Saturday, February 23, 2013

கடலோரக் கப்சாக்கள்-03

எச்சரிக்கை.01:    மீண்டும், இதுவும் கொஞ்சம் நீளமான இடுகைதான்!

எச்சரிக்கை.02:   இதற்கு முந்தைய பதிவை வாசிக்க இதைச் சொடுக்கி, அதற்கு முந்தைய பதிவை வாசிக்க அங்கு தரப்பட்டிருக்கிற இழையைச் சொடுக்கி...சரி..சரி., வேண்டான்னா வுட்டுரலாம்.


ஒரு நற்செய்தி:   அம்புட்டுத்தேன்! இந்த இடுகையின் இறுதிப்பகுதி இது!


எங்கே வுட்டேன்? ஆங்...டிம்பிள் கபாடியாவைப் பற்றி, சிம்பிளாகச் சொல்வது சாத்தியமல்ல என்பதால், கொஞ்சம் அம்மணியைப் பற்றி எழுதிவிட்டு, கப்சாக்களைத் தொடரலாம் என்று. (ஸ்ரீதேவி பெருமூச்சு இடுகை போலவே, விரைவில் டிம்பிள் கபாடியாவைப் பற்றியும் பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.)

      ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய மேரா நாம் ஜோக்கர்படம் மட்டும் வெற்றியடைந்திருந்தால், இந்தியத் திரையுலகுக்கு டிம்பிள் கபாடியா என்ற கலைப்பொக்கிஷம் (முறைக்காதீங்கய்யா!) கிடைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். இப்போது பார்த்தால் பல காட்சிகளில் கண்ணீர் மல்க வைக்கும் அந்தப்படம் வெளியானபோது மிகப்பெரிய தோல்வியடைந்து, ராஜ்கபூரைப் பெருங்கடனில் தள்ளியதாம். அதிலிருந்து மீள்வதற்கென்றே, ஜாலியாக ஒரு லவ்-ஸ்டோரி எடுக்கலாம் என்று ராஜ்கபூர் உருவாக்கிய படம்தான் ‘பாபி’. தன் மகன் ரிஷிகபூருக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா என்ற இளம்பெண்ணை அறிமுகம் செய்வித்து, லட்சுமிகாந்த்-பியாரேலால் ஜோடியின் அட்டகாசமான இசையுடனும், கே.ஏ.அப்பாஸின் கதையுடனும் ஒரு செமத்தியான லவ்-ஸ்டோரியாக ‘பாபியை உருவாக்கி வெளியிட்டு, பணத்தை அள்ளிட்டாரு மனுசன்! இந்தப் படத்தின் கதை வாராவாரம் ‘குமுதம் இதழில் வெளியானபோது, டிம்பிளின் படத்துக்காகவே அதைக் கிழித்துப் பத்திரப்படுத்தியிருந்தேன். (‘நீ ஏன் உருப்படலேன்னு இப்பத் தெரியுதுனு  நீங்க முணுமுணுக்கிறது என் காதுலே விழுது!)

      இந்திய அளவில் இமாலய வெற்றிபெற்ற அந்தப் படம், அப்போதைக்கு, டிம்பிள் கபாடியாவின் முதலும் கடைசிப்படமாகவே கிட்டத்தட்ட அமைந்து விட்டது. அம்மணி அந்நாளைய காதல் மன்னன் ராஜேஷ் கன்னாவைக் கல்யாணம் கட்டிக்கிட்டு (பின்னே உன்னையா கட்டிக்குவாங்க..ன்னு கேட்கப்படாது!) சினிமாவுக்கு ‘டாட்டாசொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். பல வருடங்கள் கழித்து, அதே ரிஷிகபூருடன் டிம்பிள் நடித்த படம்தான் ‘ஸாகர்’. இப்போ அந்தப் படத்தைப் பற்றித்தான் கொஞ்சம் பார்க்கப்போகிறோம்.

