இப்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்களுக்குள் நுழைந்தால், கொஞ்சம் சுமாராக இருக்கிற ரிசப்ஷனிஸ்ட்களின் தலைக்கு மேலும் திருஷ்டிப்பூசணி மாதிரி, எம்.டியின் போட்டோவைப் போட்டு, ‘Quality
Policy(தரக்கொள்கை)’ என்று மூன்று பத்திகளை வண்ணத்தில் அச்சிட்டு, லாமினேட் செய்து
ஒற்றை ஆணியிலிருந்து தூக்கில் தொங்க விட்டிருப்பதைக் காணலாம். விசாரித்துப் பார்த்தால், அந்தக் கம்பெனிக்கும் தரத்துக்கும், அந்த எம்.டிக்கும்
அவர் போட்டோவில் அணிந்திருக்கிற கோட்டுக்கும் இருப்பதுபோன்ற ஒரு அப்பட்டமான ஒவ்வாமை இருக்கும். ’ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ்’ என்பதை ‘டிபன் ரெடி’ என்று போர்டு
போடுவதுபோலப் போட்டு, அதற்கேனும் இன்னும்
நாலைந்து இளிச்சவாயர்கள் சிக்க மாட்டார்களா என்று ரொம்ப காலமாக திருவினையாக்கும் முயற்சிகள், பெருவினையாகிக் கொண்டிருக்கின்றன. மயிலை கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன் ஆலயங்கள் கூட ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வாங்கியிருக்கின்றனவாம். கடவுளுக்கு இருக்கிற கவலைகள் போதாதென்று, ‘கஸ்டமர் ஸாடிஸ்ஃபேக்ஷன் இண்டெக்ஸ்’ கணக்கிடுகிற அனாவசியமான
வேலையையும் அவர் தலையில் சுமத்தியிருக்கிறார்கள். அப்புறம் அவர் பக்தர்கள் மீது கடுப்படையாமல் என்ன செய்வார் பாவம்?
ஆஸ்பத்திரிகளையும் இந்த ஐ.எஸ்.ஓ உபாதை விட்டு
வைக்கவில்லை. ஆபரேஷன் முடித்த நோயாளிகள், ‘பிரமாதம்! இப்படியொரு ஆபரேஷனை
வாழ்க்கையிலே எனக்கு யாருமே பண்ணியதில்லை’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள் போலிருக்கிறது. இது போதாதென்று புதிதாக NABH
(National Accreditation Board for Hospitals) என்று புதிதாகக் கிளம்பியிருக்கிற பூதம் சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான ஆஸ்பத்திரிகளைப் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. (ஆஸ்பத்திரிகளைப் பற்றி ஒரு
தொடர் தயாராகி வருகிறது. கபர்தார்!)
ஐ.எஸ்.ஓ, என்.ஏ.பி.எச் போன்ற அமைப்புகள் எல்லாம், வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்துவதற்கான
நேர்மையான முயற்சிகள் என்பதிலோ, ஒரு நிறுவனம்
தரத்தின் அடிப்படையில் முன்னேற, இத்தகைய நல்ல
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதிலோ மற்றவர்களைப் போலவே, எனக்கும் எவ்வித
மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், பிரச்சினை அதில்லை. எப்படி, ஈ-மெயிலை நாலைந்து பிரிண்ட்-அவுட் எடுத்து
ஐந்தாறு ஃபைல்களில் போடுகிற கேலிக்கூத்துகள் நடக்கின்றனவோ, அதேபோல இந்த ஐ.எஸ்.ஓ விஷயத்திலும் பெரும்பாலான
நிறுவனங்கள், பிள்ளையார் பிடிக்கப்போயி, குரங்காகிப் பேன்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விதிவிலக்காக,
சில நிறுவனங்கள் தவிர்த்து, இந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் என்பது சாமிபடத்துக்கு அடுத்தபடியாக,
சம்பிரதாயமாக சுவரில் தொங்கி, நாளாவட்டத்தில் தூசியடைந்து பின்பக்கம் பல்லியின் பள்ளியறையாகின்றது.
