முன்ன்ன்ன்னுரை
இணையத்தில்
எழுத வந்த காலத்தில், நான் குழுமங்களில் எழுதிய பல இடுகைகள் இன்னும் எனது
இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்து வருகின்றன. அவ்வகையில், 10-12-2008 அன்று ‘பண்புடன்’ குழுமத்திலும், அப்போது நான்
எழுதிக் கொண்டிருந்த ‘கிணற்றுத்தவளை’ என்ற வலைப்பதிவிலும் (இப்போது உள்ள
‘கிணற்றுத்தவளை’ அல்ல!) எழுதிய இந்தக் கட்டுரையை, தற்செயலாக மீண்டும் வாசித்ததும் பகிர்ந்து
கொள்ள விரும்பினேன்; பகிர்ந்து விட்டேன்.
இந்தக்
கட்டுரையை வாசித்த நம் அமீரக அண்ணாச்சி ஆசீப் மீரான், இதை ஒரு புனைவாக
எழுதியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டதுடன், தானே எழுதப்போவதாகவும் அப்போது
கூறியிருந்தார். அப்போது அதுவே மிகப்பெரிய பாராட்டாக எனக்குப் பட்டது.
இந்தக்
கட்டுரையின் சில பகுதிகளை, “வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்கசார்..... ” வலைப்பதிவில் திரு.வேல்மகேஷும்,
”நினைவுப்பாதை” வலைப்பதிவில் ‘அழியாச்சுடர்’ திரு.ராம் அவர்களும் எனக்கு ‘நன்றி’ என்று குறிப்பிட்டுச் சேர்த்திருந்தனர்.
என் எழுத்தையும் பலர் கவனிக்கிறார்கள் என்ற ஊக்கத்தைத் தந்த அவர்கள் இருவருக்கும்
எனது நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, ‘சேட்டைக்காரன்’ பதிவில் இதுவரை வராத, எனது
மீள்பதிவை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.
திடீரிசம்
என்றால் என்ன?
தினசரி
செய்தித்தாள்கள் வாசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்தக் கேள்வியைக் கேட்க
மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தலைப்புக்கள் பெரும்பாலும் இப்படித்தானே
இருக்கின்றன?
பிரபல நடிகர் திடீர் மரணம்
பிரபல நடிகை திடீர் திருமணம்
திடீர் கூட்டணி
திடீர் அறிக்கை
திடீர் அரசியல் பிரவேசம்
ஒவ்வொரு
முறை ’திடீர்’ என்ற வார்த்தையைக் கேட்கும்போதும், எனக்கு நாகர்கோவிலில் வசித்த காலங்களில், வாரம் தவறாமல் அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்தி சொற்பொழிவு
நிகழ்த்திய ஒரு தேசியவாதியின் பெயர் நினைவுக்கு வரும். அவர் பெயர் பூமேடை ராமையா
பிள்ளை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பூமேடை
என்றாலே பெரும்பாலானோர் அடையாளம் கொண்டு, ஒரு நமுட்டு சிரிப்பு
சிரிப்பார்கள். எந்த அளவுக்கு அவர் பிரபலமாக இருந்தாரோ அந்த அளவுக்கு அவரையோ அவரது
பொதுக்கூட்டங்களையோ யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக எனக்கு நினைவில்லை.
வாரந்தோறும், நாகர்கோவில் நகரசபைத் திடலில் அவரது பொதுக்கூட்டம் நடைபெறும்.
அவரது பொதுக்கூட்டங்கள் பற்றி சுவரொட்டி அச்சடிக்க யாராவது புரவலர்கள் பொருளுதவி
செய்ய முன்வருவார்கள்; ஒரு வேளை புரவலர்கள்
பொருளுதவி தரவலர்களாக இல்லாதபோது, பொதுக்கூட்டங்கள் சில வாரங்கள்
நடைபெறாமல் இருப்பதும் உண்டு. இந்த வாரம் ஏன் பூமேடை கூட்டம் போடவில்லை என்று
எவரும் எப்போதும் ஆதங்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை.
