Saturday, October 1, 2011

ஓடுவதே நதி!




முனி கி ரேத்தி! பெயரைச் சொல்லியதும் அழைத்துப்போக பல கைடுகள் தயாராயிருந்தனர். இருந்தாலும் விசுவுக்கு வழிதெரிந்தால் மட்டுமே போதுமென்பதால், தனியாகவே போனார். பெரிய பெரிய கற்களையும், மலைப்பாம்புகள்போல் நிலத்தில் நெளிந்துகொண்டிருந்த மரங்களின் வேர்களையும் வெறுங்கால்களால் கவனமாய்த் தாண்டியபடி, சற்றே அச்சுறுத்தும் ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் ஓங்காரத்தைக் கேட்டபடி, குளிரில் காதடைந்து போயிருந்ததையும் பொருட்படுத்தாது ஏறிக்கொண்டிருந்தார்.

ஒரு மாதத்துக்கு முன்பு அவரிடம் ரிஷிகேசம் போவது குறித்த எந்த சிந்தனையும் இருந்திருக்க வாய்ப்பில்லை; இப்போது வந்திருக்கிறார். வாழ்க்கையென்பது பலருக்குப் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிகிற ஒரு பரிகாசத்துக்குரிய விளையாட்டாகத்தானிருக்கிறது. பெரும்பாலும் சிரிப்பதற்குப் பதிலாக அழுது தொலைக்க நேரிடுகிறது. அவருக்கும் அப்படித்தான் நேரிட்டது.

ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு முன்னர், சற்றே அலுப்புமிக அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே கிளம்பி வீட்டுக்குக் கிளம்பினார். மாம்பலத்தில் இறங்கி, தண்ணீர்தெளித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை சுமக்குமளவுக்கு வாங்கிக்கொண்டு, கொஞ்சமாய் மனைவிக்குப் பூவுடன், சிரமத்துடன் உஸ்மான் சாலையைக் கடந்து கிருஷ்ணவேணியை அடுத்த சந்திலிருந்த வீட்டை நோக்கி நடந்தபோது, அந்தப் புகுமுக வயோதிகருக்கு மூச்சிரைத்தது. வீட்டை நெருங்கியபோது, வாசலில் பரிச்சயமான மோட்டார் சைக்கிள்; கதவருகில் பரிச்சயமான ஒரு ஜோடிச் செருப்பு. ’நானில்லாத நேரத்தில் இவன் ஏன் என் வீட்டில்....?’

அழைப்புமணியை அழுத்தியபோதுதான் மின்வெட்டு என்று புரிந்தது. கதவைத் தட்டலாமா வேண்டாமா என்று யோசிக்கத் துவங்குமுன்னர் வீட்டுக்குள்ளிருந்து சன்னமான சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கலுமாகக் கலவையாய் வந்த சத்தம் முதுகுத்தண்டுக்குள் உஷ்ணமான பல ஊசிகளை இறக்கியது. விசுவுக்கு நெற்றியில் வியர்த்து கைகால்கள் சில்லிட்டன. தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அதையும் மீறி கதவைத் தட்டினார். உள்ளே உடனடியாய் மயான அமைதியும், தொடர்ச்சியாய்க் குழப்பமான காலடிச்சத்தமும், கிசுகிசுப்பும் அடுத்தடுத்து முடிவின்றித் தொடரவும், மீண்டும் கதவைத்தட்டினார்; இம்முறை திறந்தது. 

பதற்றத்தால் பொத்தானிட மறந்த சட்டையும், வியர்த்த முகமும், கலைந்த தலையுமாய் அவசரமாய் உள்ளேயிருந்து அவன் வெளிப்பட்டு, குனிந்த தலை நிமிராமல் படியிறங்கிப் போனான். அவனைச் சட்டையைப் பிடித்து நிறுத்தவும் தோன்றாமல், விசு விக்கித்து நின்றார். செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தபோது, முகம்பொத்தியபடி அவரது மனைவி! நடந்ததவற்றிற்கு சாட்சியாய் சாத்தப்பட்டிருந்த ஜன்னல்கள்.

