Television Rating
Point (TRP) எனப்படுவது, சில/பல ஆயிரம்
வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒரு சாதனத்தைப் பொருத்தி, எந்தெந்த நிகழ்ச்சிகள்
எத்தனை பிரபலமாயிருக்கின்றன என்பனைக் கண்டறிந்து சொல்கிற ஒரு மின்னணு உட்டாலக்கிடி. அவ்வப்போது, சில ஊடகங்கள் / கல்லூரிகள் (பொழுதுபோகாமல்), அடுத்த ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்று வெளியிடுகிற அபத்தங்களைப் போலவே, இதுவும் இன்னொரு
நகைப்புக்குரிய சங்கதி. பிச்சைக்காரனுக்கு ‘குபேரன்’ என்ற பெயரிருப்பதுபோல, இந்த சாதனத்துக்கு ‘பீப்பிள்ஸ் மீட்டர்’ என்று பெயர்
வைத்திருக்கிறார்கள். ‘நான் தான் டாப்பு; மீதியெல்லாம் டூப்பு’ என்று ஏறக்குறைய எல்லா ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அடித்துக் கொள்கிற அவலத்தைப் பார்க்கிறவர்களுக்கு, இந்த ‘டி.ஆர்.பி’ என்பதெல்லாம் சுத்த
ஹம்பக் என்பது புரிந்திருக்கும். இருப்பினும், இதற்குத்தான், பல தொலைக்காட்சிகள் வலுக்கட்டாயமாக, அவர்களுக்குத் தோதான விஷயங்களை நமது தொண்டைக்குழிக்குள் குச்சியால் குத்தி இறக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பு மிகையாகத் தாளித்து, சிக்கிச் சின்னாபின்னமாகிற வழக்கம் அண்மைக்காலமாக ஆங்கில செய்தி காட்சி ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. பீஹார் தேர்தல் குறித்து எசகுபிசகாக கருத்துக் கணிப்பு வெளியிட்டு, பிறகு பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு, சில தொலைக்காட்சிகள்
இறங்கியிருக்கின்றன என்பதுதான், கருத்துச் சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியாய் தென்படுகிறது.
அப்படியாகத்தானே, சமீபத்தில் சி.என்.என் –ஐ.பி.என்
தொலைக்காட்சியில், பூபேன் சௌபே என்கிற நெறியாளர், நடிகை சன்னி
லியோனியைக் கண்ட பேட்டியின் ஓளிபரப்புக்குப் பிறகு, பாலிவுட் நடிகர்கள்
மட்டுமின்றி சமூக ஊடகங்களில் சாமானியர்களும் காறித் துப்பாத குறையாக தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டியதை ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் பெறாத பூபேன் சௌபே, மழுப்பலாக தனது
வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்த விளக்கம், அசல் சௌபெ மார்க் விளக்கெண்ணை.
சன்னி லியோனியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருப்பதற்கு
வாய்ப்பில்லை. இருந்தாலும்......
2011-ல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இந்தியத்
தொலைக்காட்சியில் அறிமுகமாகி, தொடர்ந்து மகேஷ் பட் தயாரிப்பில் வெளியான ‘ஜிஸ்ம்-2’
மூலமாக பாலிவுட்டில் கால்பதித்து, ’அவ்வகை’யிலான ஓரிரு திரைப்படங்களில் தொடர்ந்து
நடித்து வருகிற கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோனி, இவிடம் வருவதற்கு முன்னால்
முழுநீள நீலப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். (’வடகறி’ தமிழ்ப்படத்திலும்
ஒரு குத்து டான்ஸ் ஆடியிருக்கிறாராம்!). பூர்வீக இந்தியரான இவருக்கும்
இந்தியாவுக்கும் ஏனோ ஒத்துப்போகவில்லை.