      கதை? ஒரு ஏழை மீனவன் (கமல்), தனது கிராமத்தில் வசிக்கிற ஒரு பெண்ணை (டிம்பிள்) காதலிக்கிறான். தற்செயலாக ஒரு பணக்கார வாலிபனுடன் (ரிஷிகபூர்) நட்பு ஏற்பட, நண்பனாக வந்தவனுக்கும் நாயகிக்கும் காதல் வர, ஏழை-பணக்கார வர்க்க மோதல், பணக்காரனின் சொத்தை அபகரிக்க சதி, ஏழை மீனவன் தன் காதலை விட்டுக்கொடுத்து, நண்பனுக்காகத் தனது இன்னுயிர் ஈந்து.....தி எண்ட்! இந்தப் படம் டேவிட் லீன் இயக்கிய ‘ரயன்ஸ் டாட்டர்என்ற படத்தின் தழுவல் என்றெல்லாம் வதந்தி உலாவியது. எனக்கும் இங்கிலிபீஸு படத்துக்கும் ஆவாதுன்ன்றதுனாலே, அதெல்லாம் மெய்யாலுமா லுல்லுலாயிக்கான்னு தெரியாது. (David Lean-ன்னா என்னை விட ஒல்லியா இருப்பாரோ?#டவுட்டு!)

      ரிஷிகபூர், கமல் இருவருமே ஆகச்சிறந்த நடிகர்கள், வேணாம், ஆகச்சிறந்த என்ற பதத்தை உபயோகப்படுத்தினா, என்னை பின்நவீனத்துவவாதி எழுத்தாளர்னு சொல்லிருவாங்க; மிக அற்புதமான நடிகர்கள் என்பதுடன், செமத்தியாக நடனமாடுபவர்களும் கூட! ஆகவே, (இந்த ஆக வேறே!), கமலும் ரிஷியும் குடித்துவிட்டு ஆடுகிற “ஹோ...யுஹி காத்தே ரஹோ! ஹோ..முஸ்குராத்தே ரஹோ!என்ற பாடலை யூடியூபில் (கிடைத்தால்) பாருங்க! சான்ஸே இல்லை! Two masters at work…!           

      80-களின் இறுதிவரையில் இந்திப்படங்களில் எதார்த்தமான நடிப்பு என்பது ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹிலானி, பாசு சாட்டர்ஜீ, குல்ஜார் போன்று வர்த்தக நிர்ப்பந்தங்களுக்குப் பணியாத இயக்குனர்களின் படங்களில் மட்டுமே பார்க்கிற அபூர்வ வஸ்துவாக இருந்து வந்தது. அந்தக் கட்டமைப்பை உடைத்த நடிகர்களில் கமலும் ஒருவர் என்பதற்கு ‘ஸாகர்படம் ஒரு சிறந்த உதாரணம். ‘சத்மா (மூன்றாம் பிறை)வின் வடிவம் வட இந்திய ரசிகர்களுக்கு மிக அந்நியமாக இருந்ததால் அது தோல்வியடைந்ததில் வியப்பில்லை. அதே போல வறுமையின் நிறம் சிகப்பு, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் இந்தியில் எடுக்கப்பட்டபோதும், கமலின் நடிப்பு விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்ததேயன்றி, ரசிகர்கள் கமலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதே உண்மை. ‘ஸாகர்கமலின் ஒட்டுமொத்தத் திறமைகளையும் ஒரு சின்ன பொருட்காட்சி போல ஒழுங்குபடுத்தி அழகாய்க் காட்டியது. ‘யே கமல்ஹஸன் ஆக்டிங் அச்சா கர்தா ஹை ரே என்று சாமானிய இந்தி ரசிகன் வியக்க ஆரம்பித்தது, குறைந்தபட்சம் அப்படி வியந்து நான் கேள்விப்பட்டது, ‘ஸாகர்படத்துக்குப் பிறகுதான். யெப்பா, அப்படி எத்தனை காட்சிகள்...!

      டிம்பிளைக் கலாய்ப்பதற்காக, தவறுதலாக எலிமருந்தைக் குடித்துவிட்டதுபோல அவர் விழுந்து புரண்டு அரங்கத்தை அதிரவைக்கிற கலகலப்பாகட்டும்......

      மின்விசைப்படகுகளால் அறுந்துபோன வலைகளுக்கு நஷ்டஈடு கேட்டு, கொட்டுகிற மழையில், ரிஷிகபூரின் அலுவலகத்தில் ஆக்கிரோஷமாகப் பேசுகிறதாகட்டும்.... (இந்தி உச்சரிப்பும் வெகுவாக முன்னேறியிருந்தது!)

