபடவென்று கைதட்டலுக்காக ஆலாய்ப்
பறக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு உணர்ச்சிப்பெருக்குடன்
கூடிய பதில்கள் கொட்டப்படுகின்றன. ஆனால், கேள்விகளிலும் பதில்களிலும் இருக்கிற உண்மை
சுடுகின்றது.
அமிதாப்
பச்சன்! 90களில் பல சிக்கல்களுக்குள் ஆட்பட்டு, செக்கு எது, சிவலிங்கம் எது என்று தெரியாமல்,
மனீஷா கோய்ராலாவுடனும் ரம்யா கிருஷ்ணனுடனும் டூயட் பாடி, ‘இனிமே பச்சன் படம்னா எடு
ஓட்டம்’ என்று எண்ணவைத்தவர், ஒரு ஆறேழு வருடங்கள் கழித்து, தன் வயதுக்கொத்த பாத்திரங்களை
ஏற்று, இன்று திலீப்குமாருக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த நடிகர் என்று பெரும்பாலானோரால்
ஏற்கப்படுமளவுக்கு தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! (நம்மூரு
சூப்பர் ஸ்டாரும் இப்படி நடிக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்! ஹும்!)
‘மருந்துகளில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்;
என்னால் வாதிட முடியாது’ என்று மனைவியிடம் சொல்வது; அதற்கேற்றாற்போல கோர்ட்டில் முதல்
நாளன்று தடுமாறுவது; அதன்பிறகு, மெல்ல மெல்ல தனது சமயோசிதத்தையும் வாதத்திறமையையும்
வெளிக்கொணர்வது என்று அந்தக் கதாபாத்திரத்துக்குள் கூடுகட்டி வாழ்ந்திருக்கிறார். அந்தக்
குரல்; அந்த உச்சரிப்பு; அந்த முகபாவங்கள்! ‘சிவாஜி என்ற சிங்கம் உயிரோடில்லை; அந்த
சிங்கத்தின் இடத்தை இந்த சிங்கம்தான் நிரப்ப
முடியும்’ என்று கமல்ஹாசன் சொன்னது எவ்வளவு உண்மை!
தாப்ஸி பன்னு! சத்தியமாக நம்பவே முடியவில்லை.
முதல் இந்திப்படம், அதிலும் அமிதாப் பச்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிற படம். அதில்
தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் நடித்து மெய்யாலுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்துக் கணிக்கக் கூடாது என்பதை உணர்வோமாக!
ஃபலக் அலியாக வரும் கீர்த்தி குல்ஹாரி, நீதிமன்றத்தில்
‘ நாங்கள் பணம் வாங்கிக்கொண்டோம்’ என்று கதறுகிற காட்சியில், சற்றே இளகிய மனம் கொண்டவர்கள்
நிச்சயம் அழுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேகாலயா பெண்ணாக வருகிற ஆண்ட்ரியாவின் பாத்திரத்தின்
மூலம், வடகிழக்கு இந்தியப் பெண்கள் குறித்த அலட்சிய மனோபாவத்தையும் ஓரிரு வசனங்களில்
குத்திக் காட்டியிருக்கிறார்கள்.
பொதுவாக நீதிமன்றக்காட்சிகளுக்கு வலுவூட்ட, வசனங்களில்
கூர்மை மிக அத்தியாவசியமாகும். இந்தப் படத்தில் அண்மைக்கால இந்திப்படங்களிலேயே மிகவும்
சிறப்பான வசனம் திறம்பட எழுதப்பட்டிருக்கிறது.
”ஹமாரா யஹா கடி கீ
ஸூயி கேரக்டர் டிஸைட் கர்தீ ஹை”
”இங்கே கடிகாரத்தின்
முள் ஒழுக்கத்தை நிர்ணயிக்கின்றன.”
”ராத் கோ லட்கியான்
ஜப் அகேலி ஜாத்தீ ஹை தோ காடியா ஸ்லோ ஹோஜாத்தி அவுர் உன்கே ஸீஷே நீச்சே ஹோஜாத்தே ஹை! தின் மே யே மஹான் ஐடியா கிஸீ
கோ நஹீ ஆத்தா”
”இரவில் பெண்கள் தனியாகப் போனால், வாகனங்களின் வேகம் குறைந்து,
அதன் கண்ணாடிகள் கீழே இறக்கப்படுகின்றன. பகலில் யாருக்கும் இந்தச் சிறந்த எண்ணம் வருவதில்லை.”