’ஜிஸ்ம்-2’, ’ராகினி
எம்.எம்.எஸ்-2’ போன்ற படங்கள் வெளியானபோது, ஆங்காங்கே போராட்டங்களும்,
ஓரிரு இடங்களில் கொடும்பாவி எரிப்புகளும் நிகழ்ந்தேறின. ’நீலப்படங்களில் நடிப்பது விபசாரமல்ல’ என்று சொல்லப்போக,
அதற்கும் ஜன்னி கண்டதுபோல பலர் பின்னியெடுத்தனர். அப்புறம், ’பாலியல் வன்முறை’ என்பது
‘எதிர்பாராக் கூடல்’ என்று அவர் சொன்னதாக ஒரு ட்வீட்
வெளிவர, அதை ஆதரித்தும் எதிர்த்தும் டிவிக்களில் கூப்பாடு போட்டு,
கடைசியில் அவர் பெயரில் யாரோ புரளியைக் கிளப்பியிருக்கிறார்கள் என்று
அறிந்ததும், அசடுவழிந்தபடி அமைதியானது விந்தியத்துக்கு அப்பாலிருக்கும்
விந்தை ஊடகங்கள். எல்லாவற்றிற்கு மேலாக, அவர் நடித்த ’ஒரு’ விளம்பரம் படுபரபரப்பாகி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் அதுல் அஞ்சன் என்பவர்
‘நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க சன்னி லியோனியே காரணம்’
என்று போட்டாரே ஒரு போடு!
ஆனாலும், சன்னி
லியோனி அசரவில்லை. கூகிளில் 2015-ம் ஆண்டு,
இந்தியர்களால் மிக அதிகமாக தேடப்பட்டவராக, நரேந்திர
மோடியையும், சல்மான் கானையும் பின்னுக்குத் தள்ளி, சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்து முந்திக் கொண்டிருக்கிறார். உலகிலேயே ‘அந்த மாதிரி’ப் படங்களைப்
பார்ப்பதில் மூன்றாவது இடத்திலிருக்கிற இந்தியாவில் இது நிகழ்ந்திருப்பதில் பெரிய வியப்பொன்றுமில்லை.
மேலும், ‘இதெல்லாம் மோசம்; தடை பண்ணுகிறோம்’ என்று சில மாதங்களுக்கு முன்னால்
அரசாங்கம் வீராவேசமாகக் கிளம்பி, சில காமெடிகள் செய்தபோது,
‘ஆஹா, இதெல்லாம் அடுக்குமா? மக்கள் எதைப் பார்க்க வேண்டும்; பார்க்கக் கூடாது என்று
சொல்ல நீங்கள் யார்?’ என்று கூக்குரலிட்டு, தனிமனித சுதந்திரத்துக்காகப் போராடி, இணையத்தில் ஆபாசப்படங்களுக்குத்
தட்டுப்பாடு ஏற்படாதவாறு தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள்தான் இந்த ஆங்கில ஊடகங்கள்.
ஆகவே, அவர்களது ‘பரந்த
மனப்பான்மை’யைப் பறைசாற்றுகிற வேண்டாதவேலை நமக்கு வேண்டாம்.
ஆதலால், இந்த
உலகத்தை உய்விக்க வந்த ஊடகவியலாளர்கள், ஒரு நடிகையைப் பேட்டி
காணும்போது, அவர்களது விசாலமான பார்வையும், நேர்மறை சிந்தனையும், பாலியல் சமத்துவக் கருத்துக்களும்
பஞ்சமின்றிக் காணப்படுமென்றுதானே எதிர்பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது?
ஆனால், சி.என்.என்.ஐ.பி.என் பூபேன் சௌபேயும் சரி; என்.டி.டிவியின் ஷேகர் குப்தாவும் சரி, சிந்தனையாளர்கள் என்ற
கோட்டை அவிழ்த்துப்போட்டுவிட்டு, வெறும் கோவணாண்டிகளாய்க் காட்சியளித்தனர்.
கேள்விகளில் அத்தனை வன்மம்; அத்தனை வக்கிரம்;
அத்துடன், சர்வசாதாரணமாக அவர்கள் அன்றாடம் கண்டித்துப்
பேசுகிற ‘ஆணாதிக்க மனோபாவம்’. இருவரும்
கிட்டத்தட்ட, தங்களது பேட்டிகளை ஒரே மாதிரியான கேள்விகளுடன் துவக்குகிறார்கள்.
ஷேகர் குப்தா: உங்கள்
கதையைச் சொல்லுங்கள். எல்லாரும் கேட்பதுதான். உங்கள் கதையைச் சொல்லுங்கள்.
பூபேன் சௌபே: தற்சமயம்
உங்கள் வெற்றியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கையில், உங்கள் கடந்தகாலம்
குறித்து நீங்கள் வருந்துகிற ஒரு விஷயம் உண்டென்றால் அது எது?