சுவரொட்டிகள் அடிக்கப்பட்டதும், அதைத் தனது சைக்கிளில் பின்னால் வைத்துக்கொண்டு, ஒரு வாளியில் ஒட்டுப்பசையை தொங்க விட்டுக்கொண்டு பூமேடை தானே
ஊர் முழுக்கப்போய் முக்கியமான இடங்களில் ஒட்டுவார். பெரும்பாலும் அதிக ஆள்
நடமாட்டம் இல்லாத சந்துகளில் உள்ள சுவர்களில் அவரது சுவரொட்டிகளை அதிகம்
ஒட்டுவார். ஏன் என்று கேட்டால், ’மெயின் ரோட்டிலே ஒட்டினா எவன்
பார்க்கான்? நான் என்ன சினிமாப் போஸ்டரா ஒட்டுகேன்? முடுக்குலே ஒட்டுனேமுண்ணா ஒண்ணுக்கு இருக்கப்போறவன் பாப்பான்,’ என்று விளக்கம் அளிப்பார். அவர் சொல்லுவதில் ஒரு நியாயம்
இருக்கும். அவரது கூட்டங்களுக்குப் பெண்கள் வந்து நான் பார்த்ததில்லை. எனவே ஆண்கள்
தேடிப்போகும் மறைவிடங்களில் அவர் சுவரொட்டிகளை ஒட்டுவது சரிதான் என்று படும்.
அவரது ஒவ்வொரு
பொதுக்கூட்டத்துக்கும் ஒரு தலைப்பு இருக்கும்.
'திடீர்' கசையடி விழா!
'திடீர்' எதிரடி அதிரடி விழா!
'திடீர்' ஊழல் விழா!
ஆறு
மணிக்குப் பொதுக்கூட்டம் என்றால், ஐந்தரை மணி வரைக்கும் அங்கே ஒரு
அரசியல் கூட்டம் நடப்பதற்கான சுவடே தென்படாது. அவரை விடவும் வயதான சைக்கிளில் ஒரு
மரமேஜை, ஒரு ஒலிபெருக்கி,ஒரு மைக் இன்னும் சில சில்லறை வஸ்துக்களோடு, மொடமொடவென்று கஞ்சி போட்டுத் தோய்த்த, தும்பைப்பூ போன்ற கதர் சட்டை, கதர்
வேட்டி, கதர் காந்தித் தொப்பியோடு பூமேடை
வருவார். நாகர்கோவில் நகரசபைத் திடல் பக்கத்திலிருந்த
ஒரு கட்சி அலுவலகத்திலிருந்து அவரது பொதுக்கூட்டத்துக்கு மின் இணைப்பு தானமாக வழங்கப்படும். (அதே கட்சியையும் அவர் தனது விமர்சனத்தில் விட்டு வைக்க மாட்டார்
என்பது வேறு விஷயம்)
கூடியிருக்கும்
மிகச்சிறிய கூட்டத்தினரில் ஒருவர் கூட அவருக்கு உதவியாக எதையும் செய்யாமல் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத அந்த
சுதந்திரப்போராட்டத் தியாகி, ஆறு மணிக்குள்ளே தான் கொண்டு
வந்த மேஜையை மேடையாக்கி, அதன் மீது ஏறி தானே ’ஹலோ,
மைக்
டெஸ்டிங்..ஒன்..டூ..த்ரீ..,’என்று பரிசோதித்து விட்டு, இறைவணக்கத்தைத் தானே பாடுவார். இறைவணக்கத்தைப் பாடி முடித்து
விட்டு, இரண்டாவது பாட்டைப் பாட
ஆரம்பித்ததும் தான் கூட்டத்துக்கு சற்றே சுவாரசியம் தட்டும்.
"ஆளைப்
பாருங்க..ஐயா..ஆளைப் பாருங்க
நாளை
அடையாளம் நல்லாத் தெரியணும்
ஆளைப்
பாருங்க..ஐயா..ஆளைப்பாருங்க!"
இது பல்லவி! சரணத்துக்கு வருவார் அடுத்து..!
"டெல்லியிலே
குதிரை மண்ணை அள்ளித் திங்குது!"
அது
வரைக்கும் கட்சி அலுவலக வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தக்
கட்சித் தொண்டர்கள், சிரித்துக்கொண்டே உள்ளே போய்
விடுவார்கள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்; அவர்களுக்குப் புரிந்து விட்டது, இன்று பூமேடை என்ன விஷயம் பற்றிப் பேசப்போகிறார் என்று!
சின்னச்சின்னத்
தாள்துண்டுகளில் எதையெதையோ குறித்து வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் கோர்வையாகப்
பேசுவார் பூமேடை. யாரையும் தனிப்பட்ட முறையிலோ, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியோ
தாக்காமல், சொல்ல வந்ததை, ஒரு விதமான நக்கலோடு, நகைச்சுவை இழையோட, கூட்டத்தினரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தபடி பேசுவார்.