      ரிஷிகபூரோடு போட்டிபோட்டுக் கொண்டு குடித்துவிட்டு, பாரில் மேஜை நாற்காலியின் மீதெல்லாம் ஏறி நடந்து அடிக்கிற லூட்டியாகட்டும்...

      தனது பால்ய சினேகிதியிடம் காதலைத் தெரிவிப்பதற்கு முன்னரே, அவளும் தன் நண்பனும் காதலிக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்து, அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, மூச்சு வாங்க வாங்க, கண்ணீர் மல்குகிற உருக்கமாக இருக்கட்டும்...

      காதல் தோல்வியுற்ற சோகத்தில் குடித்துவிட்டு, மறு நாள் வளர்ப்புத்தாயிடம் (நதிரா...வாவ்!) எதுவுமே நடக்காததுபோலப் பேச முயன்று, கடைசியில் உடைந்துபோய் வாய்விட்டு அழுகிற சோகமாகட்டும்....

      மன்னிப்புக் கேட்க வரும் டிம்பிளிடம் தன் கண்ணீரை மறைக்க, முகத்தில் தண்ணீரை அள்ளிக் கொட்டிக்கொண்டுவிட்டு, சிரித்துச் சமாளிக்கிற காட்சியாகட்டும், ஞொப்புரானே சத்தியமா கமலைவிட வேறெந்தக் கொம்பனும் இந்தக் காட்சிகளில் இப்படி வெளுத்து வாங்கியிருக்க முடியாது.

      இந்தப் படத்துக்காக, கமல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும், துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி ஒரு புதிய சரித்திரமே படைத்தார். சும்மாவா...? (துரதிருஷ்டவசமாக இந்திப் படத்துக்காக கமல் வாங்கிய ஒரே ஃபிலிம்ஃபேர் விருதும் அதுதான் என்று நினைக்கிறேன்.)

      கமல், ரிஷிகபூர், டிம்பிள், நதிரா அனைவரும் போட்டிபோட்டு நடித்திருந்தாலும், கோப்பை கமலுக்குத்தான்! ‘ஷோலே’ ‘ஷான்படங்களுக்குப் பிறகு, 70 எம்.எம், டோல்பி சவுண்டுடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் என்பதால், இது ஒரு குறிப்பிடத்தக்க படம். போதாக்குறைக்கு, ஆர்.டி.பர்மனின் அற்புதமான இசையமைப்பு....!

      செஹரா ஹை யா சாந்த் கி...என்ற கிஷோர்குமாரின் ஸோலோவும், அதில் தொய்ந்துவரும் கிதார் இசையும்! ‘ஜானே தோ நா...என்ற ஆஷா போஸ்லேயின் ஹேவார்ட்ஸ் 5000 கிளர்ச்சிக்குரலும்... ‘ஸாகர் கினாரே...தில் யே புகாரே..என்ற கிஷோர்-லதா டூயட்டும், கமலுக்கு எஸ்.பி.பி.பாடிய ‘ஓ மாரியா...ஓ மாரியா’, ‘யுஹீ காத்தே  ரஹோ,’ ‘சச் மேரே யார் ஹைபோன்ற சுமார்+ ரகப்பாடல்களும் என...கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இதுவும் ஒரு மியூசிக்கல் என்று சொல்லப்பட்டிருக்கலாம். இருப்பினும், தவிர்க்கக்கூடாத, மறக்க முடியாத ஒரு படம் “ஸாகர்”.

      தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் என்ற பேரில் வந்து, காதலியைப் பார்த்ததற்கும், கடன்காரனைப் பார்த்ததற்கும் ஒரே எக்ஸ்பிரஷன் கொடுத்து உசிரை வாங்குகிற ஜென்மங்கள் இந்தப் படத்தின் டி.வி.டி.வாங்கிப் பார்த்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். யார் திட்டினாலும் சரி, இன்றைய நடிகர்களுக்கு (?!???!!!???) நடிப்பு என்பது ட்ரை பண்ணினாலும், ஃப்ரை பண்ணினாலும் (அதாவது சுட்டுப்போட்டாலும்..) வர மாட்டேன் என்கிறது என்பதே அப்பட்டமான உண்மை.