வாடிக்கையாளர்களுக்கோ, அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கோ இதனால் சுந்தர்.சி படக்கதையளவுகூட
நன்மை உண்டானதாக, அரசல்புரசலாகவும் கேள்விப்படவில்லை. சொல்லப்போனால், நிறைய நிறுவனங்களில்
ஐ.எஸ்.ஓ மீது பழிபோட்டு, இருக்கிற பணிச்சுமையோடு, இதற்கென்று மாதாமாதம் தயாரிக்கப்படுகிற
விஸ்தாரமான ரிப்போர்ட்டுகளுக்காக, பலரும் மெய்வருத்தம் பாராமல், பசிநோக்காமல், கண்
துஞ்சாமல், எவ்வெவெர் தீமையும் மேற்கொள்ளாமல், ஒரு பர்மிஷன்போட்டு மெரீனாவில் போய்
கடலைபோடவோ, கடலைவாங்கிக் கொறிக்கவோ கூட முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த
ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற பகீரதப்பிரயத்தனங்கள் செய்ய வேண்டிவந்ததெல்லாம் தமிழில் ஜெய்சங்கர்
ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அக்காலத்தில்தான். இப்போது? சென்னையில் சில புண்ணியவான்கள்
அவரவர் வீடுகளிலேயே, மாடியில் ஒரு சீலிங் ஃபேனும், பெண்டியம் 3 கம்ப்யூட்டரும், ரிச்சி
ஸ்ட்ரீட்டில் சல்லிசாக வாங்கிய ஒரு இன்க்ஜெட் பிரிண்டரும், ஒரு இணையவசதியும், சுமாராக
இங்கிலீஷில் தட்டச்சத் தெரிந்த ஓரிரெண்டு பேர்களும், (பெண்களாய் இருந்தால் சாலச்சிறந்தது!),
சில மேஜை நாற்காலிகளும், மூலையில் ஒரு ஸ்டூலின் மீது குடிநீர் கேனும், பிளாஸ்டிக் தம்ளரும்
வைத்துக் கொண்டு, ஐ.எஸ்.ஓ வியாபாரத்தை அமர்க்களமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பட்ஜெட்
படங்கள் மாதிரி, நிறுவனங்களின் தேவைக்கேற்றவாறு ஐ.எஸ்.ஓ.சான்றிதழ்களை அவர்கள் விரும்புகிற
அவகாசத்துக்குள், அவர்களுக்குக் கட்டுப்படியாகிற தொகைக்குப் பட்டுவாடா செய்கிற பரோபகாரிகள்
மிக அதிகம்.
”ஒரு
என்.ஆர்.ஐ நம்ம கம்பெனியிலே ஈக்விட்டி கொண்டு வர்றாரு. சட்டுப்புட்டுன்னு ஒரு ஐ.எஸ்.ஓ
சர்டிபிகேட் கிடைச்சா, ஒரு வெப்ஸைட் ஓப்பன் பண்ணிருவோம். நம்ம ஆபீஸுலே ஐ.டி. டிபார்ட்மெண்ட்
ஆளுங்க, வேலைவெட்டியில்லாம காட்ரிட்ஜ் கழுவிட்டிருக்காங்க. இதையாவது செய்யட்டும்,”
என்று சொன்னால்போதும். அடுத்த ஓரிரு மின்னஞ்சல்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்
சுகப்பிரசவமாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும்.
அதைத்
தொடர்ந்து, ஐ.எஸ்.ஓ தவமிருக்கும் அந்த நிறுவனத்தில் நடக்கிற காட்சிகள் மன்மோகன்சிங்கைக்
கூட மனம்விட்டுச் சிரிக்க வைப்பவையாகும். இந்த ஐ.எஸ்.ஓவுக்காக, உருப்படியாகச் செய்யவேண்டிய
தினசரிப் பணிகளையும் தள்ளிவைத்துவிட்டு, ஐ.எஸ்.ஓ ஜுரத்தில் அவதிப்படுவதும் உண்டு.
