Friday, January 1, 2016

கிட்டாமணியும் எட்டாம் வீடும்

கிட்டாமணியும் எட்டாம் வீடும்

காசுகொடுத்து வாங்கிய தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழிப்பது கிட்டாமணிக்குக் கஷ்டமாக இருந்தாலும், அதைச் செய்யாவிட்டால், நடப்பது என்ன மாதமென்பதை சட்டென்று கண்டுபிடிப்பது கஷ்டம் என்பதால் வேறுவழியின்றிக் கிழித்தார். அவரது ராசிக்கு அன்றுசங்கடம்என்று பலன் போட்டிருந்தது.
பாலாமணி, இன்னிக்குக் காலையிலே டிபன் உப்புமாவா?” என்று திகிலுடன் கேட்டார்.
இல்லையே, உங்களுக்குப் பிடிச்ச்ச்..ச பூரி!” என்று சமையலறையிலிருந்து பாலாமணி குரல்கொடுக்கவும், ‘தாத்கால் டிக்கெட்கிடைத்த தாத்தாவைப் போல கிட்டாமணிக்கு நிம்மதி ஏற்பட்டது. ‘ச்சே! இந்த ராசிபலனெல்லாம் சுத்த ஹம்பக்!’ என்று மனதுக்குள் கூறிக்கொண்டார். டிபன் பூரியா? ஆஹா!!
வெரிகுட்!” தேன்குடித்த தேவாங்குபோல கிட்டாமணியின் குரலில் உற்சாகம் தொற்றிக்கொண்டது. ”தொட்டுக்க சால்னாதானே?”
சால்னாவா? வெங்காயம் காலணாவுக்கா கிடைக்குது?,” பாயாசமாய் இனித்த பாலாமணியின் குரல்  திடீரென்று பாய்ஸனாகக் கசந்தது. நேத்து செஞ்சு மீந்துபோன தேங்காய்ச்சட்டினிதான்.”
பூரியும் தேங்காய் சட்னியுமா? ஹன்சிகாவுக்கு ஜோடி கஞ்சா கருப்பா?’ என்று மனம்வெதும்பிய கிட்டாமணிக்கு அன்றைய ராசிபலன் சரியாகத்தான் இருக்கும்போலத் தோன்றியது. அவர் நினைப்பது சத்தியம் என்பதுபோல அழைப்புமணி ஒலிக்க, கதவைத் திறந்த கிட்டாமணியின் முகம் கொதிக்கும் எண்ணையில் போட்ட கொத்தவரங்காய் வத்தல் போலக் கருகிச் சுருங்கியது.
குட்மார்னிங் கிட்டாமணி!’ என்று சிரித்தவாறு உள்ளே நுழைந்தார் ஜோதிடசேஷ்டவிசிஷ்டகுலசிரேஷ்டாருடசிரோண்மணி ஆதிமூலம்.
குட்மார்னிங்கா? அது இனிமே நாளைக்குத்தான்,’ என்று மனதுக்குள் பொருமினாலும், மோப்பக்குழையும் அனிச்சம்போல, முகந்திரிந்து நோக்கினால் வந்த ஆதிமூலத்தின் முகம் குருணைக்கஞ்சிபோலக் குழைந்துவிடுமே என்று யோசித்தார். எனவே, காலையில் கோல்கேட்டினால் துலக்கிய வாயை டோல்கேட் போலத் திறந்து சிரித்து வைத்தார் கிட்டாமணி.
வாங்க ஆதிமூலம்! என்ன அத்திபூத்த மாதிரி?”
அத்திபூத்த மாதிரியா?” சிரித்தபடியே உட்கார்ந்தார் ஆதிமூலம். ”போனவாரம்கூட நான் வந்தேனே?”
அதனாலென்ன? போனவாரமும் நானும் இதைத்தானே கேட்டேன்?” என்று அசடுவழிந்தவாறு உட்கார்ந்தார் கிட்டாமணியும். “பாலாமணி, யாரு வந்திருக்கார் பாரு. நம்ம ஆதிமூலம்.”
ஜோசியர் சாரா?” குல்ஃபிவண்டியின் சத்தம்கேட்ட குழந்தைபோல அடுப்படியிலிருந்து ஓடிவந்தாள் பாலாமணி. “இப்பல்லாம் உங்க புரோகிராம் வர்ற நேரத்துக்கு மறக்காம டிவி போட்டுருவோம்.”
ஆஹா! ஜோசியத்துல அவ்வளவு ஆர்வமா?” வியப்பில் ஆதிமூலத்தின் கண்கள் விழுப்புரம் வரைக்கும் விரிந்தன.
இல்லை சார், எங்க வீட்டுக் குக்கரிலே வால்வு ரிப்பேர். அதனாலே, மேஷராசிக்கு நீங்க பலன் சொல்லும்போது குக்கரை அடுப்புலே வைச்சுடுவேன்; சரியா கும்பராசி வரும்போது அடுப்பை அணைச்சிட்டா சாதம் பிரமாதமா வந்திரும். செம டைமிங் சார்.” என்று காலிஃப்ளவர் போல மலர்ந்தமுகத்துடன் பாலாமணி சொன்னதைக்கேட்டதும் ஆதிமூலம் பாதிமூலமாகிப் போனார்.