பூபேன் சௌபேயின் கேள்விகள், சன்னி லியோனியின் கடந்தகாலத்தை இலக்காகவே குறிவைத்துச் செலுத்தப்படுகின்றன.
இந்தியாவின் பிரபல நடிகர்களுக்கு, சன்னி லியோனியுடன்
நடிப்பதில் உள்ள தயக்கம்; அதுல் அஞ்சன் போன்ற சில அரசியல்வாதிகளின்
குற்றச்சாட்டுகள்; இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு அதிகரித்துவரும்
வரவேற்புக்கான பழி; குடும்பப் பெண்கள் பார்க்க விரும்புகிற தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் சன்னி லியோனி வருவதை விரும்பாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.
ஒருவிதத்தில், இது கண்ணியவான்கள் அவிழ்த்துவிடும்
கள்ளத்தனமான அடக்குமுறை என்பதை எப்படி இல்லையென்பது?
இயல்பாக நிகழ்ந்திருக்க வேண்டியது – இந்தக் கேள்விகளால் தாக்குண்டு, அந்த நடிகை நிலைகுலைந்து போயிருக்க வேண்டியது. ஆனால்,
அது நடக்கவில்லை. அபத்தமும் குதர்க்கமும் நிறைந்த
கேள்விகளுக்கு அமைதியாக, ஒரு புன்னகையுடன் பதிலளித்துக் கொண்டிருந்தார்
சன்னி லியோனி.
’எந்த வருத்தமுமில்லை; எல்லா மனிதர்களைப் போலவும், முடிவெடுப்பதில்
சில தவறுகள் செய்ததுண்டு. செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றதுமுண்டு.”
’திகில் கதைகள் எதுவும் சொல்வதற்கில்லை. நான் வற்புறுத்தப்படவில்லை;
பலாத்காரம் செய்யப்படவில்லை.’
’இது ஆபாசம்; இது தவறு என்றெல்லாம் நினைக்கவில்லை. அழகாயிருந்தது.’
’அரசியல்வாதிகளின் பேச்சில் இடம்பெறுவது பிடித்திருக்கிறது.
என்னைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால், எல்லாப் பேச்சிலும் என்னையும்
சேர்த்து, எல்லாப் பழியையும் என்மீதே போடலாம்.”
ஒரு கட்டத்தில், பூபேன் சௌபே மறமுகமாக, ஒரு ஊடகவியலாளராகத் தான்
தோற்றுவிட்டதை கேள்வியாக வெளிப்படுத்துகிறார்.
“உங்களோடு பேசிக் கொண்டிருப்பதே எனது ஒழுக்கத்தைக் கெடுக்கிற
காரியமோ என்று யோசிக்கிறேன்.( I’m wondering whether I’m being morally corrupted because I’m
interviewing you.)”
இந்தப் பேட்டியிலேயே மிகவும் வக்கிரமான, அக்கிரமமான பேச்சு இதுதான்.
(இந்த இடுகைக்கும் இதுவே தூண்டுகோலாக அமைந்தது). ஒருவரை மெனக்கெட்டு
பேட்டியெடுக்கப் போய், ‘உன்னோடு சகவாசம் வைத்துக்கொண்டால் நான் கெட்டுப்போய்விடுவேன்’
என்று ஒருவர் சொல்வது, அதுவும் ஒரு பெண்ணிடம் சொல்வது, எந்த ஊடக தர்மம் ஐயா?
“அப்படியா?” சன்னி லியோனி சற்றும் பதறாமல் பதிலளித்தார். “நான்
வேண்டுமானால் போய் விடுகிறேன்(Well, I can leave if you want me to!)”
ஆனால், பேட்டியிலிருந்து பாதியில் எழுந்து போகவில்லை; மைக்கை
வீசிக் கடாசவில்லை; கண்ணீர் விட்டு அனுதாபத்தை சம்பாதிக்க முற்படவில்லை. பேட்டி முழுமையும்,
சமூகத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக சுயபிரகடனம் செய்துகொண்ட ஒருவரின் தரங்கெட்ட கேள்விகளுக்கு,
சமூகத்தின் இகழ்ச்சிக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிவரும் ஒரு பெண் கண்ணியமான பதில்களை அளித்துவிட்டு
முடித்துக் கொண்டார்.