முதலில்,
ஐ.எஸ்.ஓ தேவைப்படுகிற கம்பெனிக்குச் சென்னையிலிருந்து தொந்தியுடனும், தொந்தியில்லாமலும்
நாலைந்து பேர் கிளம்பிப் போவார்கள். இஸ்திரி செய்யப்படாமல், பெரிய சைஸ் கொத்தவரங்காய்போல,
கழுத்தை இறுக்கி ’டை’யணிந்திருப்பார்கள். அந்தந்த அலுவலகங்களிலேயே இருப்பதில் பெரிய
’அறையில், நெருக்கி நெருக்கி நாற்காலிகள் போட்டு, எழவுவீடு போல எல்லா ஊழியர்களையும்
உட்காரவைத்து மாரி பிஸ்கெட்டும், பேப்பர்கப் டீயும் கொடுப்பார்கள். பிறகு, சென்னையிலிருந்து
வந்த லாப்-டாப்பை எழுப்பி, அதில் தூங்கிக் கொண்டிருக்கிற பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனை
வெள்ளைத் திரையிலோ இல்லாவிட்டால் வெள்ளையடிக்காத சுவற்றிலோ காட்டுவார்கள். முதல் ஓரிரெண்டு
ஸ்லைடுகளில் சென்னைக்காரர்கள் தங்கள் நிறுவனம் பற்றிய அறிமுகத்தை அளித்திருப்பார்கள்.
(பெரிய மணிரத்னம்!). அதன்பிறகு, வாடிக்கையாளர் என்றால் யார், அவரை ஏன் திருப்தியாக
வைத்துக் கொள்ள வேண்டும், வாடிக்கையாளரை நோகடித்தால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படக்கூடிய
இன்னல்கள் எவையெவை என்று பட்டியலிட்டு பயமுறுத்துவார்கள். ஒரு கட்டத்தில், உலகவழக்கத்துக்கு
மாறாக, டீ குடித்தும் பெரும்பாலானோர்கள் தூங்கியிருப்பார்கள். வந்தவர்களில் பெரும்பாலானோர்
disoriented-ஆகி உறங்குகிற இந்த வைபவத்துக்கு Orientation என்று பெயர்!
ஆமை
புகுந்த வீடு; அமீனா புகுந்த வீடு; ஐ.எஸ்.ஓ.புகுந்த கம்பெனி மூன்றும் என்ன பாடுபடும்
என்பதற்கு அத்தாட்சியாக, அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆரம்பிக்கும்.
புதுவண்டியின்
டயரின் கீழ் வைக்க எலுமிச்சம்பழம் வாங்குவதுபோல, ஓரியெண்டேஷனில் உறங்காமலிருந்த ஜடங்களில்
யாரேனும் ஒருவர், ஐ.எஸ்.ஓ-வுக்கு ‘நிர்வாகப் பிரதிநிதி (Management
Representative)’ என்று கண்டறியப்படுவார். அத்தோடு அவரது கதை குளோஸ்! (இனி அவரை நீனா
பீனா என்று அழைப்போமாக)
’ஏதோ
உருப்படியான வேலை போலிருக்குதே; ஒரு மாறுதலுக்கு கஸ்டமரைப் பத்தியும் கவலைப்படலாமே’
என்று ஆவலுடன் கடமையாற்றக் கிளம்புகிற அந்த நீனா பீனா, திடீரென்று நிறைய பேரின் பொறாமைக்கு
ஆளாவார்.
“அவனைவிட
எனக்குத்தான் சர்வீஸ் அதிகம். எப்படி என்னை வைச்சிட்டே அவனை எம்.ஆர்.ஆக்கலாம்? இந்தக்
கம்பனி உருப்படாது.”
”கொஞ்சம்
இங்கிலீஷ் தெரிஞ்சாப் போதுமே? உடனே அவனைப் பெரிய ஆளாக்கிடுவாங்களே!”
