Saturday, September 28, 2013

நாய்கள் புழங்கும் நகரம்




கோடம்பாக்கம் மேம்பாலத்தடியில், வரதராஜபேட்டைக்கும் சேகர் எம்போரியத்துக்கும் இடைப்பட்ட ஆற்காட்டு சாலையைக் கடப்பது, அலஹாபாத் திரிவேணி சங்கமத்தை நீந்திக்கடப்பதற்கு ஒப்பாகும். காவல்பணியில் நின்றிருந்த பெண்மணி கையசைத்து போக்குவரத்தை நிறுத்த, மின்னல்வேகத்தில் பிற பாதசாரிகள் விரைய, இரண்டாண்டுகளாய் என்னோடு இடக்கு செய்துகொண்டிருக்கும் இடதுகாலை இழுத்து இழுத்து நான் கடப்பதற்குள், கருநீலக்காருக்குள் ஸ்டியரிங் பிடித்திருந்த அந்த வடக்கத்திய இளம்பெண், பொறுமையின்றிப் பல்லைக் கடித்து, ஹாரனடித்து, ஆங்கிலத்தில் திட்டி அவசரப்படுத்தினாள். அவளது கோபத்தைப் பார்த்து, பின்சீட்டிலிருந்த அந்த வெள்ளைநிற நாய்க்குட்டியும் புவ்..புவ்வென்று குரைத்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்தது. எரிச்சலிலும் அந்த நாயின் எஜமான விசுவாசம் எனக்குப் பிடித்தே இருந்தது.

      சாலையைக் கடந்து,  நிரம்பிவழிந்த கூட்டத்தில் ஏறத்தாழ ஒருக்களித்துப் படுத்தவாறு வந்த 37Gக்குள் ஏறி, நெரிசலுக்குள் பிதுங்கி, திக்குத்திணறியபோது, உட்காருங்க சார்என்று அந்தப் பள்ளி மாணவன் / கல்லூரி மாணவன் எழுந்து இடம்கொடுத்தபோது ஒரு கணத்துக்கு முன்னர் விசுக்கென்று கிளம்பிய கோபம் காற்றில் பறக்க, ‘காட் ப்ளெஸ் யூஎன்று வேறேதும் சொல்லத் தெரியாமல் வாழ்த்தி அமர்ந்தேன். மனிதர்கள்!  

      வளசரவாக்கத்துக்கு டிக்கெட் வாங்கி, மெகாமார்ட்டில் இறங்கி, சற்று நேரம் தட்டுத்தடுமாறி சாலையைக் கடந்தபோது, காமராஜர் சாலையிலிருந்து திரும்பிய காரின் முன்சீட்டில் பரதநாட்டிய ஒப்பனையோடு ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளது மடியில், தரைதுடைக்கிற ‘மாப்பைப் போன்ற தலையோடு ஒரு நாய் அமர்ந்திருந்தது. நண்பரின் வீட்டுக்குச் செல்ல சி.வி.ராமன் தெருவில் நுழைந்தபோது, முக்கால் சராயும் டி-ஷர்ட்டும் அணிந்துகொண்டு ஒருவர் காதோடு செல்போனை வைத்தபடி நடந்துகொண்டிருக்க, அவர் பிடித்திருந்த பெல்ட்டோடு அவரையும் இழுத்தபடியே என் இடுப்புயரத்துக்கு ஒரு நாய், சொட்டச் சொட்ட நனைந்த காலுறைபோலிருந்த தனது நாக்கைத் தொங்கவிட்டபடி போய்க் கொண்டிருந்தது.