ஆரம்பத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களாக இருந்த கூட்டம்
போகப்போக நூறு, நூற்றைம்பதைத் தாண்டும். கூட்டம்
கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி, பூமேடையின் உற்சாகம் மட்டும் சற்றும் குறையாது. சரியாக ஏழு
மணிக்கெல்லாம் பேசி முடித்து விட்டு, கூட்டத்தினரின் கேள்விகளுக்குப்
பதில் அளிப்பார். சில சமயங்களில் கேள்விகளை சீட்டில் எழுதி அனுப்புவோரும் உண்டு.
எசகு பிசகாக எதையாவது கேட்டால், எரிந்து விழுவார். தேசீய கீதத்தோடு
கூட்டம் இனிதே நிறைவுறும்.
கூட்டம்
கலைந்து போகவும், பூமேடை தனது தடவாளங்களை மீண்டும் சேகரித்துக்கொண்டு, தனது சைக்கிளில் வைத்துக் கட்டி முடித்துக்கொண்டு, ஆள் அரவமற்ற நகரசபைத் திடலிலிருந்து தனியாளாக, சைக்கிளை மிதித்துக்கொண்டு பாலமோர் ரோட்டுக்கு வந்து
போக்குவரத்தில் காணாமல் போய் விடுவார்.
அது
மட்டுமல்ல! நகரசபைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் ஒன்று
விடாமல் போட்டியிடுவார். அவருக்காக யாராவது பொருளதவி அளித்து டெபாசிட் கட்ட
உதவுவார்கள். அவரது கூட்டம் தான் வினோதமானது என்றால், அவரது தேர்தல் பிரச்சாரம் அதை விடவும் வினோதமாக இருக்கும்.
தனது
நிரந்தர வாகனமான சைக்கிளில் உட்கார்ந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் சுயேச்சையாகப்
போட்டியிடுவார் என்றாலும் எனக்கு நினைவுக்கெட்டிய வரைக்கும் அவரது சின்னம் ’யானை’யாகத் தானிருந்தது. தனது
வாயில் ஒரு விசிலை ஊதிக்கொண்டே சைக்கிளை நாகர்கோவிலின் சந்து பொந்துகளெல்லாம் போவார்; ஒரு கையில் பொம்மை யானை ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டே தெருவின் இரண்டு
பக்கங்களிலும் தனது சின்னத்தை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே போவார்.
சிறுவர்களாக
இருந்த நாங்களெல்லாம், எங்களது கபடிகளையும், கிரிக்கெட்டையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அவரது
சைக்கிள் எங்களது தெருவை விட்டுப் போகும்வரைக்கும் அவரைப் பின்தொடர்ந்து செல்வோம்.
அவர் சற்றும் அசராமல், கோபப்படாமல், கருமமே கண்ணாகத் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வார்.
எனக்குத்
தெரிந்து அவர் எந்தத் தேர்தலிலும் டெபாசிட்டைக் கூடத் திரும்பப் பெற்றதில்லை.
ஆனால், நான் நாகர்கோவிலில் இருந்த வரைக்கும்
அவர் போட்டியிடாத தேர்தலேயில்லை. அவருக்கு அரசியல் விரோதிகள் யாருமே இருந்ததில்லை.
எல்லாக் கட்சியை சேர்ந்தவர்களும் அவரது பொதுக்கூட்டங்களுக்கும், தேர்தல் செலவுகளுக்கும் பண உதவி செய்தனர்.
அவரால்
எந்தத் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது என்று அவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு
நம்பிக்கையும், இவரையெல்லாம் ஜெயிக்க வைத்து என்ன பண்ணப்போகிறோம்
என்ற அவநம்பிக்கை பொதுமக்களுக்கும் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.
காரணம், அரசியிலில் வெற்றி பெறுவதற்காக செய்ய வேண்டிய சில தியாகங்களை அவர்
செய்திருக்கவில்லை. இறுதி வரைக்கும் எளிமை,நேர்மை என்ற பெரிய சுமைகள்
அவரது சைக்கிளில் பின்பக்கம் வைத்துக் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
பிற்குறிப்பு: பூமேடை ராமையா பிள்ளை
குறித்து கடுக்கரை திரு.பொன்னப்பன் அவர்கள் எழுதிய இடுகையையும்
வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த இடுகையில் நீங்கள் காணும் புகைப்படத்தை
அவரது இடுகையிலிருந்தே நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
வி்ந்தை மனிதரவர்!வெற்றி பெற இயலாது என்பது அவருக்கே தெரியும்! இப்படிப்பட்டவர்கள்தான் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்
ReplyDeleteதிடீர் இடுகை சூப்பர் அண்ணா. அவர் பின்னால் வைத்துக் கட்டப்பட்ட இரு சுமைகள் பற்றி நீங்கள் சொன்னது அருமை. இத்தகைய நேர்மையாளர்கள் வெற்றி பெறாததற்கு மக்கள்தான் வெட்க வேண்டும். தொடரட்டும் சேட்டைக்காரன் இதுவரை வெளியிடாத இதுபோன்ற மீள்பதிவுகள்..!