“இவன்
நேத்தே எம்.டி கூடப் பேசிட்டிருந்தான். எப்படியோ காக்கா புடிச்சு நினைச்சதைச் சாதிச்சிட்டான்.
நான் இனிமே எதுலேயும் தலையிட மாட்டேன் சாமி. கம்பெனி எக்கேடு கெட்டா எனக்கென்ன?”
இப்படித்தான்,
ஐ.எஸ்.ஓ நடைமுறைப் ‘படுத்துதல்’ ஆரம்பமாகும். அதன்பிறகு, கம்பனியைத் துறைவாரியாகப்
பிரித்து, ஒவ்வொரு துறையின் நிர்வாகிகளின் விருப்பத்துக்கிணங்க, ஒரு சில ஊழியர்கள்
கண்டெறியப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கால அட்டவணை தயாரிக்கப்படும்.
ரஜினி
பட முதல்ஷோ போல, முதல் பயிற்சி வகுப்பு ஹவுஸ்ஃபுல் ஆவது வழக்கம். கையில் பேடும், பேனாவுமாக
வந்து அமைதியாக அமர்ந்திருக்கும் ஊழியர்கள், போண்டா வந்தவுடன் வாயில் அடைத்துக் கொண்டு
விழிபிதுங்கியவாறு பயிற்சியைக் கவனிப்பார்கள். பயிற்சி முடிந்ததும் ‘இனிமேல் போண்டா
சாப்பிடவே கூடாது’ என்ற முடிவோடு கிளம்புவார்கள். அடுத்த பயிற்சி வகுப்புகளுக்கு, நீனா
பீனா ஆள்சேர்க்க, சமோசா, கச்சோரி போன்ற புதுமுயற்சிகளில் ஈடுபட்டாக நேரிடும்.
ஒவ்வொரு
துறைக்கும், ஒவ்வொரு வேலைக்கும், குறித்த கால அவகாசத்தை நிர்ணயிப்பார்கள். உதாரணத்துக்கு
வரவேற்பறையில் இருப்பவர்கள், வருகிற வாடிக்கையாளர்கள் கேட்கிற கேள்விகளுக்கு, இரண்டு
நிமிடங்களில் பதிலளிக்க வேண்டுமென்று சொன்னால், 121-வது நொடிக்குப் பிறகு வாடிக்கையாளர்
கேள்விகேட்பதற்கு முன்னர், ஊழியர் அங்கிருந்து மாயமாகி விடுவார். மூன்று தடவை மணியடிப்பதற்குள்
டெலிபோனை எடுத்தாக வேண்டுமென்று நிர்ணயிப்பார்கள் இதனால், கொஞ்ச நாளைக்கு டெலிபோன்
மணியடித்தாலே, சூப்பர் சுப்பராயன் போலப் பாய்வார்கள். ஆனால், டெலிபோனை எடுத்து எப்படிப்
பேச வேண்டுமென்பது அடுத்த வகுப்புக்குத்தான் அட்டவணை போடப்பட்டிருக்கும்.
இப்படி
ஒவ்வொரு துறையும், அவரவர்கள் செய்கிற கோமாளிக்கூத்துகளையெல்லாம் வரலாற்றில் பதிவு செய்ய
ஏதுவாக, ஆளுக்கு ஒரு எக்ஸெல் ஷீட் திறந்துவைத்து, பார்டர், ஷேடிங் எல்லாம் போட்டு,
போன மாதம் ஒவ்வொரு நாளும் எந்தெந்த வேலைகளை எவ்வளவு நேரத்துக்குள் செய்தேன் என்று கட்டம்போட்டுக்
காட்ட வேண்டும். இப்படி எல்லாத் துறைகளிலிருந்தும் ஒரு எக்ஸெல் ரிப்போர்ட் நீனா பீனாவுக்குப்
போய்ச் சேர்ந்ததும், அவர் ஒரு வண்டி ஏ-4 பேப்பர் வாங்கி அனைத்தையும் பிரிண்ட் எடுத்து,
துறைவாரியாகப் பைல்போட்டு, மேஜை மீது அடுக்கிவைத்தால், அவர் பகலில் உறங்குவதை பகவானாலும்
பார்க்க முடியாதபடி சுவர்போல உயர்ந்து மறைத்துவிடும்.