"இதெல்லாம் என்ன அசிங்கம்?"

அவருக்கு பதில் கிடைக்கவில்லை.

அப்போது மட்டுமல்ல; அதே கேள்வியை வேறு வார்த்தைகளால் புதுப்பித்துப் பலமுறை  கேட்டபோதும் ஒவ்வொருமுறையும் எரிச்சலூட்டும் அழுகையே பதிலாய் வந்தது. இறுதியாக, விசுவின் கேள்விக்குப் பதிலாக அவள் அன்றிரவே ஜமுக்காளத்தில் தூக்குப்போட்டுத் தப்பித்துக்கொண்டாள். கதவை உடைத்து உள்ளே போனபோது, கண்கள் பிதுங்கி, நாக்குதள்ளி, கழுத்து நீண்டு, இரண்டு தொடைகளிலும் நகங்கள் பிறாண்டிய காயங்களுடன் பிணமாகியிருந்தாள். தரையெங்கும் அவளது இறுதி அசுத்தம், யாக்கையின் சுருக்கமான பொழிப்புரையாகச் சிதறிக் கிடந்தது.

’அடிப்பாவி, இப்போ பேசின மனசு முன்னாலேயே பேசியிருக்கக் கூடாதா?’

அடுத்தடுத்து நடந்தவையெல்லாம் ஒரு கோர்வையான நீளமான கனவு போலிருந்தன. அக்கம்பக்கத்தார் வருகை, சொந்தபந்தங்களுக்குத் தகவல், போலீஸ், அரசு மருத்துவமனையில் காத்திருந்து இருபத்தைந்து வருட மனைவியை ஒரு பொட்டலமாய்க் கொண்டுவந்தது, சடங்குகள் என்று மனம்விட்டுக் கண்ணீர் விடுவதற்கும் அவகாசமில்லாமல் எல்லாம் நடந்தேறின.

"வயித்துவலின்னு துடிப்பாங்க! யூட்டரஸ் எடுக்கலாமுன்னா டயாபடீஸ் வேறே இருந்தது! ரொம்ப அவஸ்தைப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்! பாவம், இனிமே முடியாதுன்னு போயிட்டாங்க போலிருக்குது." யாரோ சொல்லச் சொல்ல ஒரு போலீஸ்காரர் குறித்துக்கொண்டிருந்தார். பல வாக்குமூலங்கள்; ஏராளமாய்க் கேள்விகள்.

விசுவின் கண்ணியமும், வயதும், அவர்கள் மற்றவர்களின் கண்பட வாழ்ந்த வாழ்க்கையும் யாருக்கும் எந்த விபரீதமான சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. மென்று விழுங்கி ரோஷமின்றி வாழ்பவனை கண்ணியவான் என்றும், சற்றே விறைத்து உணர்ச்சிவசப்படுபவனை மூர்க்கன் என்றும் உலகம் தன் வசதிக்கேற்ப அடையாளம் கண்டுகொள்கிறது.

அடுத்தநாள் செய்தித்தாளில் ’வலிதாளாமால் தற்கொலை’ என்று ஒரு மூலையில் செய்தி போட்டார்கள்.

"ஒரு பரிகாரம் பண்ணிரலாம்! நாலு குடித்தனம் இருக்கிற இடம்," என்று யாரோ சொல்லவும், விசு மறுப்பேதும் சொல்லாமல் ஏற்பாடு செய்தார். இறுதிச்சடங்குகளைச் செய்த புரோகிதரே விசுவின் மனைவி தூக்கில் தொங்கிய அறையில் பரிகாரங்களும் செய்தார்.

"அச்சுதாய, அனந்தாய, கோவிந்தாய, கேசவாய, நாராயணாய, மாதவாய, விஷ்ணவே, மதுசூதனாய, த்ரிவிக்ரமாய, வாமநாய, ஸ்ரீதராய, ரிஷீகேசாய, பத்மநாபாய, தாமோதராய..."