வாத்யாரின் கடற்கரைப் படங்கள்

      அடுத்து, நம்ம வாத்யார் படங்கள் இரண்டைப் பார்க்கலாம். ‘படகோட்டிமற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

      இரண்டொரு வருடங்களாய் சில குறும்பட இயக்குனர்கள், சில புகுமுக திரைப்பட இயக்குனர்களுடன் சங்காத்தம் ஏற்பட்டிருப்பதால், தமிழ் சினிமாவில் திரைக்கதை என்ற கொழுக்கட்டை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பது ஓரளவு புரிந்து வருகிறது. கட்டிலில் போட வேண்டிய மெத்தையை, தரையில் போட்டு, கால்நீட்டி உட்கார்ந்தால், மண்டைக்குப் பின் ஒளிவட்டம் தோன்றி, திரைக்கதை பிறந்துவிடும் என்றுதான் நான் பார்த்த அளவில் பெரும்பாலானோர் முடிவுகட்டி வைத்திருக்கிறார்கள். இது நடக்காதபட்சத்தில், அருகிலிருக்கிற டாஸ்மாக்கிலிருந்து சரக்கும், அடையாறு ஆனந்தபவன் மிக்ஸரும், ஃபில்டர் கிங்க்ஸும், பர்மா பஜாரில் வாங்கிய உலக்கைப்பட குறுந்தகடுகளும் அறைமுழுக்கப் பரப்பினால், வித்தியாசமான கதைபிறந்துவிடும் என்று நம்புகிறவர்கள், தயவு செய்து பழைய எம்.ஜி.ஆர்.படங்களைப் பாருங்கள்! கதையை விடுங்கள் ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது என்ற அடிப்படையை அங்கு தேடுங்கள்! இன்னும் three-part திரைக்கதைகளே பிரபலமானதாக இருந்து தொலைக்கிறபடியால், அந்த வடிவத்துக்குள் ஒரு கதையை எப்படித் தொடங்குவது, எங்கு இடைவேளை போடுவது, எப்படி முடிப்பது என்ற அரிச்சுவடிக்கணக்கை அறிய, எம்.ஜி.ஆர்.படங்களைக் காட்டிலும் சிறந்த (கையடக்கப்) புத்தகத்தை ஸிட் ஃபீல்டோ அவரது பாட்டனோ கூட எழுத முடியாது.

கடுப்ஸ்: சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?என்ற புத்தகம் இருந்தால், அதை பழைய பேப்பரோடு விலைக்குப் போடுங்கள்! நான் எப்போதோ செய்துவிட்டேன்! Exceptionally substandard என்பதற்கு அது ஒரு உதாரணம். எங்காவது யாராவது கடலை மடக்காவாவது பயன்படட்டும்!

ஆயிரத்தில் ஒருவன்

      பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம். சக்தி கிருஷ்ணசாமியின் (வீ.பா.கட்டபொம்மன் புகழ்) பொறிபறக்கும் வசனங்கள்.

நம்பியார்:   மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

எம்.ஜி.ஆர்:  சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!

நம்பியார்:   தோல்வியையே அறியாதவன் நான்!

எம்.ஜி.ஆர்:  தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்!

      பின்பக்கம் பட்டன் வைத்த, போச்சம்பள்ளிப் பட்டுப்புடவையில் தைத்த  சட்டையுடன் எம்.ஜி.ஆரும், லுங்கி ஸ்டைலில் நம்பியார் கட்டிக்கொண்டு வரும் காஞ்சீவரமும் நகைப்பூட்டலாம். ஆனால், இந்தப் படத்தின் அசுரபலம் திரைக்கதையமைப்பும் காட்சியமைப்பும். பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்,’ ‘ஆடாமல் ஆடுகிறேன் என்று கதாநாயகிக்கு மட்டுமே மூன்று பாடல்களை, அதுவும் ஒரு புதுமுக நாயகிக்கு (ஜெயலலிதா) கொடுத்திருக்கிறார்கள் என்றால், இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையைக் கவனிக்கவும்.

      ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.

     ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...

     அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்...

      இந்தப் பாடல்களெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் என்பது உள்ளங்கை பூசணிக்கனி. இது தவிர, ‘நாணமோ இன்னும் நாணமோஎன்று ஒரு டூயட். ஒரு வெகுஜனப்படம் என்றால், அதன் சாமுத்ரிகா லட்சணங்கள் என்னென்ன உண்டோ, அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

      எம்.ஜி.ஆர்.படத்தில் நாலைந்து சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பாய் முகமெல்லாம் புன்னகை பூத்தவாறு, படுகேஷுவலாய் போடுகிற ஜாலி சண்டை; (பொறு பூங்கொடி! போய் சற்று விளையாடிவிட்டு வருகிறேன்!) சிலம்பம், வாள், மான்கொம்பு, இடுப்பு பெல்ட், சுருள்வாள், இரும்புக்கம்பி, சவுக்கு என்று ஏதேனும் ஒரு உபகரணத்துடன் போடுகிற ஒரு சண்டை; குண்டுமணி, ஜஸ்டின், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒண்டிக்கு ஒண்டி போடுகிற ஆக்கிரோஷமான சண்டை... என்று எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட்கள் பலவகைப்படும். இந்தச் சண்டைக்காட்சிகளின் அமைப்பு, திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடியும். உதாரணமாக, ‘ரிக்‌ஷாக்காரன்படத்தில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டியவாறே, வாத்யார் சிலம்பம் சுற்றுகிற காட்சி. படம் ஆரம்பித்து ஏறத்தாழ அரை மணி கழித்து வருகிற முதல் சண்டைக்காட்சி என்பதாலோ என்னவோ, சற்று நீ...ளமாகவும் ஆனால் ஒரு நொடி கூட சலிப்பூட்டாமல், பார்க்கப்பார்க்க உள்ளங்கை சிவக்கக் கைதட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். (இது குறித்தும் பின்னால் தனித்தனி இடுகை எழுத நப்பாசை உண்டு!)

      ஆயிரத்தில் ஒருவன்படத்திலும் அப்படித்தான்! நம்பியாரின் கொள்ளைக்கூட்டம் கன்னித்தீவுக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆரும் கூட்டாளிகளும் அவர்களை எதிர்த்துப் போராடுகிற காட்சி படுசாதாரணமாக, ஒரு ஓடிப்பிடித்து விளையாடுகிற ஆட்டத்தைப் பார்ப்பது போலிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒற்றைக்கு ஒற்றை போடுகிற சண்டைக்காட்சி மிகவும் இறுக்கமாக, ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை எள்ளுபவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன நுணுக்கங்கள் தென்படாது. ஆனால், இன்றளவிலும் ‘சண்டைக்காட்சிகள்என்றால் ‘வாத்யார் படம் தான்என்று வியக்கப்படுவதற்குக் காரணம், இத்தகைய வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான். அதனால்தான் அவர் இன்னும் வாத்யார்; என்றும் வாத்யார்!

      பாய்மரக்கப்பல், அழகான கடற்கரை, தீவு என்று ஈஸ்ட்மென் கலரில் ‘ஆயிரத்தில் ஒருவன்கடலழகின் பல பரிமாணங்களை அப்போதே திரையில் வெளிப்படுத்தி மலைக்க வைத்த படம். ஓடும் மேகங்களே,பாடலில் எம்.ஜி.ஆர் கடற்கரையில் பாடிக்கொண்டே போக, ஜெயலலிதா பின்தொடர்வது போலவும்; ‘அதோ அந்த பறவை போலபாடல் ஒரு பாய்மரக்கப்பலிலேயே அனைவரும் பாடுவதாகவும் அமைத்து, கடலின் அழகைப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் பந்துலு. பாறைகள் நிறைந்த கடல்பகுதியில் எம்.ஜி.ஆர்- நம்பியார் போடுகிற சண்டையிலும் கடலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் பெரும்பகுதி ஸ்டூடியோவுக்கு வெளியே எடுக்கப்படுவதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.

      இப்போதுகூட ஜெயா டிவியில் ஒளிபரப்பினால், கண்கொட்டாமல் பார்ப்பேன்.