பாலாமணி,” கிட்டாமணி பேச்சை மாற்றினார். “ஆதிமூலம்சாருக்கு ஒரு காப்பி, சர்க்கரை போடாம…”
போடறேன்!” என்று திரும்பினாள் பாலாமணி.
என்ன நீ? ’சர்க்கரை போடாமன்னு நான் சொல்றேன். நீ போடறேன்னு சொல்றே?”
நான் காப்பி போடறேன்னு சொன்னேன்; சர்க்கரை போடறேன்னு சொல்லலை
ஓஹோ, வேண்ணா அந்த சர்க்கரையைப் போட்டு எனக்கு ஒரு காப்பி கொடுத்திடேன்.”
இதுக்கு எனக்கும் ஒரு காப்பி வேணும்னு நேரடியாவே கேட்கலாமில்லே?”
முணுமுணுத்தபடியே பாலாமணி அடுப்படியை நோக்கி நகர, ஆதிமூலமும் கிட்டாமணியும் ஒருவரையொருவர் பார்த்து வழக்கம்போல அசட்டுச் சிரிப்புச் சிரித்தனர்.
ஏன் கிட்டாமணி சார்? உங்க கம்பெனியிலே இந்த வருஷம் காலண்டர் போடலியா?”
போன மாசம் சம்பளமே போடலை!” அலுத்துக் கொண்டார் கிட்டாமணி. “பிரச்சினையா இருக்கு.”
பிரச்சினை ஆபீசுலே இல்லை; உங்க வீட்டுல இருக்கு.” என்ற ஆதிமூலத்தின் தொடையில் அவசரமாகத் தட்டினார் கிட்டாமணி.
சார்,  நீங்கபாட்டுக்கு எதையாவது சொல்லி, அது என் சம்சாரம் காதுல விழுந்தா காப்பியிலே வெளக்கெண்ணையைக் கலந்திடுவா சார்.”
ஐயையோ, உங்க வீட்டுல வெளக்கெண்ணையா?” என்ற ஆதிமூலம் சட்டென்று சுதாரித்துக்கொண்டு பேசினார். “நான் சொல்றது வேற விஷயம். உங்க வீட்டு நம்பர்தான் பிரச்சினை. கூட்டினா என்ன வரும்னு தெரியுமா?”
வீட்டைக் கூட்டினா குப்பைதான் வரும்,” என்றார் கிட்டாமணி.
நான் சொன்னது வீட்டு நம்பரைப் பத்தி. அதைக்கூட்டினா எட்டு வருதில்லே? அதுதான் பிரச்சினை.”
எட்டுவந்தா என்ன?”
நியூமராலஜி தெரியாதா? அதை விடுங்க. உங்க ஜாதகத்தை நான் தரோவா ஸ்டடி பண்ணினேன். ங்களுக்கு எட்டாவது வீட்டுலதான் பிரச்சினை.”
அதைப் பத்தி ஏழு வீடு வாங்கினதுக்கப்புறம் கவலைப்படலாமே?”
கிட்டாமணி சார், இந்த ஃபேஸ்புக் யுகத்துல ஜோசியத்தைப் பத்திக் கொஞ்சம்கூட தெரிஞ்சுக்காம பத்தாம்பசலியா இருக்கீங்களே. உங்க ஜாதகத்துலே இருக்கிற எட்டாம் வீட்டோட அதிபதி உமக்கு ரொம்பக் கஷ்டம் கொடுத்திட்டிருக்கார்.”
அப்படியா? ஒரு நோட்டீஸ் கொடுத்து அவரை வீட்டைக் காலிபண்ணச் சொல்ல முடியாதா? எனக்குத் தெரிஞ்ச சில அட்வகேட்ஸ் வேலைவெட்டியில்லாம காங்கிரஸ்லே சேர்றதாப் பேசிட்டிருக்காங்க. பேசிப்பார்க்கட்டுமா?”
ஜோசியத்தைப் பத்தித் தெரியாம விளையாடாதீங்க,” உறுமினார் ஆதிமூலம். “சென்னையிலே இப்படி மழைபெய்யும்னு முதல்லே சொன்னது நான் தான். இப்ப பெஞ்சுதே மழை, அதுல எங்க ஏரியாவுலே எல்லார் வீட்டுலேயும் தண்ணி வந்திச்சு; ஆனா, என் வீட்டுலே தண்ணியே வர்லே தெரியுமா?”
ஏன்? நீங்க மாடிவீட்டுலே தங்கியிருக்கீங்களா?”
இல்லை; மாமனார்வீட்டுலே தங்கியிருக்கேன். அவர் வீட்டுலதான் தண்ணி வந்திச்சு. நல்லவேளை, எனக்குன்னு வீடே இல்லை.”
பேசாமல் பாலாமணியிடம் காப்பியில் விளக்கெண்ணை கலக்குமாறு தானே சொல்லிவிடலாமா என்று கிட்டாமணிக்குத் தோன்றியது. இருந்தாலும், பொறுத்துக் கொண்டார்.
உங்க ஜோசியம், வானிலை அறிக்கை, ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு எல்லாம் ஒண்ணுதான். நடக்கும்னு சொல்லுவீங்க, நடக்காது. வரும்னு சொல்லுவீங்க, வராது.”
கிட்டாமணி சார், காப்பி வருமா வரதா?”
சாரி சார்,” என்ற கிட்டாமணி, திரும்பி சமையலறையை நோக்கிக் குரல்கொடுத்தார். “பாலாமணி, காப்பி போட்டாச்சா? நம்ம ஓசியர் சார்ஸாரி, ஜோசியர் சார் காத்திட்டிருக்காரு.”
பால்குக்கர் விசிலடிக்க மாட்டேங்குது!” பாலாமணி குரல்கொடுத்தாள்.
ஆதிமூலம் சார், பால்குக்கர் விசிலடிக்க மாட்டேங்குதாம். ரிஷபராசிக்கு ஒரு பலன் சொல்லுங்களேன். நீங்க ராசிபலன் சொன்னா பிரஷர் குக்கரே வேலை செய்யுது; பால்குக்கர் எம்மாத்திரம்?”
கிண்டலா சார்? எட்டாம் வீட்டைப் பத்திப் புரியாமப் பேசறீங்க. எட்டுல சனிவந்து உட்கார்ந்தா சட்னிதான் தெரியுமா?”
அட, சட்னி மேட்டரைக் கரெக்டா சொல்றீங்களே!” வியந்தார் கிட்டாமணி. “அப்ப சனி எங்கே உட்கார்ந்தா சால்னா கிடைக்கும்?”
சரவணபவன்லே உட்கார்ந்தா கிடைக்கும்,” எரிந்து விழுந்தார் ஆதிமூலம்.
கோவிச்சுக்காதீங்க சார், எனக்கு ஜோசியத்தைப் பத்தி ஒண்ணும் தெரியாது சார். கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க.”
 அப்படி வாங்க வழிக்கு,” ஆதிமூலம் மீண்டும் உற்சாகமானார். “உங்க ஜாதகத்துல எட்டாம் வீட்டோட அதிபதி லக்னத்துல இருக்காரு. அதனாலே, ஆக்ஸிடெண்ட், பணக்கஷ்டம், மன உளைச்சல், அவமானம் எல்லாம் ஒண்ணுக்குப் பின்னாலே ஒண்ணா வந்திட்டே இருக்கும்.”
ஐயோ பாவம், யாரு பெத்த பிள்ளையோ அவர்!”
அவருக்கில்லை சார்; உங்களுக்கு அதெல்லாம் நடக்கும்,” கூவினார் ஆதிமூலம். ”அது மட்டுமில்லை. வீட்டுலேயும் வெளியிலேயும் ஒரு பய உங்களை மதிக்க மாட்டான்.”
அதென்னமோ கரெக்டுதான்; இன்னும் காப்பியே வந்தபாடில்லையே!”
பொறுமையாக் கேளுங்க!” தொடர்ந்தார் ஆதிமூலம். “உங்க ஜாதகத்துலே ரெண்டாம் வீட்டுலே இருந்த புதன், அஞ்சாம் இடத்துலே இருக்கிற சுக்கிரன் வீட்டுக்குப் போயி, நாலாம் வீட்டுல இருக்கிற செவ்வாயைப் பார்க்கிறான். நாலாம் வீட்டுலே இருந்த சுக்கிரன் மூணாம் இடத்துக்குப் போயி எட்டாம் இடத்துலே இருக்கிற சனியைப் பார்க்கிறான்.”
ஓஹோ! அவங்களும் மனிசங்க மாதிரியே அவங்க வீட்டை விட்டுட்டு அடுத்தவன் வீட்டுலே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டிருக்காங்க போலிருக்கு.”
பீ சீரியஸ்! எட்டாம் அதிபதி லக்னத்துக்கு ரெண்டுல வந்து சேர்ந்தா, என்னாகும் தெரியுமா?”
எட்டும் ரெண்டும் பத்து!”
ஐயோ ஐயோ! தினமும் சம்சாரத்தோட சண்டை நடக்கும்.”
அஸ்குபுஸ்கு! அவ சண்டைபோட்டாலும் நான் போட மாட்டேனே! என்னை என்ன வெட்கம் மானம் சுடு சொரணை இருக்கிறவன்னு நினைச்சீங்களா?”
காப்பி!” என்று பாலாமணி வரவும், கிட்டாமணியும் ஆதிமூலமும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். பாலாமணி அங்கிருந்து நகர்ந்ததும், ஆதிமூலம் காப்பியை ஒரு மடக்கு குடித்துவிட்டு, தொடர்ந்து பேசினார்.
காப்பி கொஞ்சம் லைட்டா இருக்கே?”
வெயிட்டா இருந்தாக் குடிச்சப்புறம் நடக்க முடியாதே!”

                .கே! இப்ப எட்டாம் அதிபதி லக்னத்துக்கு மூணுக்கு வந்தா….”
      ஆதிமூலம் சார்,” இடைமறித்தார் கிட்டாமணி. “என் ஜாதகத்துலே ஏதோ கோளாறுன்னு நிறைய பேரு சொல்லிட்டாங்க. எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?”
      நிறைய பேரு சொல்லிட்டாங்களா? அதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணினீங்களா?”
      பரிகாரம் பண்ணலை. சொன்னவங்களுக்கு பலகாரம் பண்ணிக்கொடுத்து  அனுப்பினேன்.”
      தப்புப்பண்ணிட்டீங்களே சார்!”
      என்ன தப்பு? பலகாரம் பாமாயில்லே பண்ணினதா?”
      இல்லை சார்! தோஷ நிவர்த்திக்கு ஏதாவது பண்ணியிருக்கணும்.  நாளைக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் சார். ஜாக்கிரதையா இருக்கணும். வாயே திறக்கக்கூடாது.”
      அப்புறம் எப்படிப் பல்விளக்குறது?”
      சார், பேசவே கூடாதுன்னு சொன்னேன்.”
      இவ்வளவுதானா? பேசணும்னு சொன்னாத்தான் கஷ்டம்,” என்ற கிட்டாமணி, “ஏன் ஆதிமூலம் சார்? இன்னிக்கு உங்க ராசிக்கு எப்படியிருக்கு பலன்?”
      அபாரமாயிருக்கு!” ஆதிமூலம் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்புபோல, சுவிட்சு போடாமலே பிரகாசமானது. “சுக்ரன் புகுந்து விளையாடறான். சுபகிரஹங்கள் எல்லாம் கைகோர்த்திண்டிருக்காங்க. எட்டரை மணிக்குமேலே எனக்கு ஒரு சுபசெய்தி வரப்போகுது. ஐயாம் வெயிட்டிங்.”
      அட, மணி எட்டு முப்பத்தஞ்சு ஆச்சு சார்!” என்று கிட்டாமணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆதிமூலத்தின் சாம்ஸங் கேலக்ஸிஆலுமா டோலுமா ஐஸாலக்கிடி மாலுமாஎன்று அலறியது.
      வந்திருச்சு பாருங்க! டிவி ஸ்டூடியோவிலேருந்துதான்.”
      ஹலோ!” பேச ஆரம்பித்த ஆதிமூலம் மெல்ல மெல்ல பீதிமூலமானார். அவரது முகம் படித்துறையில் அடித்துத் தோய்த்த பனியன்போல வெளுத்தது.
      என்ன சார் ஆச்சு?” கிட்டாமணி அக்கறையுடன் வினவினார். “எனி ப்ராப்ளம்?”
      என்னோட புரோகிராமுக்கு டி.ஆர்.பி.ரேட்டிங் குறைஞ்சிடுச்சாம் சார். அதுனாலே ஸ்டூடியோவுக்கு வந்து மீதிப்பணத்தை வாங்கிட்டு, அங்கே இருக்கிற என்னோட அங்கவஸ்திரம், பட்டுச்சட்டை எல்லாத்தையும் எடுத்திட்டுக் கிளம்பச் சொல்லிட்டாங்க.”
      ஐயோ பாவமே!”
      நான் கிளம்பட்டுமா?” ஆதிமூலம் கிளம்பிச்சென்றார்.
      சிறிது நேரம் கழித்து….
      ஜோசியர் கிளம்பிட்டாரா?” என்று கேட்டபடி வந்தாள் பாலாமணி.
      பாவம், இனிமே அவரை டிவியிலே வந்து ராசிபலன் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாங்களாம்.”
      ஐயையோ!” பதறினாள் பாலாமணி. “அந்த மனுசனை நம்பித்தானே நான் இன்னிக்கு இட்லிக்கு ஊறப்போடலாம்னு இருந்தேன். இத பாருங்க, ஆபீசுக்கு ஒரு நாள் லீவுபோட்டுட்டு முதல்லே குக்கரை ரிப்பேர் பண்ணிட்டு வாங்க. இல்லே, புதுசா ஒரு குக்கராவது வாங்கிட்டு வாங்க.”
      படபடவென்று பேசிவிட்டு உள்ளே விரைந்தாள் பாலாமணி. கிட்டாமணி மீண்டும் தினசரிக் காலண்டரை நெருங்கிப் பார்த்தார்.
      அவரது ராசிக்குசங்கடம்என்று பலன் போட்டிருந்தது
************
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்







 

15 comments:

  1. புத்தாண்டு சிரிப்பு பதிவு... அதாவது
    புத்தாண்டு சிறப்புப் பதிவு!

    ReplyDelete

  2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. நல்லா சிரிச்சேன்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிரிப்பு தாங்கல!புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

    ReplyDelete
  5. uvamai uruvagamellam pongi vazhiyudhu!! sirithu rasithen! Wish u a very happy new year!

    ReplyDelete
  6. அருமை. கிட்டாமணி புத்தாண்டை நகைச்சுவையோடு தொடங்கி வைத்து விட்டார். செட்டைக்கரனின் சேட்டைகள் ஆண்டு முழுதும் தொடரட்டும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. விழுந்து விழுந்து சிரித்தாள் அடிப்பட்டுடுமேன்னு விழாமலேயே சிரித்தேன்.

    த ம +1

    ReplyDelete
  9. சிரித்ததில் ல் ள் ஆகி விட்டது. ப்ளீஸ் கண்டுக்காதீங்க!

    ReplyDelete
  10. டைமிங் நகைச்சுவையில் அசத்துகிறீர்கள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஆண்டு முழுவதும் தொடரட்டும் உங்களின் நகைச்சுவை வெல்லம்,சுவைக்கக் காத்திருக்கிறேன் :)

    ReplyDelete
  12. வாரம் ஒரு தடவையாவது வாங்க சேட்டை, நீங்க இருந்தாதான் ப்ளாக் வர்றதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். நீங்க இல்லைன்னா ப்ளாக் தண்ணி ஓடாத அடையாறு மேரிக்குதான் இருக்கும்.

    ReplyDelete

  13. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்
    @இராஜராஜேஸ்வரி
    @ezhil
    @புலவர் இராமாநுசம்
    @middleclassmadhavi
    @டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 1, 2016 at 10:59 PM
    @Avargal Unmaigal
    @ஸ்ரீராம்
    @mohan baroda said...
    @'தளிர்’ சுரேஷ்
    @Bagawanjee KA
    @Manickam sattanathan said...

    அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆண்டு மீண்டும் நிறைய pathivugaL எழுத வேண்டும் என்பதும், பின்னூட்டம் இடுகிற நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கவேணும் பதில் எழுத வேண்டும் என்பதும் எனது புத்தாண்டு சபதங்கள். :-))))

    பார்க்கலாம். மீண்டும் நன்றிகள் பலப்பல...

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சிரிச்சு மாளலை. ஒவ்வொரு வாக்கியத்திலும் சிரிப்பு நெடி அடிக்கும்படி எழுதியிருக்கீங்க. நல்லா சிந்திச்சு அனுபவிச்சு எழுதினாத்தான் இவ்வளவு நன்றாக இருக்கும். பாராட்டுக்கள்.

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!