கமிட்டி!
அது இல்லாமலா? இந்த எக்ஸெல் ஷீட்டுகள் அனுப்புகிறவர்களில், sumif, countif,
vlookup, match போன்ற அரியபெரிய சிதம்பர ரகசியங்களை அறிந்தவர்கள், நீனா பீனா அமைக்கிற
கமிட்டியில் நிரந்தர உறுப்பினர்கள் ஆவார்கள். எவருக்கேனும் pivot table தெரிந்திருந்தால்,
அவருக்கு எக்ஸ்ட்ரா சமோசா நிச்சயம். இப்படியாகத்தானே, அவ்வப்போது இந்தக் கமிட்டி கூடி,
ரிவ்யூ ஈட்டிங், அதாவது ரிவ்யூ மீட்டிங் நடத்தி, கம்பெனியில் தரம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது
என்பதைக் கணக்கிடுவார்கள். மீட்டிங் முடிந்ததும், அடுத்த முறை வேறோர் கடையிலிருந்து
சமோசா வாங்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதற்கிடையில்
சென்னைக்கார ஆலோசகர்கள், மாதாமாதம் வந்து ’ஆய்வுக்காக’ வந்து, நல்ல ஹோட்டல்களில் உண்டுகளித்து
‘வாய்வு’வுடன் திரும்பிச் செல்வார்கள். பிறகு, சென்னையிலிருந்து சில பல ஆயிர ரூபாய்க்கான
பில்லை அனுப்பிவைத்தால், நீனா பீனாவுக்கும் அக்கவுண்டண்டுக்கும் இடையே சிலபல சண்டைகளுக்குப்
பிறகு, வருமானவரி பிடித்து மீதத்தை சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள்.
இறுதி
ஆய்வு நடக்கும் முன்னர், நீனா போனா காமாசோமாவாகிக் கடுப்பாகியிருப்பார். ’கஸ்டமர் நாசமாகப்போகட்டும்;
முதல்லே ரிப்போர்ட்டை அனுப்புங்கய்யா’ என்று தினசரியும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும்
கந்துவட்டிக்காரர் மாதிரிப் போய் வாங்கி வருவதற்குள் உயிரில் பாதி போய்விடும். மாதக்கடைசியில்,
அவரவர் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, எல்லாரும் எக்ஸெல் ரிப்போர்ட்டுகளை
அனுப்பி வைப்பார்கள். இப்படி, தொடர்ந்து சில மாதங்கள் நடந்தபிறகு, சென்னையிலிருந்து
வருகிற ஆலோசகர்கள் புதிதாக ஒருவரையும் அழைத்து வருவார்கள். அவர் வந்ததிலேருந்து காரணமேயில்லாமல்
இஞ்சி தின்ற குரங்குபோல, முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பார்.
”ஒரு
மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு விரைவிலேயே சான்றிதழ் கிடைத்துவிடும்” என்று சொன்னதும்,
எல்லாரும் கைதட்டிவிட்டு வெளியேறுவார்கள்.
”ஒரு
நாலு நாள் லீவு வேணும்சார்,” நீனா பீனா எம்.டியிடம்
போய் மன்றாடுவார். “ஐ.எஸ்.ஓ கிடைச்சா பழநிக்கு வந்து காவடி எடுக்கிறதா வேண்டுதல்.”
எம்.டியும்
‘இவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய வித்தியாசமில்லை’ என்று அனுப்பி வைப்பார்கள்.
“சார்!”
கிளம்புகிற நேரத்தில் நீனா பீனாவை யாராவது வாடிக்கையாளர் வந்து இம்சிப்பார். “ஒரு கம்பிளெயிண்ட்
சார்!”
“நாலு
நாள் கழிச்சு வாய்யா; நான் பழநிக்குப் போறேன்,” என்று எரிச்சலுடன் புன்னகைப்பார் நீனா
பீனா.
”சார்,
போன் பண்ணினா எடுக்கக்கூட மாட்டேங்குறாங்க உங்க கம்பெனியிலே!”
”மூணு
மணியடிக்கிறதுக்குள்ளே எடுத்தேயாகணுமே?”
“எடுக்கிறாங்க,
பேசாமப் படக்குன்னு வைச்சிடுறாங்க.”
’யெப்பா
பழநியாண்டி!’ நீனா பீனா மனதுக்குள் உருகுவார். “ஆயுசுமுழுக்கக் காவடிதானா?”
****************************************************************************
ஒவ்வொரு நிறுவனத்திலும் இன்று நடப்பதை, சும்மா உ.கி.போண்டா போலப் புட்டுப்புட்டுக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteஇந்தத் தங்களின் பதிவுக்கே நான் ஒரு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தரலாமா என யோசிக்கிறேன்.
படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன். அனைத்தும் உண்மையே. பாராட்டுகள். வாழ்த்துகள்.
மிகவும் ரஸித்த வரிகள்:
ReplyDelete//விதிவிலக்காக, சில நிறுவனங்கள் தவிர்த்து, இந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் என்பது சாமிபடத்துக்கு அடுத்தபடியாக, சம்பிரதாயமாக சுவரில் தொங்கி, நாளாவட்டத்தில் தூசியடைந்து பின்பக்கம் பல்லியின் பள்ளியறையாகின்றது.//
//மீட்டிங் முடிந்ததும், அடுத்த முறை வேறோர் கடையிலிருந்து சமோசா வாங்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்படும்.//
//இறுதி ஆய்வு நடக்கும் முன்னர், நீனா போனா காமாசோமாவாகிக் கடுப்பாகியிருப்பார். ’கஸ்டமர் நாசமாகப்போகட்டும்; முதல்லே ரிப்போர்ட்டை அனுப்புங்கய்யா’ என்று தினசரியும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் கந்துவட்டிக்காரர் மாதிரிப் போய் வாங்கி வருவதற்குள் உயிரில் பாதி போய்விடும். மாதக்கடைசியில், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, எல்லாரும் எக்ஸெல் ரிப்போர்ட்டுகளை அனுப்பி வைப்பார்கள்.//
//”ஒரு நாலு நாள் லீவு வேணும்சார்,” நீனா பீனா எம்.டியிடம் போய் மன்றாடுவார். “ஐ.எஸ்.ஓ கிடைச்சா பழநிக்கு வந்து காவடி எடுக்கிறதா வேண்டுதல்.”
எம்.டியும் ‘இவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய வித்தியாசமில்லை’ என்று அனுப்பி வைப்பார்கள்.//
:)))))
#பேசாமப் படக்குன்னு வைச்சிடுறாங்க.”#
ReplyDeleteஇதுக்கும் ஒரு நாள் மீட்டிங் போடுவார்களோ :)
கேட்பாரில்லை!
ReplyDeleteவாடிக்கையாளர்களுக்கோ, அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கோ இதனால் சுந்தர்.சி படக்கதையளவுகூட நன்மை உண்டானதாக, அரசல்புரசலாகவும் கேள்விப்படவில்லை. ////////// அதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஓ தவமிருக்கும் அந்த நிறுவனத்தில் நடக்கிற காட்சிகள் மன்மோகன்சிங்கைக் கூட மனம்விட்டுச் சிரிக்க வைப்பவையாகும். /////மீட்டிங் முடிந்ததும், அடுத்த முறை வேறோர் கடையிலிருந்து சமோசா வாங்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். //////////
ReplyDeleteஹா... ஹா... ஹா... உங்களுக்கு நிகர் நீங்கதாண்ணே. சிரிச்சு மாளல.
