Friday, August 7, 2015

க்வார்ட்டர் மதுவிலக்கு+மிக்சிங் அரசியல்+சைட்-டிஷ் காமெடி


தமிழகம் முழுவதும் மதுவிலக்கைக் கோரி பல போராட்டங்கள் நடந்து வருகையில், இதில் சம்பந்தப்பட்ட 'குடிமகன்கள்' இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து மக்களுக்குச் சொல்ல எந்த ஊடகமும் முன்வராதது வருந்தத்தக்கது. ஆகவே, 'குடிமக்கள் முன்னேற்றக் கழகம்' கட்சியின் தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்தித்து மேலதிக விபரங்களை நமது சிறப்பு நிருபர் கீழ்வருமாறு தந்திருக்கிறார்.

(கு.மு..வைப் பற்றி அறியாதவர்களின் நலன் கருதி கீழ்க்காணும் வரலாற்றுப் பதிவுகள் தரப்பட்டுள்ளன. வெட்டியாக ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள் இந்த இழைகளைப் படித்து அவரவர் மது அறிவை, மன்னிக்கவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். விருப்பமில்லாதவர்கள் நேரடியாக இந்தப் பதிவுக்கே சென்றும் தங்கள் நேரத்தை விரயம் செய்யலாம். )




இனி...

கு.மு. அலுவலகத்தில் நமது சிறப்பு நிருபர்

கு.மு.. அலுவலகம் காந்தி ஜெயந்திக்குப் பூட்டிய டாஸ்மாக் கடைபோலக் களையிழந்து காணப்பட்டது. சுவற்றில் கட்சியின் முன்னாள் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமியின் புகைப்படம் மாலையுடன் காட்சியளிக்க, கட்சியின் தொண்டர் ஒருவர் மற்ற தொண்டர்களுக்கு ஆளொக்கொரு எவர்சில்வர் ஸ்பூன் விஸ்கியை தீர்த்தம் போல வழங்கிக் கொண்டிருந்தார். தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி ஆறுமணி சீரியலில் வருகிற அப்பாவைப் போல சோகமே உருவாக அமர்ந்திருந்தார். அவருக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு, பகார்டி பக்கிரிசாமி எப்படி இறந்தார் என்று வினவினோம்.

"அதை ஏன் கேட்கறீங்க?" 'பாகுபலி' பட விமர்சனம் எழுதாத பதிவரைப் போல சோகமாக கேட்டார் கி.கி.சாமி. "ஊர் முழுக்க மது எதிர்ப்புப் போராட்டம் நடக்குதா, எங்கே அரசாங்கம் கடையை மூடிடுவாங்களோன்னு கவலையிலே கன்னாபின்னான்னு குடிச்சுத் தீர்த்திட்டாரு.."

"அடடா, நீங்க சொல்லியிருக்கக் கூடாதா?"

"நீங்க வேற; நான் சொன்னதால தான் அவரு செத்தாரு," பெருமூச்செரிந்தர் கி.கி.சாமி. "ஓவராக் குடிச்சிருந்தாரா, ஜாக்கிரதையா ரயில்லே ஏறி பத்திரமா வீட்டுக்குப் போங்கன்னு சொன்னேன். அவர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு ரயில் மேலே ஏறி ட்ராவல் பண்ணியிருக்காரு.கீழே விழுந்து ஆள் அவுட்!"

"அடடா! இப்படியெல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுதான் எல்லாரும் முழு மதுவிலக்கு வேணும்னு போராடறாங்க!"

"கரெக்ட்! நாங்க கூட முழு மதுவிலக்கு வேணும்னு போராடப் போறோம்," என்று கி.கி.சாமி சொன்னதும், அப்ளை செய்த அன்றே ஆதார் கார்டு கிடைத்ததுபோல நமது நிருபர் அதிர்ந்தார்.