      இப்போதெல்லாம் சென்னையில் நாய்களின் ஜனத்தொகை அதிகரித்து வருகிறது. பல வீடுகளில் அவரவர் பெயர்ப்பலகைகளோடு ‘நாய்கள் ஜாக்கிரதை என்ற பலகையையும் சேர்த்தே பார்க்க முடிகிறது. இந்த சொகுசு நாய்கள் வசிக்கும் தெருக்களில் பெரும்பாலும் தெருநாய்கள் தென்படுவதில்லை. சொல்லப்போனால், இப்போதெல்லாம் அனாதரவான நாய்கள், பணக்காரவீட்டு நாய்களால் பணிப்பளு குறைந்ததால், சாமானியர்களைப் பார்த்துக் குரைப்பதைக்கூடக் குறைத்துக் கொண்டுவிட்டனவோ என்ற சந்தேகம் இருக்கிறது. பங்களா நாய்களுக்குத்தான் அதனதன் எஜமானர்களைப் போலவே, நடந்துபோகிறவர்களைப் பார்த்தால் அருவருப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. அதனாலோ என்னவோ, என் போன்றவர்கள் தெருவில் நடந்தால், எதிரே வரும் வளர்ப்பு நாய்களைப் பார்த்து வழிவிட்டு ஒதுங்கி நிற்க நேரிடுகிறது.

       நாய்களை வளர்ப்பவர்கள் பாக்கியவான்கள். பாசாங்குகளற்ற, கலப்படமற்ற, உள்ளன்பார்ந்த விசுவாசம் அவர்களுக்குக் கிடைக்கிறது. சின்னச் சின்னத் தவறுகளை நாய்கள் மன்னித்து விடுகின்றன. எந்தக் கட்டளையையும்  நாய்கள் உடனடியாக நிறைவேற்றுகின்றன. நாய்களோடு தெருவில் நடமாடுபவர்களுக்குக் கிடைக்கிற கவனம், தனியாகவோ, பிற மனிதர்களுடனோ நடக்கிறபோது பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆடம்பரமான வீடு, சொகுசுக்கார், விலையுயர்ந்த கைபேசி போல,  நாய்களும் பொருளாதார சுபிட்சத்தின் குறியீடுகளாகி விட்டன. எல்லாவற்றிலும் நமது வாழ்க்கையோடு உரசிக்கொண்டிருக்கும் உலகமயமாக்குதலின் தாக்கம், நாய்களின் கொள்முதலிலும் காணப்படுகிறது. உள்ளூர் நாய்களைக் காட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் வியக்கப்படுகிறார்கள். பல பழமைவாதிகளின் வீட்டில் கலப்பில் பிறந்த நாய்கள் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

       இந்த நாய்களும் கொடுத்து வைத்தவைகள்தான். இவைகளுக்குப் பெயர் தேர்ந்தெடுக்க இணையத்தில் வேட்டை நடக்கிறது. இவைகளுக்கென்று வீட்டுக்குள் ஒரு குட்டிவீடு நிர்மாணிக்கப்படுகிறது. இவைகள் விளையாடி மகிழ்வதற்கும் பொம்மைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவற்றின் எஜமானர்கள் தங்கள் செல்லத்துக்கென்று கடைகடையாய் ஏறியிறங்கி, கடனட்டைகளைத் தேய்த்து, பளபளப்பான டின்களில் விதவிதமான தீனிகளை வாங்கிச் செல்கிறார்கள். இந்த நாய்களின் கழுத்திலிருக்கிற பெல்ட்டுகள், பல பள்ளிக்கூடச் சீருடைகளோடு குழந்தைகளுக்குத் தரப்படுகிற இடுப்பு பெல்ட்டுகளைக் காட்டிலும் விலையுயர்ந்தவைகளாக இருக்கின்றன. நாய்களுக்கென்றே பூசுவதற்குப் பவுடர் தொடங்கி, தடவுவதற்குத் தைலம் வரை தாராளமாகக் கிடைக்கின்றன. சற்றே சோர்ந்து படுக்கிற நாய்கள், காரின் பின்சீட்டில் சவுகரியமாக அமர்த்தப்பட்டு மருத்துவர் வீட்டுக்குப் போய் சுகப்பட்டுத் திரும்பி வருகின்றன. வாலிப நாய்களுக்கும் வாளிப்பான நாய்களுக்கும் நாள் பார்த்து கந்தர்வ திருமணங்கள் நிகழ்த்தி வம்சவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது.