’மஸ்திஜாதே’ என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியாக அமைந்திருக்க
வேண்டிய இந்த பேட்டி, எல்லைதாண்டி, தனிமனிதக்கீறலில் போய் முடிந்தது.
”இதை நான் எதிர்பார்க்கவில்லை,” பின்னர் ஒரு இதழுக்கு அளித்த
பேட்டியில் சன்னி லியோனி ஒப்புக்கொண்டார். “பல கேள்விகளுக்கான விடையளிக்க எனக்குத்
தெரியவில்லை. ஆனால், எழுந்து செல்ல விரும்பவில்லை. அந்தப் பேட்டியின்போது உணர்ந்ததுபோல,
எப்போதும் நான் தனிமையை உணர்ந்ததில்லை. துணைக்கு யாருமில்லாமல், இக்கட்டில் சிக்கியிருப்பதுபோல
எப்போதும் கவலைப்பட்டதில்லை.”
ஒரு பேட்டி எவ்வாறெல்லாம் நடத்தப்படக் கூடாது என்பதற்கு, ஊடகவியல்
படிப்பில் இந்தப் பேட்டியை ஒரு பாடமாகக் கூட வைக்கலாம். சற்றே, இயல்புக்கு மாறான இறந்தகாலத்திலிருந்து
வருகிறவர்களை, அருவருப்புடன் அணுகுகிற உயர்வு மனப்பான்மைக்கு இந்தப் பேட்டி ஒரு சிறந்த
ஆவணம். பேட்டி காண்கிறவர் தான் விரும்புவதை மட்டும் வெளிக்கொணர்வதற்கென்று கையாளுகிற
இந்த மூர்க்கத்தனம் அநாகரீகத்தின் உச்சகட்டம்.
ஷேகர் குப்தாவும், பூபேன் சௌபேயும் ஒரு விஷயத்தை சவுகரியமாக
மறந்ததுபோல பாசாங்கு செய்திருக்கிறார்கள். அது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல தொழில்கள்,
பிற நாடுகளில் அரசின் அனுமதி, அங்கீகாரத்துடன் ஜாம் ஜாமென்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
என்பதை. தான் பிறந்த நாட்டில், தான் செய்த சட்டபூர்வமான தொழிலை, இன்னொரு நாட்டிற்கு
வந்து ஏன் ஒருவர் குறைவாகப் பேச வேண்டும்? இந்த அடிப்படை முரணைக் கூட அறியாமலா, குளிரூட்டப்பட்ட
செய்தியரங்கங்களிலிருந்து கொண்டு தினமும் குய்யோ முறையோவென்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
முடிவில், இந்தப் பேட்டிகளால் இவர்கள் சாதித்ததென்ன?
பொதுப்படையான பார்வை சாமானியர்களுக்கு இருக்கும் அளவிலேதான்
ஊடகவியலாளர்களுக்கும் இருக்கின்றது. இவர்கள் அணிந்திருக்கிற கோட்டுசூட்டும், இவர்கள்
பேசுகிற சரளமான ஆங்கிலமும், பிரபலங்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து கேள்விகேட்க உதவுகிற
இவர்களது படிப்பும் ஒரு சாமானியனுக்கு வாய்த்தால், நிச்சயம் இவர்களைக் காட்டிலும் கண்ணியத்தை
வெளிப்படுத்துவான் என்றுதான் எண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளிடமும், தொழிலதிபர்களிடமும், மதகுருமார்களிடமும்
கேட்க முடியாத கேள்விகளை, திரைப்படத்துறையச் சார்ந்தவர்களிடம், குறிப்பாக நடிகையரிடம்
கேட்டு, பரபரப்பைக் கூறுபோட்டு விற்கிற இந்தப் பிழைப்பைவிடவா, சன்னி லியோனின் கடந்தகாலம்
கேவலமானது? நிச்சயம் இல்லை.
இவர்களின் சாயத்தை வெளுக்கச் செய்ய, இன்னொரு வாய்ப்பளித்த காரணத்துக்காகவேனும்,
‘மஸ்திஜாதே’ வெளியானால், ஒரு படைதிரட்டிக்கொண்டு போய்ப் பார்த்துவிட்டு வரலாம் போலிருக்கிறது.
