Wednesday, July 18, 2012

சைனா காட்டிய வழியம்மா



அந்தப் புதிய பள்ளிக்கூடம் வாசலில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலுக்கு வருகிற பக்தர்களைப் போல பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

     எல்லாரும் வழிவிட்டு நில்லுங்க!போலீஸ்காரர் லட்டியைச் சுழற்றினார். “ஒதுங்குங்க, ஒதுங்குங்க! பிரின்சிபல் வர்றாரு!

     பிரின்சிபல்தானே வர்றாரு?கிட்டாமணி புலம்பினார். “என்னமோ கபில்சிபல் வர்றா மாதிரியில்லே கெடுபிடி பண்ணுறாங்க?

     சும்மாயிருங்க!கணவரை அதட்டினாள் பாலாமணி. “ஸ்கூல் அட்மிஷன் கிடைக்கிற வரைக்கும் வீட்டுலே இருக்கிற மாதிரியே வாயைத் திறக்காம இருங்க!

     போலீஸின் மிரட்டலை விடவும், மனைவியின் அதட்டல் பயமுறுத்தவே, அரசாங்க ஆஸ்பத்திரியில் வாயில் தர்மாமீட்டரை வைத்ததுபோல கிட்டாமணி அமைதியானார். ஆனாலும், தன் குழந்தைக்குத்தான் முதல் நேர்முகத்தேர்வு என்றதை எண்ணி, ஆறுதலும் படபடப்புமாய் எப்போது கூப்பிடுவார்கள் என்று கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்.

     பாப்பா!குழந்தையைக் கொஞ்சினாள் பாலாமணி. “உள்ளே பிரின்சிபல் என்ன கேட்டாலும் டக்கு டக்குன்னு பதில் சொல்லணும் கண்ணு! உள்ளே போய் வெளியே வர்ற வரைக்கும் உங்கப்பாவை மறந்திடணும். இல்லாட்டா அவரு மாதிரியே தத்துப்பித்துன்னு எதையாவது உளறினா வம்பாப் போயிடும்.

     சரிம்மா, ஃபீஸ் கட்டச்சொன்னா மட்டும்தான் அப்பாவைப் பத்தி ஞாபகப்படுத்திக்குவேன். போதுமா?என்றாள் குட்டிப்பாப்பா.

     குட் மதர்; குட் டாட்டர்,என்று தலையிலடித்துக் கொண்டார் கிட்டாமணி. “எப்படியோ, என் பொண்ணுக்கு இந்த ஸ்கூல்லே அட்மிஷன் கிடைச்சிட்டா போதும்.

     மிஸ்டர் கிட்டாமணி! மிசஸ் பாலாமணி!என்று பியூன், கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் கத்துவதைப் போல உரக்க அழைத்தான்.

     நாங்கதான்! நாங்கதான்!என்று முண்டியடித்து முன்னால் சென்றனர் கிட்டாமணியும் பாலாமணியும்.

     பிரின்சிபல் கூப்புடுறாரு! உள்ளே போங்க!

     பில்லா-II முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் டிக்கெட் கிடைத்த தல ரசிகர்களைப் போல, கிட்டாமணி தம்பதியர் குட்டிப்பாப்பாவை இழுத்துக்கொண்டு ஓடி பிரின்சிபல் அறையை அடைந்தனர்.

     உட்காருங்க!என்று சொன்ன பிரின்சிபலைப் பார்த்தால், தமிழ் சீரியல்களில் ஏழை அம்மா ரோலில் நடிப்பவர்போல கொழுக்கு மொழுக்கென்று படுபுஷ்டியாக இருந்தார்.
    
            பொண்ணோட ஜாதகத்தைக் கொடுங்க!என்று பிரின்சிபல் சொன்னதும் கிட்டாமணியும் பாலாமணியும் அட்ரஸ் தெரியாமல் அண்ணா நகருக்கு வந்தவர்கள்போல விழித்தார்கள்.

     ஜாதகம் கொண்டு வரலை மேடம்! பர்த் சர்டிபிகேட் தான் இருக்கு!

     ஓ!என்று பர்த் சர்டிபிகேட்டை வாங்கிப் பார்த்தார் பிரின்சிபல்,ஓ, செப்டம்பர் மாசமா? என்ன நட்சத்திரம்?

     மகம்!என்று குழப்பத்துடன் கூறினார் கிட்டாமணி.

     சூப்பர்! மகம் ஜகம் ஆளும்னு சொல்லுவாங்க!என்றார் பிரின்சிபல்,அது சரி, பொண்ணுக்கு என்ன போடுவீங்க?