"என்ன சார் சொல்றீங்க? நம்பவே முடியலே??" அதிர்ச்சியில் சிலருக்கு அவர்கள் குரல் கிணற்றிலிருந்து கேட்பது போலிருக்குமென்றால், நமது நிருபருக்கு கிணத்துக்கடவிலிருந்து கேட்பது போலிருந்தது. "நாள்பூரா தண்ணியடிக்கிறதுதான் கொள்கைன்னு கட்சி ஆரம்பிச்சிட்டு, இப்போ முழு மதுவிலக்கு வேணும்னா சொல்றீங்க? செய்யறது ஒண்ணு, சொல்றது ஒண்ணா இருக்கே?!"

"மத்தக் கட்சியெல்லாம் ரொம்ப ஒழுங்காக்கும்?," மடக்கினார் கி.கி.சாமி. "தமிழ்நாட்டுல முழுமதுவிலக்கு வந்தே ஆகணும்."

"என்ன சார் அநியாயம்? க்வார்ட்டருக்கு ஊறுகாய் பாக்கெட் இலவசமாத் தரணும்னு போராடின நீங்களா இப்படி...?"

"அந்தக் கோரிக்கையிலே என்ன தப்பு?" கி.கி.சாமி உறுமினார். "நாங்க கொடுக்கிற பணத்துலதான் அரசாங்கம் உங்களுக்கெல்லாம் கிரைண்டர், மிக்சி எல்லாம் கொடுக்குது. எங்க பணத்துல நீங்க தினம் இட்டிலி, சட்டினியே சாப்பிடலாம்; உங்க பணத்துல நாங்க ஒரு ஊறுகாய் பாக்கெட்டை நக்கக் கூடாதா?"

"சரிதான்; இப்பவாச்சும் இந்த முடிவுக்கு வந்தீங்களே, கொஞ்ச நாளா பொண்ணுங்ககூட குடிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு எல்லாரும் கொதிச்சுப் போயிருந்தாங்க தெரியுமா?"

"அவங்கல்லாம் சுத்த ஆணாதிக்கவாதிங்க," என்று இரைந்தார் கி.கி.சாமி. "காந்தி, அம்பேத்கார், பெரியாராலே கொண்டுவர முடியாத ஆண்பெண் சமத்துவத்தை டாஸ்மாக் கொண்டு வந்திச்சா இல்லையா? அதை ஏன் பாராட்ட மாட்டேங்குறீங்க?"

"ஐயோ குழப்பறீங்களே!" சப்-டைட்டில் இல்லாத சைனா படத்தைப் பார்ப்பதுபோல பரிதவித்தார் நிருபர். "முழுமதுவிலக்கு வேணும்னும் சொல்றீங்க; பொண்ணுங்க குடிச்சாத் தப்பில்லேன்னும் சொல்றீங்க. இப்படி காலேஜ், பள்ளிக்கூடம் ஏன், கோவில் பக்கத்துலே எல்லாம் கடை திறந்தது தப்புன்னு ஒத்துக்கறீங்களா..?"

"ஒரு தப்பும் இல்லை. ஔவையார் என்ன சொல்லியிருக்காங்க? கோவில் இல்லாத ஊரில் 'குடி' இருக்க வேண்டாம்னு சொன்னாங்களா இல்லையா? அப்போ கோவில் பக்கத்துல கடை இருந்தா என்ன தப்பு?"

"இப்போ கொஞ்ச முன்னாடி முழு மதுவிலக்கு வேணும்னு சொன்னீங்க?"

"இப்பவும் சொல்றேன்; முழு மதுவிலக்கு வேணும்," கி.கி.சாமி ஹிஹி சாமியாகிச் சிரித்தார்.

"சரி சார், குடிக்கிறவங்க அவங்க சம்சாரத்தோட தாலியைக் கூட வித்து குடிக்கிறாங்கன்னு ஒத்துக்கறீங்களா இல்லையா?"

"அப்படி நாங்க குடிச்சதுனாலதான், வீட்டு பீரோவுலையும் பேங் லாக்கரிலேயும் இருந்த தங்கமெல்லாம் வெளியே வந்து தங்கம் விலை இப்படிக் கிடுகிடுன்னு கீழே இறங்கியிருக்கு? மைக்ரோ எகனாமிக்ஸ், மேக்ரோ எகனாமிக்ஸ்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இது 'மப்பு'ரோ எகனாமிக்ஸ். "

"தலை சுத்துது. சரி, 2016 தேர்தல்லே உங்க கு.மு.க போட்டியிடுமா? யாரோட கூட்டணி?"