”ஜோ லட்கியான் பார்ட்டி
மே ஜாத்தீ ஹை அவுர் ட்ரிங்க் கர்த்தீ ஹை, வோ புஷ்தைனி ஹக் பன்ஜாத்தீ ஹை ஆப் கா”
”பார்ட்டிக்குப் போய், மதுவருந்தும் பெண்கள் உங்களுக்கு எளிதான
உரிமைப்பொருள் ஆகிவிடுகிறார்கள்.”
”ஆஜ்தக் ஹம் ஏக் கலத்
டைரக்ஷன் மே எஃபர்ட் கர்தே ரஹே! வீ ஷுட் ஸேவ் அவர் பாய்ஸ்; நாட் கேர்ள்ஸ்! பிகாஸ்
இஃப் வீ ஸேவ் அவர் பாய்ஸ், அவர் கேர்ள்ஸ் வில் பீ ஸேஃப்”
”இன்றுவரை நாம் தவறான
திசையில் முயற்சி செய்து வருகிறோம். நாம் நம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும்; பெண்களை
அல்ல. ஏனெனில், ஆண்கள் பாதுகாக்கப்பட்டால், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.”
சமீபகாலங்களாகவே, இந்தியில் மீண்டும் நல்ல படங்கள்
வரத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் ‘No one killed
Jessica’, ‘Jolly LLB’, ‘Shaurya’ போன்ற படங்களின் வரிசையில் சட்டம், நீதிமன்றம் தொடர்புடைய
படமாக இருந்தாலும், சலிப்பின்றி அலுப்பின்றி, ஒருவித பதைபதைப்புடன் பார்க்க முடிகிறது.
அதுவே இந்தப் படத்தின் வெற்றி!
இறுதியாக….
”These boys must realise that ’No’ கா மத்லப் No ஹோத்தா
ஹை!. உஸே போல்னேவாலி லட்கி கோயி பரிச்சித் ஹோ, ஃப்ரெண்ட் ஹோ, கேர்ள்ஃப்ரெண்ட் ஹோ, கோயி
செக்ஸ் வொர்க்கர் ஹோ யா அப்னி பீவி க்யூ நா ஹோ! ‘No’ means no and when someone
says No, you stop!”
வேண்டாம் என்று சொல்லும் பெண் அறிமுகமானவரோ, தோழியோ, காதலியோ,
பாலியல் தொழிலாளியோ அல்லது உங்கள் மனைவியோ, வேண்டாம் என்றால் வேண்டாம். நிறுத்துங்கள்
சினிமாவால்
சமூகத்தைத் திருத்த முடியும் என்று நம்புகிற இளிச்சவாயன் அல்ல நான். ஆனால், இந்தப்
படம் ஒரு நபரையாவது திருத்தினால் நன்றாக இருக்குமே என்று நப்பாசைப்படுகிறேன்.
பின்க்
– ஒரு தேவையான படம்.
***********************************************************************************************************
கோர்ட் ஸீன் காட்சிகளில் விதி படத்தையும் இன்சாப் கா தராசு படத்தையும் விட்டு விட்டீர்கள்!!
ReplyDeleteஇந்தப் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல். ஆனால் அவ்வளவு ஹிந்தி போதாது. ஏனென்றால் இந்தப் படத்தின் வசனங்கள் முழுவதுமாக உணர்ந்து ரசிக்கப்படவேண்டியவை. அமிதாப் சமீப காலங்களில் நிறைய வித்தியாசமான நல்ல படங்களில் நடித்து வருகிறார்.
இன்று உங்கள் படைப்பு எங்கள் ப்ளாக்கில்!@
தமிழ் டப்பிங் வந்தால் பார்க்கலாம்.
ReplyDeleteவிமர்சனம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது!
ReplyDeleteஹிந்தி வசனங்களை தமிழில் படிப்பது தான் கஷ்டமாக இருக்கிறது, கீழே தந்திருந்த மொழியாக்கத்துக்குத் தாவி விட்டேன்!!
Superb movie, every one should watch especially men and they should change their views & attitude towards women. After watching this movie, I was speechless. A tight slap to the Society and Men.
ReplyDeleteதற்போதுதான் தங்களின் தளம் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துகள். விரைவில் பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
ReplyDelete