     டிரஸ் தான் போடுவோம்! என்றாள் பாலாமணி.

     அதைக் கேட்கலீங்க? தங்கம் எவ்வளவு பவுன் போடுவீங்க, வெள்ளிப்பாத்திரம் எவ்வளவு? பித்தளைப் பாத்திரம் எவ்வளவு? சீர்முறுக்கு எவ்வளவு செய்வீங்க?

     மேடம்!கிட்டாமணி குழப்பத்தோடு கேட்டார். “இப்பத்தானே ஸ்கூல் அட்மிஷனே ஆகப்போகுது! இப்ப எதுக்குக் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கணும்?

     இந்த ஸ்கூலிலே எல்லாத்தையும் கேட்டுக்குவோம் சார். அப்பத்தானே அதோட எதிர்காலம் பிரைட்டா இருக்கும்.

     நான் அப்பவே சொன்னேன்,என்று கிட்டாமணி காதில் முணுமுணுத்தாள் பாலாமணி. “ஸ்கூல் கீழ்ப்பாக்கத்துலே இருக்கு. இங்கே பாப்பாவை அட்மிட் பண்ணினா, வீட்டுலே  நீங்க படுத்துறது போதாதுன்னு இங்கேயும் அவஸ்தைப்படும்னு....

     இரு, அவங்க என்னதான் சொல்றாங்கன்னு கேட்போம்!என்ற கிட்டாமணி, “மேடம், எப்படியாவது என் குழந்தைக்கு அட்மிஷன் கொடுத்திருங்க. உங்களுக்குக் கோடி புண்ணியம்.

     அது சரி, உங்களுக்கு வரப்போற மாப்பிள்ளை டாக்டராயிருக்கணுமா, இஞ்ஜினீயரா இருக்கணுமா?என்று கேட்டார் பிரின்சிபல்.

     என்னது?அதிர்ந்தாள் கிட்டாமணி. “என்ன மேடம், வந்ததுலேருந்து பொண்ணு கல்யாணத்தைப் பத்தியே பேசிட்டிருக்கீங்க. நாங்க வந்திருக்கிறது ஸ்கூல் அட்மிஷனுக்கு.

     அடாடா! நீங்க எங்க விளம்பரத்தைச் சரியா பார்க்கலே போலிருக்கு! சமீபத்துலே சைனாவுலே ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சிருக்காங்க! அந்த ஸ்கூல்லே படிக்கிறபொண்ணுங்களுக்கு, எப்படிப் பணக்கார மாப்பிள்ளைகளை வளைச்சுப் போடுறதுன்னு சொல்லிக்கொடுக்கிறாங்களாம்! பணக்காரப் பசங்க எப்படி இருப்பாங்க, என்ன சாப்பிடுவாங்க, அவங்களை எப்படி மடக்கலாம்னு விலாவரியா சொல்லிக் கொடுக்கிறாங்களாம். அதைப் பாத்துத்தான் இந்த ஸ்கூலையும் நாங்க ஆரம்பிச்சிருக்கோம்.

     என்ன விளையாடறீங்களா?எரிந்து விழுந்தார் கிட்டாமணி. “எதுக்குத்தான் ஸ்கூல் நடத்துறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா? நம்மூரிலே பணக்காரப்பசங்களை மடக்கிறதெல்லாம் பெரிய விஷயமா? பகல் நேரத்துலே எல்லாப் பயபுள்ளைகளும் லேடீஸ் காலேஜ் வாசல்லே நின்னுக்கிட்டிருப்பாங்க. ராத்திரியானா பப்பு, கிளப்புன்னு சுத்திட்டிருப்பாங்க! மெரீனா பீச், சாந்தோம் பீச், எலியட்ஸ் பீச்லே ஒரு சுத்து சுத்தினா எத்தனை இளிச்சவாயனுக சுத்திட்டிருப்பாங்க? இல்லாட்டா, சிட்டி செண்டர், அம்பா ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூன்னு போனா வாட்ச்மேன் மாதிரி வாசல்லேயே நின்னுக்கிட்டிருப்பாங்க! பர்கரும் பிஸ்ஸாவும் தின்னு பக்கத்துலே போனாலே கப்படிக்கும்.  இந்த ஸில்லி மேட்டருக்கெல்லாம் ஸ்கூலா?