      எல்லாவற்றையும் விட, வளர்க்கிற நாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஜமானர்கள் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள்.  நாய்க்குக் கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையும், நாய் கோபமாக இருந்தால் அதற்குப் பிடிக்காத எதையும் செய்யாமலிருக்க வேண்டும் என்ற முன்னெச்செரிக்கையும் எஜமானர்களிடம் காணப்படுகின்றன. வளர்க்கப்படும் நாய்கள், வளர்க்கும் எஜமானர்களின் இங்கிதத்தை வளர்க்கின்றன. குறைந்தபட்சம், நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் மிருகங்களிடமாவது சற்றுப் பரிவை வெளிப்படுத்துகிறார்கள்.

      பல குடும்பங்களில் வளர்ப்பு நாய்கள் தலைச்சன் குழந்தையாக இருக்கின்றன. பிற வீடுகளிலும் நாய்கள் குழந்தைகளைப் போலவே செல்லமாகச் சீராட்டப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில், அவரவர் நாய்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் போடுவதில் வளர்ப்பவர்களுக்குப் பெருமிதம் கிடைக்கிறது. பல வீடுகளில் குழந்தைகளைக் காட்டிலும் நாய்களுக்கே, முதுகை வருடுவதற்கும், முத்தம் கொடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படுகின்றன. பெற்ற குழந்தைகளைப் பிறர்முன்பு கொஞ்சும்போது ஏற்படுகிற சங்கோஜம், நாய்களைக் கொஞ்சும்போது கிஞ்சித்தும் ஏற்படுவதில்லை. நாய்கள் தங்களை நாக்கால் வறட்வறட்டென்று நக்கும்போது பலருக்கு ஏற்படுகிற பூரிப்பும் புளகாங்கிதமும், குழந்தைகள் வந்து தோளைத் தழுவும்போது ஏற்படுவதில்லையென்றே தோன்றுகிறது.  நாய் வளர்ப்பவர்களுக்கு, விரும்பாத விசேடங்களுக்குப் போகாமல் இருக்க அது ஒரு நல்ல காரணமாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர், குளிரூட்டப்பட்ட ரயில்களில் நாய்க்கும் ஒரு ஜன்னலோர இருக்கையை முன்பதிவு செய்து அழைத்துச் செல்கின்றனர். சில சமயங்களில் நாய்களைத் தற்காலிகமாகப் பராமரிக்க, வேலையாட்களைத் தற்காலிகமாகப் பணியிலமர்த்தி, மனிதர்களைப் போல நாயையும், நாயைப்போல மனிதர்களையும் நடத்துகிற விசித்திரமும் நிகழ்வதுண்டு.

      சோபா கண்ட இடமே சொர்க்கம் என்று வாழும் இந்த நாய்களுக்கு, எஜமானர்களின் மனவோட்டம் எளிதில் புரிந்து விடுகிறது. பல நாய்களுக்கு ஆங்கிலமே கேட்டுக்கேட்டுப் பழகியதால், தமிழில் பேசுகிற எல்லாரையுமே ‘அம்மா, தாயேஎன்று வரும் பிச்சைக்காரர்களாய் எண்ணிக் குரைக்கின்றன. பல பணக்காரக்குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச மாலைவகுப்புகளுக்குப் போகையில், அவர்கள் வீட்டு நாய்கள் வீட்டிலிருந்தபடியே ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு விடுகின்றன. சில நாய்கள் ஆங்கிலத்தொடர்கள் பார்ப்பதாகக் கூடச் சொல்லி மாய்ந்துபோகிறார்கள் மாளிகைவாசிகள்.