கூடவே துயரமும். ஒரு பாழாப் போன கம்பெனில நான் வேல பாத்தப்போ, அவிங்க இந்த ஐஎஸ்ஒவ வாங்கறதுக்காக படுத்துன பாடு இருக்கே... (அந்தக் கம்பெனி செய்யற வேலைக்கு இந்த எளவு தேவையே இல்லங்கறது வேற விஷயம்) டெய்லி எத்தன தடவ ஒன் பாத்ரூம் போனோங்கறதுக்கு கூட டயம் வாரிய எக்ஸஸ் ஷீட் தரணும்னு சாவடிப்பாய்ங்க பன்னாடைங்க. வயித்தெரிச்சல்.
ஹாஹாஹா....
ReplyDeleteஐ.எஸ்.ஓ - அலப்பறைகள் - நானும் அனுபவித்திருக்கிறேன்! :)
ஃபுல் ஸ்விங்க்ல எழுதியிருக்கீங்க.
ReplyDelete"ஆபரேஷன் முடித்த நோயாளிகள், ‘பிரமாதம்! இப்படியொரு ஆபரேஷனை வாழ்க்கையிலே எனக்கு யாருமே பண்ணியதில்லை’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள் போலிருக்கிறது" - எங்க போவார்கள் என்று சொல்லியிருக்கலாம்.
"இஸ்திரி செய்யப்படாமல், பெரிய சைஸ் கொத்தவரங்காய்போல, கழுத்தை இறுக்கி ’டை’யணிந்திருப்பார்கள்" - டையை இதைவிடக் கேவலப்படுத்தமுடியாது.
"இதனால், கொஞ்ச நாளைக்கு டெலிபோன் மணியடித்தாலே, சூப்பர் சுப்பராயன் போலப் பாய்வார்கள். ஆனால், டெலிபோனை எடுத்து எப்படிப் பேச வேண்டுமென்பது அடுத்த வகுப்புக்குத்தான் அட்டவணை போடப்பட்டிருக்கும்" - ஐ எஸ் ஓ டிரெயினிங்கை இதைவிடப் பிரித்து மேயமுடியாது.
ரொம்ப சிரித்து எஞ்சாய் பண்ண முடிந்தது உங்களின் இந்த இடுகை.
நன்று. ஸிறப்பு. நல்ல நகை.
ReplyDeleteநீங்க மெக்கானிக்கல் இன்ஞினியரா?!?!?!
லைட்டா டச் பண்ணி வலிக்காம நகை இழை ஓட்டியிருக்கீங்க. நன்று. ஸிறப்பு.
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/patent-screw-feeder.html
அட்டகாசம்.சேட்டைக்காரன் சார்.
ReplyDelete//இந்த எக்ஸெல் ஷீட்டுகள் அனுப்புகிறவர்களில், sumif, countif, vlookup, match போன்ற அரியபெரிய சிதம்பர ரகசியங்களை அறிந்தவர்கள், நீனா பீனா அமைக்கிற கமிட்டியில் நிரந்தர உறுப்பினர்கள் ஆவார்கள். எவருக்கேனும் pivot table தெரிந்திருந்தால், அவருக்கு எக்ஸ்ட்ரா சமோசா நிச்சயம்.//
சூப்பரோ சூப்பர் .
எனக்கு தெரிஞ்ச எக்சல் அளவுக்கே நானும் நிறைய தடவை எக்ஸ்ட்ரா சமோசா வாங்கி இருக்கேன் இல்ல. ஹிஹிஹிஹ்
”ஒரு நாலு நாள் லீவு வேணும்சார்,” நீனா பீனா எம்.டியிடம் போய் மன்றாடுவார். “ஐ.எஸ்.ஓ கிடைச்சா பழநிக்கு வந்து காவடி எடுக்கிறதா வேண்டுதல்.”
ReplyDeleteஎம்.டியும் ‘இவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய வித்தியாசமில்லை’ என்று அனுப்பி வைப்பார்கள்- Super