படகோட்டி

     இந்த மியூசிக்கல், மியூசிக்கல்னு அலப்பறை பண்ணுகிறார்களே, ‘படகோட்டியை மிஞ்சிய ஒரு மியூசிக்கல் வந்திருக்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

      படகோட்டி-யில் எம்.ஜி.ஆரின் அறிமுகமே, கடற்கரையில் நடக்கிற ஒரு (ஆக்கிரோஷமான) சிலம்புச்சண்டைக் காட்சியில் தான். அதைத் தொடர்ந்து சற்றே சோகம் தோய்ந்த ‘தரைமேல் பிறக்க வைத்தான்என்ற பாடல். ஒரு டிப்பிக்கல் எம்.ஜி.ஆர் படத்துக்குண்டான உற்சாகமான துவக்கம் இதில் இருப்பதாகச் சொல்ல முடியாதுதான். ஆனால், விறுவிறுவென்று காட்சியை நகர்த்துகிற நேர்த்தியும், ‘தரைமேல் பிறக்க வைத்தான்ல் தொடங்கி ‘கல்யாணப்பொண்ணு..கண்ணான கண்ணுவரைக்கும் முத்து முத்தாய் கேட்டாலே மிக்சிங் இல்லாமல் குவார்ட்டர் அடித்த எஃபெக்ட் தருகிற பாடல்களும், இதை எம்.ஜி.ஆரின் ஆக...மன்னிக்கவும், மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக்கி விட்டன. பாட்டுக்கு ஒரு படகோட்டிஎன்று சொல்லுமளவுக்கு இந்தப் படத்தை மெல்லிசை மன்னர்கள் ஆட்கொண்டிருந்தபோதிலும், படமாக்கப்பட்ட விதத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

      கொடுத்ததெல்லாம் கொடுத்தான்பாடலில் எம்.ஜி.ஆர் பாடியவாறே கடலில் தொடங்கி கால்வாய் வரை நடப்பதைப் பார்க்க முடியும்.

      தொட்டால் பூ மலரும்பாடலில் கடற்கரையை ஒட்டிய தென்னந்தோப்பில் படமாக்கியிருப்பார்கள். மற்ற பாடல்கள் பெரும்பாலானவை ஸ்டூடியோக்களிலேயே படமாக்கியிருந்தது கொஞ்சம் குறையாகப் பட்டது. இல்லாவிட்டால், ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அப்புறம் தான் இதுவென்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

      கடல், கடற்கரையோடு தொடர்புடைய படங்கள் பல இருக்கின்றன. ‘மீனவ நண்பன்  என்று கூட ஸ்ரீதர் எடுத்தார். அதற்காக, அதைப் பற்றி எழுதி எம்.ஜி.ஆர்.ரசிகர்களிடம் மொத்துவாங்க நான் தயாராக இல்லை. கடலோரக்கவிதைகள்கூட குறிப்பிடத்தக்க படம் தான்! இப்படி ஞாபகம் வர வர நான் இடுகையின் நீளத்தை அதிகரித்தால், அலுவலகத்தில் படிக்கிறவர்கள் குறட்டைவிட்டு, அவர்களது உத்தியோகத்தைக் கெடுத்த பாவம் என்னைவந்து சேரும் என்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

பிற்குறிப்பு: (இது வேறயா?)

      சேட்டைக்காரன் என்று பெயரை வைத்துக் கொண்டு சீரியஸாக எழுதி இம்சை பண்ணாதீர்கள் என்று பலர் நேரிலும், போனிலும், தபாலிலும், தந்தியிலும், தினகரனிலும் கேட்டுக்கொண்டதால், இனி மொக்கை தவிர்த்த விஷயங்களை எழுத புதிய பதிவு ஒன்று ஆரம்பிக்கப்போகிறேன். பயப்படாதீங்க, இன்னும் பதிவு போட ஆரம்பிக்கலை; அறிவிப்பு வரும்வரை அனைவரும் நிம்மதியாக இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

அப்பாடா...எம்புட்டுப் பெரிய இடுகை...முற்றும்-ங்கண்ணா...!
  

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆயிரத்தில் ஒருவனை மறுபடியும் ஒருமுறை ரசித்தேன்...