     புரியுது சார்,என்றார் பிரின்சிபல். “நம்ம ஊருக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லைதான். அதுனாலே தான், நாங்க சைனாவை விட பெட்டரா ஒரு சிலபஸ் வச்சிருக்கோம். அதாவது, உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ரெடியாகுறதுக்கு முன்னாலே எங்க ஸ்கூலிலேயே ஒரு கல்யாண மண்டபம் ரெடியாயிரும். இதுக்குன்னே புரோகிதர், சமையல்காரர், நாதஸ்வரக்காரர், இவ்வளவு ஏன், சீட்டுக்கச்சேரி, சம்பந்திச்சண்டைக்குக் கூட ஆளை அப்பாயிண்ட் பண்ணப்போறோம். உங்க பொண்ணுக்கு ஸ்கூலிலேயே கல்யாணமும் ஆகியிருக்கும். சொல்லுங்க சார், எப்ப ஃபீஸைக் கட்டப்போறீங்க?

     மேடம்! ஆளை விடுங்க!என்று அலறியவாறு கிட்டாமணியும் பாலாமணியும் குழந்தையை இழுத்துக் கொண்டு வெளியேறினார்கள்.

     சார்...சார்!வரிசையில் நின்ற ஒருவர் கிட்டாமணியை அழைத்தார். “எப்படி சார், அட்மிஷன் கிடைச்சிடுச்சா? என் குழந்தைக்கும் அட்மிஷன் கிடைக்குமா சார்?

     ஓ!என்றார் கிட்டாமணி கடுப்புடன். “உள்ளே போறதுக்கு முன்னாடி, அவங்க கேட்கப்போற கேள்விக்கு பதிலை ரெடியா வச்சிக்கோங்க!

     என்ன சார் கேட்பாங்க?

     உங்க பொண்ணோட தலைப்பிரசவத்தை எங்க வச்சுக்குவீங்க? ஸ்கூல்லேயா? வீட்டுலேயா? “

Friday, July 13, 2012

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!



 
                சத்தியமூர்த்தி பவனுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் (பெயரு ஞாபகமில்லீங்க!) விஜயம் செய்திருந்ததால், வழக்கத்தைக் காட்டிலும் கட்டிடம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தலைவரின் அறையிலிருந்து வந்த சத்தத்திலிருந்தே, அவர் கோபமாக இருப்பதை வெளியிலிருந்த வாட்ச்மேனும் தோட்டக்காரனும் அறிந்து கொண்டனர்.

      என்னய்யா இது? ஆபீசுலே ஈ, காக்காய் இல்லை. இந்த மனுசன் எதுக்கு இப்படிக் கத்திட்டிருக்காரு?என்று வியப்புடன் கேட்டார் வாட்ச்மேன்.

      ஒருத்தரும் இல்லேங்குறதுக்காகக் கட்சியை வளர்க்காமலா இருக்க முடியும்? அதான் கத்திட்டிருக்காரு!என்று விளக்கினார் தோட்டக்காரன்.

      யோவ் வாட்ச்மேன்!என்று தலைவரின் அறையிலிருந்து சத்தம் வெளிப்பட்டது.

      யோவ், உன்னைக் கூப்பிடுறாரய்யா!தோட்டக்காரர் பதைபதைத்தார். “உஷாரா இரு, மனுசன் கோபமாயிருக்காரு! பார்த்து நடந்துக்க, இல்லாட்டி இருக்கிற கடுப்புலே உன்னை ராஜ்யசபா எம்.பியாக்கிட்டா விபரீதமாயிடும்.

                மிகுந்த அச்சத்தோடு தலைவரின் அறைக்குள் நுழைந்தார் வாட்ச்மேன்.

      குட் மார்னிங் சார்!

      யோவ் வாட்ச்மேன்? இளையராஜா எங்கேய்யா போனாரு?

      எந்த இளையராஜா சார்?

      என்னய்யா இப்படிக் கேட்குறே? இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா!

      வாட்ச்மேன் தலைசொரிந்தார். “சார்..வந்து...அவரோட பேரு யுவராஜான்னில்லே நினைச்சிட்டிருக்கேன் சார்.

      நினைப்பே நினைப்பே! இப்படி ஆளாளுக்கு ஒண்ணொண்ணு நினைக்கிறவனெல்லாம் எதுக்குய்யா இந்த ஆபீசுக்கு வர்றீங்க? போய் இளையராஜா எங்கேயிருந்தாலும் போய்க் கண்டுபிடிச்சு என்னை வந்து பார்க்கச் சொல்லு.

      குழப்பத்தோடு வாட்ச்மேன் வெளியே வருவதைப் பார்த்ததும், தோட்டக்காரன் கேட்டார்.