       நாய்களின் எண்ணிக்கை பெருகியும், ஊரில் திருட்டுகள் குறைந்ததாகத் தெரியவில்லை. தலைமுறை தலைமுறையாக மனிதர்களின் மாண்பு சிறுகச் சிறுகக் குறைந்ததுபோலவே நாய்களின் எதிர்ப்புணர்ச்சியும் குறைந்திருக்கலாம். அல்லது இந்த அவசரயுக மாந்தர்களின் அன்னியோன்னியத்தில் நாய்களின் மரபணுக்களில் மனிதகுணம் கலந்து மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். வசதியான நாய்கள், குரைப்பது மட்டும்தான் எம் பணி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. மெல்ல மெல்ல நாய்களும் நம்மை நோக்கி வருவதுபோல ஒரு கலவரம் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.

      தெருவில் சுற்றித் திரிகிற நாய்களுக்கு என்ன மகிழ்ச்சி, என்ன ஆறுதல் இருந்துவிட முடியும்? சுதந்திரமாக இருக்கிறோம்; எவனுக்கும் அடிமையில்லை என்ற பெருமைதவிர, அவைகளால் ஆனதென்ன, இனியாகப் போவதென்ன? இந்த வெட்டி சுதந்திரத்தில், தினம்தினம் வயிற்றுக்காக அலைந்து திரிந்து அவலத்தில் உழன்றும், ‘எனக்கு சுதந்திரம் இருக்கிறதுஎன்று பீற்றிக்கொள்வதால் என்ன? வயிறு நிறைய உணவு, வாஞ்சையான கவனிப்பு, வசதியான இருப்பிடம் இவை கிடைத்தால், அடிமையாக இருந்தாலென்ன குறைந்து விடும்? ஏன் இப்படி சுதந்திரம், சுதந்திரம் என்று தெருவில் சுற்றி, அடிபட்டுச் செத்து, காக்கைகள் கொத்தி, அப்புறப்படுத்தவும் ஆளில்லாமல் போக வேண்டும்? பெரும்பாலான மனிதர்களைப்போலவே, பெரும்பாலான நாய்களுக்கும் வாழும் வழி தெரியவில்லை போலும்.

      இது நடந்து சில மாதங்கள் கடந்து விட்டன. திடீரென்று கொட்டித்தீர்த்த மழைக்காக, ட்ரஸ்ட்புரம் மைதானமருகேயிருந்த கட்டிடத்தில் நான் ஒதுங்கியபோது, எதிரேயிருந்த மரத்தடியில் டென்னிஸ் பந்துகளைப் போல, சின்னஞ்சிறியதாக ஆறு அல்லது ஏழு நாய்க்குட்டிகள் சொட்டச்சொட்ட நனைந்தவாறு ஒரே குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. மழை சற்றே ஓய்ந்ததும் நெருங்கிச்சென்று பார்த்தபோது, அவற்றில் எந்தக் குட்டிக்கும் இன்னும் முழுமையாகக் கண்கள்கூடத் திறக்கவில்லை என்பது புரிந்தது. வீட்டுக்குச் சென்றதும் இணையத்தில் துழாவி, ப்ளூ கிராஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

      அந்தக் குட்டிங்களோட மதர்-டாகை( தாய் நாய்)ப் பார்த்தீர்களா?

      இல்லை மேடம்! குட்டிங்க மட்டும் தனியா இருக்குதுங்க!

      நீங்க சொல்றதைப் பார்த்தா அதுங்க பால்குடிக்கிற குட்டிங்க போலிருக்குது. இப்போ அதை தாய்கிட்டேயிருந்து பிரிச்சா செத்துடும்.

      மேடம்! அதை இப்படியே விட்டா மழையிலே நனைஞ்சே செத்துடும்!

      அந்த அம்மணிக்கு அதற்குமேல் கேட்கப் பொறுமையில்லாமல், பேச்சைத் துண்டித்து விட்டார். மறுநாள்     அந்த இடத்தைக் கடந்துபோனபோது, ஏழில் ஒரு குட்டி, ஏதோ ஒரு வண்டியில் அடிபட்டு நசுங்கிக் கிடந்தது. மற்ற குட்டிகளைப் பற்றிய கவலை ஏற்படவே, அடுத்த நாளிலிருந்து நான் அந்த வழியே போய்வருவதைத் தற்காலிகமாக நிறுத்தினேன். இப்போது என்றேனும் அந்த வழியே போக நேர்கையில், எந்த மரத்தடியையும் நான் கவனிக்காமல் போய்க் கொண்டிருக்கிறேன்.
      இதுவே, ஒரு பங்களா நாயாக இருந்து, அது ஏழு குட்டி போட்டிருந்தால், அது ஏதோ ஒரு வீட்டின் ஏ.சியில் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு நாய்க்கும் ஒரு நாள் வரும் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு! அதற்கு இப்படியும் ஒரு பொருளுண்டு போலும் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
     
      ஆனாலும், சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்தால், கழுத்திலிருக்கிற பட்டியையும் கழற்றாமல், ஆசையாசையாய் வளர்த்த நாய்களை எஜமானர்கள் துரத்தி விடுகிறார்கள் என்பதையும் அவ்வப்போது காண முடிகிறது. வாழ்ந்து கெட்ட நாய்கள் குப்பைத்தொட்டியருகே வந்து தெருநாய்களின் சங்கத்தில் இணைந்து கொள்ளும்போது, பழைய விரோதங்களை மறந்து ஒரே எச்சில் இலையைப் பகிர்ந்து நக்குகிற பக்குவம் தெருநாய்களுக்கு இருப்பதாகவே பார்த்தவரையில் படுகிறது.

      நாய் வளர்க்கிற எஜமானர்கள் நிரம்ப புத்திசாலிகள்! தங்கள் வீடுகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டு, வளர்க்கிற நாய்களை தெருமுனைகளில் அசுத்தம் செய்யக் கற்பிக்கிறார்கள். எஜமானரின் வீட்டை அசுத்தப்படுத்தக்கூடாது என்பதைப் புரிந்து கொண்ட நாய்கள், தங்களது கழிவுகளைத் தெருவுக்கு அளித்துவிட்டு, மீண்டும் சுத்தமான வீட்டுக்குத் திரும்பி சுகமாக வாழ்க்கை நடத்துகின்றன.

       நகரத்தின் பல தெருக்களில் நாய்களின் அசுத்தம் தென்படுகிறது. அதைக் கடக்கிறபோதெல்லாம், அந்தந்தத் தெருக்களில் விசுவாசமான நாய்களும் விவஸ்தைகெட்ட எஜமானர்களும் வசிக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.

******************

16 comments:

  1. //பல வீடுகளில் அவரவர் பெயர்ப்பலகைகளோடு ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற பலகையையும் சேர்த்தே பார்க்க முடிகிறது.//

    சூப்பர் நாய்க்கடி ஜோக் ! ;)

    >>>>>

    ReplyDelete
  2. // சற்றே சோர்ந்து படுக்கிற நாய்கள், காரின் பின்சீட்டில் சவுகரியமாக அமர்த்தப்பட்டு மருத்துவர் வீட்டுக்குப் போய் சுகப்பட்டுத் திரும்பி வருகின்றன. வாலிப நாய்களுக்கும் வாளிப்பான நாய்களுக்கும் நாள் பார்த்து கந்தர்வ திருமணங்கள் நிகழ்த்தி வம்சவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது.//

    கொடுத்து வைத்த நாய்கள் ஐயா ....

    நம் பொழப்பு தான் நாய்ப்பொழப்போ ! ;)

    >>>>>

    ReplyDelete
  3. //சில சமயங்களில் நாய்களைத் தற்காலிகமாகப் பராமரிக்க, வேலையாட்களைத் தற்காலிகமாகப் பணியிலமர்த்தி, மனிதர்களைப் போல நாயையும், நாயைப்போல மனிதர்களையும் நடத்துகிற விசித்திரமும் நிகழ்வதுண்டு.//

    கொடுமையின் உச்சக்கட்டம் தான் இது.

    >>>>>

    ReplyDelete
  4. // நகரத்தின் பல தெருக்களில் நாய்களின் அசுத்தம் தென்படுகிறது. அதைக் கடக்கிறபோதெல்லாம், அந்தந்தத் தெருக்களில் விசுவாசமான நாய்களும் விவஸ்தைகெட்ட எஜமானர்களும் வசிக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.//

    தங்களின் நாய் ஆராய்ச்சியின் முடிவு ஓர் பேருண்மையை வெளிச்சத்திற்குக்கொண்டு வந்துள்ளது.

    பகிர்வுக்குப்பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  5. அய்யா...உங்களின் மொட்டைத்தலையும் முழங்காலும் புத்தகத்தை பதிவர் சந்திப்பில் வாங்கினேன்...அதில் முதல்........மாப்பிளை வந்தார் கதையை படித்து உங்கள் எழுத்தில் உள்ள நையாண்டித்தனத்தை கண்டு வியந்தேன் ...இன்னும் அடுத்த கதைக்கு போகவில்லை..திரும்ப திரும்ப பலதடவை படித்துக்கொண்டிருக்கிறேன் ...அருமை

    ReplyDelete
  6. எலி ஜுரம் என்று ஓன்று வருகிறது அது எலியால் அல்ல..நாய் கழிவுகள் மழைநீரில் மிதந்து வந்து மனிதர்கள் உடலில் காயங்கள் மூலமாக சென்று எதிர்ப்பு சக்திகள் இல்லையேல் வருகிறது ...தங்கள் பதிவுகள் அனைத்தும் சமுக அக்கறையுடன் இருக்கிறது ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. எங்கும் அப்படித்தான்...! சமூகத்திற்கு நன்றியாக - எப்போது மாறப் போகிறார்களோ...?

    ReplyDelete
  8. #விசுவாசமான நாய்களும் விவஸ்தைகெட்ட எஜமானர்களும் வசிக்கிறார்கள்#
    நாயின் எஜமானர்களுக்கு நாய் பிஸ்கட்டை சாப்பிடச் செய்தால் ...சமுதாயத்தின் மேல் விசுவாசமாய் மாறுவார்கள் !

    ReplyDelete
  9. நகைச்சுவையும் நையாண்டியும் சமூகத்தின் நிலையை படம் பிடித்துக்காட்டுகின்றன..!

    ReplyDelete
  10. நாய் வளர்ப்பவர்கள் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று பலகை வைக்கிறார்கள். ஆனால், நாய் இறந்துபோனபிறகும் அல்லது அதை இவர்கள் விற்றுவிட்ட பிறகும் கூட, பலகையை எடுப்பதில்லையே, அது ஏன்? ‘எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்’ என்று பகவத்கீதை சொல்வது இது தானோ? – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

    ReplyDelete
  11. //சொட்டச் சொட்ட நனைந்த காலுறைபோலிருந்த தனது நாக்கைத் தொங்கவிட்டபடி // இது போல் இன்னும் ரசித்த வரிகள் பதிவு முழுவதிலும் பரவி இருக்கிறது! நல்ல அலசல்! :)

    ReplyDelete
  12. //பல பழமைவாதிகளின் வீட்டில் கலப்பில் பிறந்த நாய்கள் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிக்கப்பட்டு வருகின்றன//
    இனி கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கலப்பு மணங்களை ஆதரிக்கும் மனங்களை அந்த பழமை வாதிகள் பெற்றால் நல்லது தானே.மாற்றத்தின் ஆரம்ப புள்ளியை பழமைவாதிகளின் மன்தில் இட்ட அந்த நாய்கள் பெருகி வாழட்டும்.

    ReplyDelete
  13. பிறப்பொக்கும் என்று சொன்னாலும் ஏற்ற தாழ்வுகள் நிலவுவது மனிதர்களிடம் மட்டுமல்ல நாய்களிலும்தான்.

    ReplyDelete
  14. தங்கள் பகிர்வுக்கு நன்றி
    latha

    ReplyDelete
  15. சமூகத்திற்கு நன்றியாக - எப்போது மாறப் போகிறார்களோ...?


    great
    photos
    nice
    thanku
    raman

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!