திருமாலின் பலநாமங்களைக் கேட்டபோது, ’ரிஷிகேசாய’ என்பது மட்டும் விசுவின் காதுக்குள்ளே ஆணியிறங்குவது போல அழுந்திப்புகுந்து கொண்டது. ’ரிஷிகேசம் போகணும்’ என்று அவருக்குள்ளிருந்து ஒரு அசரீரி கேட்டது. அபத்தமாக, அசந்தர்ப்பமாக அப்படியொரு எண்ணம் கிளம்பியது ஏன் என்று புதிராயிருந்தது.

இதோ, ரிஷிகேசத்துக்கு வந்தாயிற்று!

லட்சுமண்ஜூலாவை நடந்து கடக்கையில், தன்னிச்சையாய் பக்கவாட்டில் குனிந்து பார்த்தபோது ஓவென்ற இரைச்சலுடன் கங்கை சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. ’எனக்கு முன்னால் எல்லாம் தூசு,’ என்று இறுமாந்து சிரிப்பதுபோலிருந்தது அதன் பேரரவம். மறுகரையிலிருந்த படிக்கட்டை அடைந்து, மிகுந்த பயத்தோடு குளிக்க இறங்க முற்பட்டபோது, நீரோட்டம் மின்சாரம்போல கால்களைத் தாக்கியது.

"ஸாவ்தான்!" அருகில் குளித்துக்கொண்டிருந்த சாமியார் எச்சரித்தார். கங்கை இழுத்துக் கொண்டு போயிருந்தாலும் விசு வருந்தியிருக்க மாட்டார். ’போதுண்டா சாமி,’ என்று வாழ்க்கையின்மீது காறி உமிழ்கிற மனநிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். நூற்றுக்கணக்கான மைல்கள் தாண்டிவந்தும், சீதோஷ்ணம் தலைகீழாகியிருந்தும், காட்சிகள் மாறியும் அன்று கதவைத் தட்டிய விரல்களில் இன்னும் அதன் அதிர்வுகள் மிச்சமிருப்பதைப் போலுணர்ந்தார்.

’பேரன் பேத்தி எடுக்குற வயசுலே, உன் புத்தி ஏன் இப்படிப்போகணும்? ஏன் சாகணும்? த்தூத்தெறி!’

கங்கையில் குளித்தெழுந்தும் உடல் இன்னும் பற்றியெரிவது போலவும், உள்ளுக்குள் இன்னும் புகைமூட்டம் புழுக்கமாய் மண்டியிருப்பது போலவும்தான் உணர்ந்தார் விசு. நாளை அதிகாலையிருட்டில், இன்னும் பனிவிலகாத குளிரில், ஆளரவற்ற அமைதியில் மீண்டும் கங்கைத்தண்ணீரில் விழுந்து முங்கியெழ வேண்டும் போலிருந்தது. நம்மைப் போலவே வாழ்க்கையோடு முட்டி மோதி முளைத்து வலியோடு வெறுத்தவர்கள் இருக்குமிடத்தில் உட்கார்ந்து சற்றே புலம்பவும், அழுது களைத்தபின் உறங்கவும் ஒரு இடம் தேவைப்பட்டபோதுதான் யாரோ சொன்னார்கள் - முனி கி ரேத்தி!

ராம, லட்சுமண, பரத, சத்ருக்னர்கள் வசிஷ்டாதி முனிவர்களுடன் ரிஷிகேசம் வந்தபோது, அவர்களை அங்கிருந்த மணலும் வரவேற்றதால் முனி கி ரேத்தி(மணல்) என்று ஒரு கதையும், அபியர் எனும் முனிவர் அங்கு மவுனத்தவமிருந்ததால் மோன் கி ரேத்தி என்று பெயரிடப்பட்டு, பின்னாளில் முனி கி ரேத்தி என்று மருவியதாக இன்னொரு கதையும் இருப்பதாய் விசு அறிந்து கொண்டார். இதில் எந்தக் கதை வேண்டுமானாலும் உண்மையாயிருக்கலாம் அல்லது இரண்டுமே பொய்யாக இருக்கலாம். ஆனால், அப்போதைக்கு தான் ரிஷிகேசத்துக்கு வந்திருப்பது தவிர அனைத்துமே விசுவுக்குப் பொய்யாகத் தோன்றியது.

மனிதன் ஏமாந்தால், அவனுக்குப் பொய்யின் மீது இருக்கிற அதே வெறுப்பு உண்மையின் மீதும் ஏற்படுகிறது. இல்லாவிட்டாலும் ’உண்மையாகவே இருந்தாலும் எனக்கென்ன?’ என்ற முரண்டு பிறக்கிறது. விரக்தி பரவுகிற வேகத்தில் ஓடுகிற எந்த நதியையும் இயற்கை இன்னும் படைக்கவில்லை போலும்.

முனி கி ரேத்தி அல்லது மோன் கி ரேத்தி சிறியதும் பெரியதுமாய் கோவில்களும் மடங்களுமாய் இருந்தன. ஊதுபத்தி வாசனையும், சப்பாத்தியின் நெடியும் கலந்து வந்தது. சற்றே கூட்டம் குறைவாக இருந்த ஒரு மடத்தை அடைந்து உள்ளே நுழைந்தபோது, துப்பட்டா இன்றி சுடிதாருடன், தலையில் செம்பட்டைச் சாயம் பூசியிருந்த ஒரு பெண்மணி சற்றே பெரிய மேஜைக்குப் பின் உட்கார்ந்திருந்தாள். எப்போதோ படித்த இந்தி கைகொடுத்தது விசுவுக்கு.

"இன்றைய இரவு உறங்க ஒரு அறை கிடைக்குமா?"

"ஒரு நிமிடம்!" என்று எழுந்த அந்தப் பெண்மணி, "அப்பாவை வரச்சொல்லுகிறேன்," என்று கூறியபடி நடக்கத்தொடங்க, ஒரு கணம் விசு துணுக்குற்றார். அந்தப் பெண்மணி மேலே துப்பட்டா அணிந்திருந்தபோதிலும், பைஜாமா அணியாமலிருந்ததால் அவளது கால்கள் பளிச்சென்று தெரிந்தன.

சில நொடிகளில், குள்ளமாய்க் குண்டாய் வந்த அந்தப் பெண்மணியின் அப்பாவிடம் பேசி, ஒரு அறைக்கு ஏற்பாடாகியது. குறுகலாய் ஒரு கட்டிலும், தக்கையாய் ஒரு தலையணையும், மெல்லியதாக ஒரு ஜமுக்காளமும், ஓரத்தில் ஒரு பானையும், தம்ளரும் வைக்கப்பட்டிருந்தது. கொஞ்சமாய் வெளிச்சமும் குளுகுளுப்புமாய் இருந்த அந்த அறைக்குள் நுழைந்த விசு, சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டார். 

நள்ளிரவில் குளிரில் நடுங்கியபடி கண்விழித்த விசுவுக்கு, தான் கொண்டு வந்திருந்த ஸ்வெட்டரும் சால்வையும் போதாதென்பது விளங்கியது. பழக்கமில்லாத இமயக்குளிரில் பற்கள் தாளம்போட ஆரம்பித்தன. சிறிது நேரம் கட்டிலிலேயே திருதிருவென்று விழித்திருந்துவிட்டு, மெதுவாக எழுந்து கதவைத் திறந்து வாசல்பக்கம் யாரேனும் இருந்தால் ஒரு கம்பளி கேட்கலாம் என்று கிளம்பினார்.

மேஜையில் ஒரு கையைநீட்டி, அதில் தலைசாய்த்தபடி அந்தப் பெண்மணி உறங்கிக்கொண்டிருந்தாள். சற்று அருகாமையில் சென்றதும் விசுவின் கண்கள் விபரீதமாக அலைபாயத் தொடங்கவே, அவளை எழுப்ப விரும்பாதவராய் ஒருசில விநாடிகள் அப்படியே நின்றார்.ஆனால், குளிர் அவரை விட்டால் தானே?

தொண்டையைச் செருமினார். அந்தப் பெண்மணி திடுக்கிட்டு விழித்தாள்.

"மன்னிக்கவும். எனக்கு ஒரு கம்பளி கிடைக்குமா? மிகவும் குளிராயிருக்கிறது."

"என்ன, அறையில் கம்பளி இல்லையா? அப்பா தரவில்லையா..?" என்று சோம்பலுடன் சலித்துக் கொண்டவாறு எழுந்தாள் அந்தப் பெண்மணி. "அறைக்குச் செல்லுங்கள். கொண்டு வருகிறேன்."

அறைக்குச் சென்ற விசு கம்பளிக்காகவும் அந்தப் பெண்மணிக்காகவும் காத்திருந்தார்.

தூரத்தில் கங்கை சலசலவென்று விரைந்தோடும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

நன்றி: "அதீதம்"

18 comments:

  1. மென்று விழுங்கி ரோஷமின்றி வாழ்பவனை கண்ணியவான் என்றும், சற்றே விறைத்து உணர்ச்சிவசப்படுபவனை மூர்க்கன் என்றும் உலகம் தன் வசதிக்கேற்ப அடையாளம் கண்டுகொள்கிறது.
    -reaches heart. excellent article without usual chettai. superb

    ReplyDelete
  2. அழுத்தமான உணர்வுகளை
    மிக அழுத்தமான நடையில்
    வருத்தமான மனதினை மிக
    பொருத்தமாக எழுதப் பட்டுள்ளது


    நன்றி! நண்ப!

    புலவர் சா இராமாநுச

    ReplyDelete
  3. சரளமான எழுத்து நடையில் விவரிப்பு சூப்பர்ப்....!!!

    ReplyDelete
  4. // மென்று விழுங்கி ரோஷமின்றி வாழ்பவனை கண்ணியவான் என்றும், சற்றே விறைத்து உணர்ச்சிவசப்படுபவனை மூர்க்கன் என்றும் உலகம் தன் வசதிக்கேற்ப அடையாளம் கண்டுகொள்கிறது//

    உணர்வுப்பூர்வமான புனைவிற்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. ஓடுவதே நதி!//

    நன்றாக யோசித்தால் புரிகிறது உள்ளர்த்தம், கதையின் அர்த்தமும், பொருளும் கூடவே.

    அருமை சகோ.

    ReplyDelete
  6. Beautiful article with reality and deep meaning.

    Thank you very Much :)

    ReplyDelete
  7. கத்தி மேல் காயம் படாமல் நடந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  8. எனக்கு "அதீதம் " புதிது. அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி சேட்டை. நிறைய எழுத தோன்றுகிறது அனால் வேண்டாமே என்ற எண்ணமும் வருகிறது. மேல் கொண்டு எழுதினால் வலையில் அநேகம் பேர் என்னை காறித்தான் துப்புவார்கள். நாமெல்லாம் யோகியமோ இல்லையோ யோக்கியனாக இருபதாக நினைத்துக்கொண்டுதான் எல்லோரும் வாழ்கிறோம். இதில் ஆண் என்ன பெண் என்ன?

    பொய்யாக ரிகேஷம் சென்றவரின் மீது கோபமும், செத்துப்போனவள் மீது இறக்கமும் தான் எனக்கு. நன்றி.

    ReplyDelete
  9. எனக்கு "அதீதம் " புதிது. அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி சேட்டை. நிறைய எழுத தோன்றுகிறது அனால் வேண்டாமே என்ற எண்ணமும் வருகிறது. மேல் கொண்டு எழுதினால் வலையில் அநேகம் பேர் என்னை காறித்தான் துப்புவார்கள். நாமெல்லாம் யோகியமோ இல்லையோ யோக்கியனாக இருபதாக நினைத்துக்கொண்டுதான் எல்லோரும் வாழ்கிறோம். இதில் ஆண் என்ன பெண் என்ன?

    பொய்யாக ரிகேஷம் சென்றவரின் மீது கோபமும், செத்துப்போனவள் மீது இறக்கமும் தான் எனக்கு. நன்றி.