      என்னய்யா ஆச்சு?

      இளையராஜாவைக் கண்டுபிடிக்கணுமாம்!

      எதுக்கு? கட்சியிலே படமெடுக்கப் போறாங்களாமா?

      அடப்போய்யா, இந்தக் கட்சிக்காரங்க அந்த மாதிரி குடிசைத்தொழிலெல்லாம் பண்ணற ஆளுங்களா? யுவராஜா சாரைப்போயி இளையராஜான்னு சொல்லிட்டிருக்காரு தலைவரு!

      சும்மா உளறாதே! நம்ம கட்சி ஆளு யுவராஜா பேரை தலைவர் மறந்துடுவாரா? நீ சரியாக் காதுலே வாங்கியிருக்க மாட்டே!

      சரிதான்! எது எப்படியோ, இந்தச் சாக்குலே நான் அப்படியே வெளியே போயி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்திடறேன். தலைவரு கூப்பிட்டுக் கேட்டா இளையராஜாவைத் தேடப்போயிருக்காருன்னு சொல்லு. சரியா?

      யோவ், நீயாவது சரியாச் சொல்லு! அவரு பேரு யுவராஜா; இளையராஜா இல்லை!

      கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல, காங்கிரஸ் ஆபீஸில் வாட்ச்மேன் கூட மற்றவர்கள் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டார் என்பதை அறியாத தோட்டக்காரன் கூவ, அதை அலட்சியம் செய்தபடி வாட்ச்மேன் வெளியேறினார்.

      யோவ் வாட்ச்மேன்!மீண்டும் தலைவர் அறையிலிருந்து போன் வந்தது.

      ஐயா!தோட்டக்காரர் பவ்யமாகக் கைகட்டியபடி தலைவர் முன் நின்றார். “ வாட்ச்மேன் இளையராஜாவைத் தேடப் போயிருக்காரு!

      யாருய்யா?

      நான் தோட்டக்காரனுங்க!

      அது எனக்குத் தெரியாதா? வாட்ச்மேன் இளையராஜாவைத் தேடிப் போயிருக்கிறதா சொன்னியே! யாரு இளையராஜா?

      சார், நம்ம இளைஞர் அணித் தலைவர் சார்! தோட்டக்காரர் பணிவுடன் கூறினார்.

      என்னய்யா விளையாடறீங்க? அவரு பேரு இளையராஜாவா? யுவராஜா! இப்படித்தான், அமெரிக்காவுலேருந்து வெளிவர்ற ‘டைம்ஸ்பத்திரிகையைக் கொளுத்துறதுக்குப் பதிலா நம்ம ஊரு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவைக் கொளுத்தி மானத்தை வாங்கியிருக்காங்க! அது விஷயமாக் கேட்கலாம்னு கூப்பிடச்சொன்னா, யுவராஜாவுக்குப் பதிலா இளையராஜாவைத் தேடிப் போயிருக்காரு வாட்ச்மேன்!


      சார், நீங்க சொன்னதைச் சரியாக் காதுலே வாங்கிக்கலே போலிருக்கு!

      கரெக்ட்! இந்தக் கட்சியிலே எப்படி உருப்படுறதுன்னு வாட்ச்மேனுக்குக் கூடத் தெரிஞ்சிருக்குய்யா! சரி, யுவராஜா வந்தவுடனே ரூமுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லு! தில்லிலேருந்து போன் மேலே போன் வந்திட்டிருக்கு! பிரதமர் சரண்சிங் ரொம்பக் கோபமாயிருக்காரு!

      என்னது?தோட்டக்காரர் அதிர்ந்தார். “ நம்ம பிரதமர் பேரு மன்மோகன் சிங் சார்! சரண்சிங்னு சொல்றீங்க?

      என்ன நீ, மமதா பானர்ஜீ மாதிரி கேள்வி மேலே கேள்வி கேட்டுட்டிருக்கே? எல்லாம் இந்த யுவராஜா கொடுக்கிற இடம்! வரட்டும், அடுத்தவாட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வரட்டும். எல்லாரையும் போட்டுக் கொடுக்கிறேன்!என்று உறுமினார் தலைவர்.

      ராஜீவ் காந்தியா?தோட்டக்காரர் அதிர்ந்தார்.

      ஏன்யா அதிர்ச்சியடையுறே? எங்களுக்குச் சொல்லாம மாத்திட்டாங்களா? தலைவர் முகத்தில் கவலை படர்ந்தது.

      ஒண்ணுமில்லே சார்!தோட்டக்காரன் நகர ஆரம்பித்தார். “ நீங்க சொல்றதுதான் சரி சார். நான் போயி யுவராஜா வந்தா உள்ளே அனுப்புறேன் சார்!

      என்னது, நான் சொல்றது சரியா?வியப்புடன் கேட்டார் தலைவர். “என்கிட்டே இப்படிச் சொன்ன முத ஆளு நீ தான்யா! அடுத்தவாட்டி தமிழ்நாட்டுக்கு அன்னை இந்திரா காந்தி வரும்போது உன்னைப் பத்திச் சொல்றேன்யா!

      தோட்டக்காரர் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று வெளியே ஓடவும், யுவராஜா உள்ளே நுழைந்தார்.

      என்னய்யா ஆச்சு?என்று பதட்டமாக இருந்த தோட்டக்காரரை வினவினார்.

      தலைவர் ரொம்ப டென்ஷனா இருக்காருங்க!என்றார் தோட்டக்காரர்.

      இருக்காதா பின்னே? ஜனாதிபதி தேர்தல் முடியுறவரைக்கும் அப்படித்தான் இருக்கும். எப்படியாவது ராணி முகர்ஜீ ஜெயிச்சிடணும்னு ரொம்ப டென்சனா இருப்பாரு தலைவரு!என்றார் யுவராஜா.

      ராணி முகர்ஜியா? தோட்டக்காரர் பரிதாபமாகக் கேட்டார்.

      இல்லியா? மேலிடத்தோட செலக்‌ஷன் எப்பவுமே சூப்பர்தான்! அதுவும் இப்போ ஜனாதிபதியா இருக்கிற மேடம் ஸ்மிதா பாட்டீல் மாதிரியே ஒரு நல்ல வேட்பாளரைத் தான் தேர்ந்தெடுத்திருக்காங்க!

      நீங்க உள்ளே போங்க சார்,தோட்டக்காரர் வழி விட்டார். “எனக்குக் காதுலே அல்சர் வரும் போலிருக்குது. போய் கொஞ்சம் மோர் சாப்பிடுறேன்.

      தோட்டக்காரர் மோர் குடித்துவிட்டுத் திரும்பியபோது, வாசலில் வாட்ச்மேன் மூர்ச்சையுற்றுக் கிடந்தார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார் தோட்டக்காரர்.

      யோவ், ஏன்யா விழுந்து கிடக்கே? என்னாச்சு?

      எனக்கு நினைவு வந்திருச்சா?”  மலங்க மலங்க விழித்தார் வாட்ச்மேன். “யோவ், இந்த இடத்தை விட்டு ஓடிரலாம்யா! இன்னும் கொஞ்ச நாள் இருந்தோம், நாமளும் இவங்க மாதிரியே பேச ஆரம்பிச்சிடுவோம்!

      விசயத்தைச் சொல்லுய்யா!

      நான் திரும்பி வந்தபோது உள்ளே தலைவரும் யுவராஜாவும் பேசிட்டிருந்தாங்களா? அப்போ டெல்லிலேருந்து போன் வந்தது. நான் தான் எடுத்தேன். அவங்ககூட பேசிட்டிருக்கும்போதே தலை கிறுகிறுன்னு வந்து அப்படியே பொத்துன்னு விழுந்திட்டேன்யா!புலம்பினார் வாட்ச்மேன்.

      அப்படியா? என்னய்யா அப்படிக் கேட்டாங்க?

      வரவர தமிழ்நாடு காங்கிரஸ் ரொம்ப மோசமாயிருக்கு! ‘டைம்ஸ்பத்திரிகைக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாபத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியாதாய்யா உங்களுக்கு? தலைமை ரொம்பக் கோபத்துலே இருக்காங்க.! தலைவரை உடனே தில்லிக்குப் போன்போட்டுப் பேசச்சொல்லுங்கன்னு சொன்னாங்கய்யா!

      இது தினசரி நடக்குறதுதானே? நீ இதுக்கா மயக்கம்போட்டு விழுந்தே?

      இல்லையா! கடைசியா அவங்க சொன்னதைக் கேட்டுத்தான் மயங்கிட்டேன்!

      என்னய்யா சொன்னாங்க கடைசியா?

      அடுத்த தலைவர்.....அடுத்த தலைவர் காமராஜ்னு சொன்னாங்கய்யா!

      தோட்டக்காரர் தலைசுற்றி விழுந்து மூர்ச்சையானார்.