ReplyDeleteYou have also given this post all of a sudden i.e. THEEDERENRU. Though it is a DEEDEER POST, I enjoyed it.
ReplyDeleteDear sir, Please see this link
ReplyDeletehttp://www.jeyamohan.in/?p=13096
ராமையா பிள்ளை குறிக்கோளில்லாமல் செயல்பட்டது புரிந்தாலும் அவரை எண்ணி மனம் கலங்குவது விசித்திரமாக இருக்கிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇவர் போன்ற நிறைய ஜனநாயகவாதிகள் ஆங்காங்கே உண்டு.பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇந்தப் பதிவை படித்ததில்லை... நல்லதொரு பகிர்வு... இணைப்பில் உள்ள தளத்தையும் படித்தேன்... நன்றி....
ReplyDeletetm5
இங்கே வடக்கிலும் ஒருவர் இருக்கிறார் - எல்லா குடியரசுத் தலைவர் தேர்தலிலும் போட்டியிடுவார்!
ReplyDeleteமனதைத் தொட்ட கட்டுரை.
ReplyDeleteசகோ.சேட்டைக்காரன்...
ReplyDeleteஎன்னது இது..?
திடீர் மீள் பதிவு..?
எனிவே,
மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றி சகோ.
பூமேடை :
இப்படியும் இருக்கிறார்கள் சிலர் என்பதே ஆச்சர்யத்தினை அளிக்கிறது.
பதிவில் சில வார்த்தைகள் விநோதமாக கையாளப்பட்டுள்ளன. :-)
//ஒரு வேளை புரவலர்கள் பொருளுதவி 'தரவலர்களாக' இல்லாதபோது//
//பூமேடை தனது 'தடவாளங்களை' மீண்டும் சேகரித்துக்கொண்டு,//
உங்களது நாகர்கோயில் நகரசபைத் திடல் பேச்சாளர் பூமேடை ராமையா பிள்ளை பற்றிய பழைய நினைவுகள் கட்டுரையும், கடுக்கரை பொன்னப்பன் பதிவும் படிக்க படிக்க ஒரே சுவாரஸ்யம்.
ReplyDeleteஇந்த மாதிரி மனிதர்கள் எப்போதுமே ஆச்சர்யம்தான்.
ReplyDeleteரொம்பவும் வித்தியாசமான மனிதர் தான்...கடமையைச் செய், பலனை எதிர்பாராத என்று வாழ்வ்திருப்பார் போல!
ReplyDeleteநல்ல பதிவு சேட்டை.
எளிமை,நேர்மை என்ற பெரிய சுமைகள் அவரது சைக்கிளில் பின்பக்கம் வைத்துக் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
ReplyDeleteவித்தியாசமானவர் தான் பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்று நாகர்கோவிலில் இப்படி ஒருவர் தான் தோற்றாலும் தேர்த்தலில் போட்டியிட்டார்.
ReplyDeleteஇன்றோ ராமேஸ்வரக்காரர் என்னை போட்டியின்றி வெற்றிபெறவைத்தால்தான் தேர்தலில் போட்டியேயிடுவேன் என்கிறார்.
வித்தியாசமான மனிதர்கள் சேட்டை!
உங்கள் எழுத்தோட்டம் மிக அழகாய் தாவிச் செல்கிறது. ரசித்தேன் சேட்டைக்காரரே!
ReplyDeleteதிடீர்' எதிரடி அதிரடி பகிர்வு !
ReplyDeleteதிடீரென மாறுபட்டதோர் சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteயாரையும் எதிர்பார்க்கவில்லை, எந்தவொரு பலனையும் எதிர்பார்க்கவில்லை, தேர்தலில் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதையும் அவர் எதிர்ப பார்த்திருக்க மாட்டார். அருமையான பதிவு ஐயா .
ReplyDeleteபூமேடை ராமையா அவர்களின் புகைப்படம் இதுதானா? வேறு புகைப்படம் உள்ளதா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete