வைகுண்டத்தின் வாசலையடைந்த வையாபுரி, பீக்-அவரில் காலியாக வந்த மகளிர் ஸ்பெஷல் பஸ்ஸைப் பார்த்ததுபோலத் திடுக்கிட்டான்.
”நரனே, யார் நீ? எமலோகத்திலிருந்து எஸ்கேப் ஆகி வந்து விட்டாயா?” என்று வினவினார் துவாரபாலகர்.
”என் பேரு வையாபுரி! மகாவிஷ்ணுவைப் பார்க்குறதுக்காக வந்திருக்கேனய்யா,” என்று அறிமுகப்படுத்திக் கொண்ட வையாபுரி, “அது சரி, நான் பார்த்த படத்துலே எல்லாம் வைகுண்டம்னா ஒரே புகைமண்டலமா இருக்குமே? இப்போ நீங்களும் மைக்ரோ-வேவ் ஓவனுக்கு மாறிட்டீங்களா? புகையே காணோம்?”
”அற்பமானிடா! எங்குவந்து என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்? எங்கள் பரந்தாமனின் சக்கராயுதம் கிளம்பினால் உன் கழுத்தை வெள்ளரிப்பிஞ்சு போல நறுக்கிவிடும்!” என்று உறுமினார் இன்னொரு துவாரபாலகர்.
”அடப்போய்யா, நானே சகுனி படம் பார்த்துட்டுத்தான் வைகுண்டத்துக்கே வந்திருக்கேன். உங்க சக்ராயுதம் என்னை என்ன பண்ணிடும்?”
”என்ன கூச்சல் இங்கே?” என்று கேட்டபடி, சங்குசக்ரகதாபாணியாக வெளியே வந்தார் மகாவிஷ்ணு.
”ஆஹா! மகாவிஷ்ணுவா?” என்று அவர் காலில் விழுந்து எழுந்து கும்பிடு போட்டான் வையாபுரி. “சாமி, கர்ணன் படத்துலே வந்த என்.டி.ராமராவ் மாதிரியே இருக்கீங்க! என் பேரு வையாபுரி! இந்த உலகத்துலேயே என்னை மாதிரி உங்களுக்கு ஒரு பக்தன் இருக்க முடியாது. என்னைப் போயி எமலோகத்துக்குப் போகச்சொல்றாங்களே! இது நியாயமா?”
”பக்தா! எதை வைத்து நீ தான் சிறந்த பக்தன் என்று சொல்கிறாய்?” என்று கேட்டார் பகவான்.
”இன்னா அப்படிக் கேட்டுட்டே? பூலோகத்துலே நான் பினாமி பேருலே நடத்திட்டிருக்கேனே அந்தக் காலேஜுக்கு திருமால் கல்லூரின்னுதான் பேரு வைச்சிருக்கேன்! அப்புறம் என்னோட கந்துவட்டிக் கடைக்குப் பேரு கூட கோவிந்தா அண்ட் சன்ஸ்! மணல் திருடுற லாரியிலே கூட ‘ நமோ நாராயணா’ன்னுதான் எழுதியிருக்கேன்! இவ்வளவு ஏன், என் பொஞ்சாதிக்குத் தெரியாம வைச்சிருக்கேனே ஒரு சின்ன வீடு, அதுக்குக் கூட கிருஷ்ண விலாசம்னுதான் பேரு வச்சிருக்கேன்!”
”அட மானிடா! என் பெயரைச் சொல்லி செய்யக்கூடாத செயல் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறாயே?” என்று சினந்தார் பகவான்.
”உருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சாமி? இந்த மாதிரி டகால்டி வேலைக்குத்தான் சாமி பேரையோ, ஆசாமி பேரையோ சொல்லி எல்லாரும் பொழைப்பு நடத்திட்டிருக்கோம்!”
”சரியப்பா,” என்று சலித்துக் கொண்டார் பகவான். “ நீ சொல்வதுபோல உண்மையிலேயே நீதான் சிறந்த பக்தன் என்றால் அதை நிரூபிப்பாயா? எனது சோதனையை ஏற்றுக்கொள்வாயா?”
”சொல்லுங்க சாமி! இன்னா பண்ணனும்? சிறை நிரப்பணுமா? உண்ணாவிரதம் இருக்கணுமா? தீக்குளிக்கணுமா? எவனையாவது போட்டுத் தள்ளணுமா? கட்டளையிடு தலைவா, கபால்னு புடிச்சுக்கிறேன்.”
”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்!” என்று பகவான் கையை நீட்டவும், அவரது கையில் ஒரு கிண்ணம் நிறைய எண்ணை தோன்றியது.
”மானிடனே! இந்தக் கிண்ணத்தைக் கையில் ஏந்திக்கொண்டு வைகுண்டத்தை ஒரு முறை வலம்வர வேண்டும். ஒரு துளி எண்ணை கூட கீழே சிந்தக்கூடாது. சரியா?”
”சர்தான் தலீவா, கொடு!” என்று வாங்கிக் கொண்டு வையாபுரி வைகுண்டத்தை வலம்வரத் தொடங்கினான். சற்று நேரத்தில்....
” நாராயண.... நாராயண...!” என்று உச்சரித்தபடி வந்தார் நாரதர்.
”வா நாரதா! பார்த்து வெகு நாளாகிவிட்டதே!”
”அதையேன் கேட்கிறீர்கள் பிரபோ? பூலோகம் சென்றிருந்தேன்! தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு! சூரியபகவான் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறார்! தங்கும் விடுதியில் ஒரே புழுக்கமாய் இருந்தது. அங்கிருந்த உழியரை அழைத்து, ‘ஒரே புழுக்கமாயிருக்கிறது. கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,’ என்று யதார்த்தமாகச் சொன்னேன். அடுத்த கணமே காவல்துறை வந்து குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.” என்று புலம்பினார் நாரதர்.
”என்ன கொடுமையிது? வரவர வாயைத் திறந்தாலே வம்பாகி விடும் போலிருக்கிறதே?” என்று அலுத்துக் கொண்டார் பகவான்.
”என் கதையிருக்கட்டும்! எமலோகத்திலிருந்து ஒரு நரன் தப்பித்து வைகுண்டம் வந்து விட்டானாமே? யார் அவன்?” என்று வினவினார் நாரதர்.
”யாரோ வையாபுரியாம்!”
”என்னது? வையாபுரியா?” அதிர்ந்தார் நாரதர். “அவன் எங்கே?”
”ஏன் பதறுகிறாய் நாரதா? தன்னை சிறந்த பக்தன் என்று கூறினான். நானும் முன்பொரு முறை உன்னைச் சோதித்ததுபோலவே, ஒரு கிண்ணம் எண்ணை கொடுத்து வைகுண்டத்தை வலம்வரச் சொல்லியிருக்கிறேன்.”
”காரியத்தைக் கெடுத்தீர்கள் போங்கள்! அவனை எண்ணைக்கொப்பரையில் போட்டு வறுத்து தண்டிப்பதை விட்டுவிட்டு, அவன் கையில் எண்ணையையா கொடுத்தீர்கள்? அவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருப்பானோ தெரியவில்லையே!”
நாரதர் பதறியபடியே ஓட, பகவானும் வேறு வழியின்றிப் பின்தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றதும் இருவரும் அதிர்ந்து போய் நின்றார்கள்.
’ கோபால் எண்ணை மண்டி’ என்று ஒரு போர்டு மாட்டப்பட்டிருக்க, அதில் கல்லாவில் வையாபுரி உட்கார்ந்திருந்தான்.
”என்ன துணிச்சல் இந்த மானிடனுக்கு? வைகுண்டத்திலேயே வந்து வியாபாரம் ஆரம்பித்து விட்டானே?” என்று பொரிந்தார் நாரதர்.
” நாரதா, இவனுக்கு நான் ஒரு கிண்ணம் எண்ணை தானே கொடுத்தேன்? அதை வைத்துக் கொண்டு அவன் இத்தனை பெரிய கடையை எப்படி உருவாக்கினான்?” குழம்பினார் பகவான்.
”சரிதான்! பூலோகவாசிகளால்தான் இவன் போன்றவர்கள் எப்படி வளர்ச்சியடைகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பரந்தாமன் உங்களுக்குமா புரியவில்லை?”
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த வையாபுரி, கையை உற்சாகமாக அசைத்தான்.
”ஹலோ விஷ்ணு! ஹாய் மிஸ்டர் நாரதர்! வாங்க சார்! நல்ல நயம் எண்ணை சார்! வாங்கிட்டுப் போய் வீட்டுக்காரிகிட்டே கொடுங்க சார்! பஜ்ஜி போட்டா சூப்பராயிருக்கும்!”
” நாராயணா! நாராயணா!” என்று தலையிலடித்துக் கொண்டார் நாரதர். நாராயணன் வந்தவழியே வைகுண்டத்தைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்தார்.
(டிஸ்கி: இதைப் படிச்சுப்போட்டு, ‘ஆஹா, சேட்டை கடவுளை நக்கல் பண்ணிட்டான்’ன்னு சண்டைக்கு வராதீக அப்பு! சாமி பேரைச் சொல்லிக்கிட்டுத் திரியுற பல பயலுவ பண்ணுற சலம்பலுக்கு முன்னாடி, என்னோட ஒரு இடுகையெல்லாம் வெறும் ஜூஜூபி!)
வழக்கம் போல் ரசித்தேன், சேட்டை :-)
ReplyDeleteKalakkal...settai....
ReplyDeleteEppading ippadi
ezhutha....
Mudiyuthu..??????
சேட்டை, ஒரே சேட்டை தான் போங்க - நாட்டு நடப்பை நையாண்டி நக்கலுடன் அருமையாக சொன்னீர்கள்
ReplyDeleteஉருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சாமி? இந்த மாதிரி டகால்டி வேலைக்குத்தான் சாமி பேரையோ, ஆசாமி பேரையோ சொல்லி எல்லாரும் பொழைப்பு நடத்திட்டிருக்கோம்!”
ReplyDeleteகிண்டலா சொல்ற மாதிரி உண்மையை சொன்னா எப்பூடி..
நல்ல நகைச்சுவை விருந்து தான்.
ReplyDelete//”இன்னா அப்படிக் கேட்டுட்டே? பூலோகத்துலே நான் பினாமி பேருலே நடத்திட்டிருக்கேனே அந்தக் காலேஜுக்கு திருமால் கல்லூரின்னுதான் பேரு வைச்சிருக்கேன்! அப்புறம் என்னோட கந்துவட்டிக் கடைக்குப் பேரு கூட கோவிந்தா அண்ட் சன்ஸ்! மணல் திருடுற லாரியிலே கூட ‘ நமோ நாராயணா’ன்னுதான் எழுதியிருக்கேன்! இவ்வளவு ஏன், என் பொஞ்சாதிக்குத் தெரியாம வைச்சிருக்கேனே ஒரு சின்ன வீடு, அதுக்குக் கூட கிருஷ்ண விலாசம்னுதான் பேரு வச்சிருக்கேன்!”
”அட மானிடா! என் பெயரைச் சொல்லி செய்யக்கூடாத செயல் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறாயே?” என்று சினந்தார் பகவான்.
”உருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சாமி? இந்த மாதிரி டகால்டி வேலைக்குத்தான் சாமி பேரையோ, ஆசாமி பேரையோ சொல்லி எல்லாரும் பொழைப்பு நடத்திட்டிருக்கோம்!”//
அருமையோ அருமை!
// ‘ஒரே புழுக்கமாயிருக்கிறது. கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,’ என்று யதார்த்தமாகச் சொன்னேன். அடுத்த கணமே காவல்துறை வந்து குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.”//
ReplyDelete:)
அருமை... ரசித்தேன் சேட்டை....
:))))))))
ReplyDeleteஹாஹாஹா... ஹிஹிஹி... ஹய்யோ... ஹய்யோ... சிரிச்சி முடிச்சிட்டேன். அப்டியே நாராயணனையும் நாரதரையும் பூலோக விஸிட்அடிக்க வெச்சிட வேண்டியதுதான...
ReplyDelete"கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,’
ReplyDeleteசாட்டையடி sattire on 'ஆனந்தா'க்களின் லீலைகள்.
நடப்பு சமாசாரங்களில் டைமிங் ஆ நக்கல் அடிப்பதில் உமக்கு நிகர் நீரேதான். தனி மனித துதி பாடும் ஆத்திக ஜென்மங்களுக்கு உரை(றை?)த்தால் சரி. மேலே தூக்கி பிடிக்கவும் (Keep it up)
நகைச்சுவையாகச் சொல்வது போலவே சில விஷயங்கள் 'நறுக்'கென்றும் சொல்லியிருக்கிறீர்கள்!
ReplyDeleteகருத்துள்ள சேட்டை !
ReplyDelete