தரைமேல் பிறக்க வைத்தான் - இன்னும் பாடலில் உள்ளதை போலவே உள்ளதே... (அதை விட மோசமாகவே...)

பெரிய பதிவோ சிறிய பதிவோ... வழக்கம் போல் தொடரவும்...(சேட்டை செய்யாத,தெரியாத வாய்ப்பில்லாத, அனுபவிக்காத ரசிகர் கூட்டம் நிறைய உள்ளதால்...)

சமீரா said...

என்ன சார் இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டு பெர்ர்ரிய பதிவுன்னு சொல்றீங்க...
பாலிவூட் பத்தி அதிகம் தெரியாது.. உங்கள் பதிவில் அந்த குறை கொஞ்சம் தீர்ந்தது!!

MGR - பத்தின பகுதி வெகு சுவாரசியம்.. தனி பதிவுக்காக காத்திருக்கிறேன்!!!

புது வலைபூ வருதா?? ஹ்ம்ம் பாக்கலாம் சார் உங்க சீரியஸ் பதிவு எப்படின்னு!!

ஸ்ரீராம். said...

ஐயா... முதல் பகுதி நான் படிக்கவில்லை. பார்த்திபன் கனவு, வஞ்சிக் கோட்டை வாலிபன் அதில் சொல்லி விட்டீர்களோ?

YESRAMESH said...

இந்த வரிசையில் எங்கள் தளபதியின் திரைக்காவியம் சுறா பற்றி எழுதாதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கும்மாச்சி said...

சேட்டை அருமையான் கடலோர கப்சா பதிவுகள் மூன்றையும் ரசித்தேன், முத்தாய்ப்பாக ஆயிரத்தில் ஒருவனும், படகோட்டியும் சூப்பர்.

பால கணேஷ் said...

அந்த ‘பாபி’ படத்துல வர்ற டொடய்ங்டொங் மியூசிக்கை வெச்சு நம்ம சங்கர்கணேஷ் எத்தனை படங்கள்ல ஒப்பேத்தினாங்கன்னு ஒரு தனி இடுகையே போடணும் சேட்டையண்ணா. வாத்தியார் படங்களைப் பத்தி நீங்க குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆளுமையின் தீவிர ரசிகனான நான் கை தட்டி ரசிச்சுப் படிச்சேன். புதிய தளத்துலயும் சந்திக்கறேன் உங்களை.

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் என்ற பேரில் வந்து, காதலியைப் பார்த்ததற்கும், கடன்காரனைப் பார்த்ததற்கும் ஒரே எக்ஸ்பிரஷன் கொடுத்து உசிரை வாங்குகிற ஜென்மங்கள் //

நல்லா வாரிவிட்டீர்கள் ...

Unknown said...

நீங்களாவே மொக்கைனு முடிவு பண்ண எப்டி சார்...? அடிக்கடி அதையே சொல்லி மொக்க போடாம நிறைய எழுதுங்க சார்... :-P

”தளிர் சுரேஷ்” said...

வாத்தியார் படங்களின் விவரிப்பு சுவை கூட்டியது! பகிர்வுக்கு நன்றி!

Thamizh_Thendral said...

ஐய்யா சேட்டை,

சீரியஸா படிக்கனும்னா நாங்க பேப்பர் படிச்சுக்கரோம். உங்க குறும்பு, கிண்டல், காமெடி படிக்கத்தான் இங்க வரோம். அது மொக்கைன்னு நீங்க ஃபீல் பண்ணினா அதுக்கு நாங்க பொறுப்பில்லை. உங்க கடமை, இப்படி எழுதரது, எங்க கடமை படிச்சு சிரிச்சு சந்தோஷப் படரது. புரியுதா, அதையும் தாண்டி சீரியஸா எழுதப் போரேன்ன்னு கிளம்பினா கதை கந்தலாயிடும் சொல்லிட்டேன்.

முரளி.

mohan baroda said...

I am reading KADAL PURA now and i could not avoid comparing MGR and Jayalalitha with ILAYAPALLAVAN and KANCHANA enjoying the sea from their war ship Kadal Pura

mohan baroda said...

Please give me your mobile number so that I can convey my views instantly after reading your post