ஐயா,
ReplyDelete//Television Rating Point (TRP) எனப்படுவது, சில/பல ஆயிரம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒரு சாதனத்தைப் பொருத்தி, எந்தெந்த நிகழ்ச்சிகள் எத்தனை பிரபலமாயிருக்கின்றன என்பனைக் கண்டறிந்து சொல்கிற ஒரு மின்னணு உட்டாலக்கிடி. அவ்வப்போது, சில ஊடகங்கள் / கல்லூரிகள் (பொழுதுபோகாமல்), அடுத்த ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்று வெளியிடுகிற அபத்தங்களைப் போலவே, இதுவும் இன்னொரு நகைப்புக்குரிய சங்கதி. பிச்சைக்காரனுக்கு ‘குபேரன்’ என்ற பெயரிருப்பதுபோல, இந்த சாதனத்துக்கு ‘பீப்பிள்ஸ் மீட்டர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘நான் தான் டாப்பு; மீதியெல்லாம் டூப்பு’ என்று ஏறக்குறைய எல்லா ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அடித்துக் கொள்கிற அவலத்தைப் பார்க்கிறவர்களுக்கு, இந்த ‘டி.ஆர்.பி’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது புரிந்திருக்கும்//
மேலே இருப்பதெல்லாம் பொதுப்படையான, தவறான கருத்துகள். தயவு செய்து தகவல் அறிந்து, சரி பார்த்து பதியவும்.
நன்றி.
சரி தான்... இதை விட கேவலம் எதுவும் இல்லை தான்...
ReplyDeleteWow.. I had the same feeling when I saw the interview. Sunny proved that she is not just a glam doll, but has dignity as any other woman has..
ReplyDeleteAwesome writeup..!!
நல்ல கட்டுரை. திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஊடக யாவாரிகள் சன்னி லியோனை அழைப்பதே அவருக்கு இருக்கும் க்ரேஸினால்தான். கடந்த காலத்தைப் பற்றிக் கேட்டால் அவர் உருகி அழவைத்துப் டி ஆர்பி எகிற வைத்துப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கும் என்று முயற்சி செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இங்கே ஒரு நடிகைக்கே போர்ன் ஸ்டாருக்கு உரிய மரியாதைதான் இருக்கிறது. இந்த நிலையில் போர்ன்ஸ்டாரே கிடைத்தால் சும்மாவா விடுவார்கள். தம்முடைய அழுக்கை எல்லாம் நோன்டிக் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அவருடைய கடந்த காலத்தைக் கேட்டுக் கொண்டிருப்பார்களோ.
ReplyDelete//“அப்படியா?” சன்னி லியோனி சற்றும் பதறாமல் பதிலளித்தார். “நான் வேண்டுமானால் போய் விடுகிறேன்(Well, I can leave if you want me to!)”// அப்படிப் போயிருந்தாலோ இவங்களுக்குதான் கடை காத்து வாங்குமே.
சன்னி லியோன் கடந்தகாலத்தில் நீலப்படங்களில் நடிப்பது மட்டும் அல்லது சிலவற்றைத் தையாரித்தும் வந்தார். எப்போது தனக்கு அங்கே சந்தை குறைவதுபோல் இருந்ததோ, அதே சமயம் இந்தி படங்களில் சில சந்தர்ப்பங்கள் எழவே, அப்படியே இந்தியாவில் mainstream திரைப்படங்களுக்கு மாறினார். அவர் ஒரு நல்ல வணிகர். ஆதலால், இந்த அறிவு முதிர்ச்சி அவரிடம் எதிர்பார்க்க வேண்டியதே.
ReplyDeleteஇந்தியாவில் மட்டுமல்ல, hollywood இலும் நீலப்படங்களில் நடித்து விட்டு mainstream படங்களில் நடிக்க வருபவர்களுக்கு இதே/இதைவிட பல சிக்கல்கள் உள்ளன. வெளிநாட்டு ஊடகங்களைக் காட்டிலும் நம் நாட்டு ஊடகங்கள் எவ்வளவோ தேவலை. அனால் வட இந்தியாவில் கொஞ்சம் மோசம். அவங்க பெரும்பாலும் மேற்கு உலக ஊடகங்களில் இருந்து ஊக்கம் கொள்வதே காரணம் என நினைக்கிறேன்.
சமீபத்தில் நம்ம ஊடகம் ஒன்று ,ஷகிலாவை பேட்டி எடுத்து ஒளிபரப்பி ,ஜனநாயகக் கடமையை செய்ததே :)
ReplyDelete