"நாங்க ஏன் கூட்டணி வைக்கணும்? தமிழ்நாட்டுல இன்னி தேதில அதிக உறுப்பினர் எங்க கட்சியில்தான் இருக்காங்க. நாங்க தனிச்சுப் போட்டியிடுவோம். ஆட்சி அமைப்போம்."

"யாரு முதலமைச்சர்?"

"அது தேர்தல் நேரத்துல செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, அந்த நேரத்துலே யாரு உசிரோட இருக்காங்களோ அவங்களோட கலந்தாலோசிச்சு முடிவெடுப்போம். நாங்கல்லாம் ஜனநாயகத்துல நம்பிக்கை உள்ளவங்களாக்கும்."

"சரி, மதுவிலக்கை அமல் படுத்தியே ஆகணும்னு போராடுற மத்த கட்சிங்களைப் பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?"

"என்னதான் நாங்க குடிகாரங்கன்னாலும், ஒரு விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கோம். மத்த அரசியல் கட்சிகளோட போட்டி போடவே மாட்டோம். ஏன்னா, நாங்க எவ்வளவு சரக்கடிச்சாலும் அவங்க அளவுக்குப் பினாத்த எங்களால முடியாது."

"சரி, இந்த மாணவர்கள் போராடுறாங்களே, அதைப் பத்தி சொல்லுங்க."

"எல்லா மாணவர்களும் இல்லையே. அந்தக் கடையை உடைச்சபோதுகூட ஒண்ணு ரெண்டு நல்ல மாணவர்கள் ஆளொக்கொரு பாட்டிலை எடுத்திட்டு ஓடினாங்களே. அவங்கதான் எதிர்காலத் தூண்கள். அப்படி நூத்துக்கு ஒருத்தர் இருக்கிற வரைக்கும் எங்க கொள்கைக்கு அழிவே கிடையாது."

"சார், எனக்கு சரக்கடிக்கிற பழக்கம் இல்லை சார். ஆனா, உங்க போட பேசும்போது மப்பு வந்த மாதிரியே இருக்கு சார். உண்மையைச் சொல்லுங்க. நீங்க முழுமதுவிலக்கு வேணும்னு கொஞ்ச முன்னால சொன்னீங்களா இல்லையா? அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப மதுவை ஆதரிச்சே பேசறீங்க?"

"முழுமதுவிலக்கு வேணும்," கொக்கரித்தார் கி.கி.சாமி. "எங்க பகார்டி பக்கிரிசாமி வழக்கமா மூணு க்வார்ட்டர் அடிப்பாரு. அன்னிக்கு ஒரு முழு பாட்டில் சரக்கை வாங்கி அடிச்சிருக்காரு. அதான் செத்துட்டாரு. அதான், இனிமேல் 'முழு மது பாட்டிலே' கூடாது, க்வார்ட்டர் , ஹால்ப் பாட்டில் மட்டும்தான் விற்கணும்னு எங்க பொதுக்குழுவுல நாங்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கோம். அதைத்தான் “முழு” மதுவிலக்குன்னு நான் சொல்லிட்டிருக்கேன்."

"ஐயா, நான் கிளம்பட்டுங்களா...?"

"இருங்க, வந்தது வந்தீங்க. இந்த இன்விட்டேஷனை வாங்கிட்டுப் போங்க."

"என்னது இது?"

"ஒண்ணுமில்லை. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். எங்க கொள்கைப்பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி எழுதின 'படிக்..கலாம் குடிக்…கலாம்'ங்கிற கவிதைத் தொகுப்பை வெளியிடப்போறோம். அவசியம் வந்து கவர் பண்ணுங்க."

*******************************

இந்த சந்திப்பு குறித்த தொகுப்புடன் எங்களது சிறப்பு நிருபரின் ராஜினாமாவும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.