    ReplyDelete
  10. அருமையான நடை...நல்லதொரு படைப்பு ... நண்பரே...

    ReplyDelete
  11. இன்றைய மனித உறவுகளை சிறப்பாக கூறுகிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  12. @சி.பி.செந்தில்குமார்
    @"என் ராஜபாட்டை"- ராஜா
    @விக்கியுலகம்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    //கணேஷ் said...

    -reaches heart. excellent article without usual chettai. superb//

    சிறுகதையாச்சே! மிக்க நன்றி நண்பரே! :-)

    //புலவர் சா இராமாநுசம் said...

    அழுத்தமான உணர்வுகளை
    மிக அழுத்தமான நடையில்
    வருத்தமான மனதினை மிக
    பொருத்தமாக எழுதப் பட்டுள்ளது
    நன்றி! நண்ப!//

    தமிழ்மரபே மூச்சாய்க் கொண்டிருக்கும் உங்களது இந்தப் பாராட்டு என்னை திக்குமுக்காடச்செய்கிறது ஐயா! மிக்க நன்றி! :-)

    //MANO நாஞ்சில் மனோ said...

    சரளமான எழுத்து நடையில் விவரிப்பு சூப்பர்ப்....!!!//

    அண்ணாச்சி! மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி! :-)

    //குடிமகன் said...

    உணர்வுப்பூர்வமான புனைவிற்கு வாழ்த்துக்கள்!!//

    உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு இதயபூர்வமான நன்றிகள் நண்பரே! :-)

    //Prabu Krishna said...

    நன்றாக யோசித்தால் புரிகிறது உள்ளர்த்தம், கதையின் அர்த்தமும், பொருளும் கூடவே. அருமை சகோ.//

    எழுதிமுடித்தபிறகுதான் தலைப்பு வைத்தேன். முதலில் வைத்தது ஒரு பிரபலமான சிறுகதையை நினைவுட்டுமோ என்ற அச்சத்தால்.! :-))
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    //கடம்பவன குயில் said...

    nice article.//

    Thank You Very Much! :-)

    ReplyDelete
  13. //Ah'ham said...

    Beautiful article with reality and deep meaning. Thank you very Much :)//

    Thank You very much for your lavish praise. I am delighted. :-)

    //கும்மாச்சி said...

    அருமையான நடை.//

    மிக்க நன்றி! :-)

    //ரிஷபன் said...

    கத்தி மேல் காயம் படாமல் நடந்து விட்டீர்கள்.//

    ம்! அதற்காக மேற்கொண்ட முன்னெச்செரிக்கை பலனளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி! :-)

    //கக்கு - மாணிக்கம் said...

    எனக்கு "அதீதம் " புதிது. அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி சேட்டை.//

    நீங்களும் எழுதுங்கள் நண்பரே!

    //நிறைய எழுத தோன்றுகிறது அனால் வேண்டாமே என்ற எண்ணமும் வருகிறது. மேல் கொண்டு எழுதினால் வலையில் அநேகம் பேர் என்னை காறித்தான் துப்புவார்கள். நாமெல்லாம் யோகியமோ இல்லையோ யோக்கியனாக இருபதாக நினைத்துக்கொண்டுதான் எல்லோரும் வாழ்கிறோம். இதில் ஆண் என்ன பெண் என்ன?//

    இரட்டைநிலை என்பது நமக்கெல்லாம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதற்கு சுயநலம் மட்டுமே எப்போதும் காரணமாயிருப்பதில்லை; விதிவிலக்காக சில சமரசங்களைச் செய்துகொண்டு, உள்ளுக்குள் புழுங்குகிற நிர்ப்பந்தம் பெரும்பாலானோருக்கு இருந்தே தீரும். ஆனால், வெளிப்படுத்த ஒரு தளம் அமைகிறபோது, நமது மனம் சொல்வதை எழுதுவது நமக்கே நாம் செய்து கொள்ளுகிற உதவியாகவும் இருக்கக்கூடும். ஆகவே எழுதுங்கள்! :-)

    //பொய்யாக ரிகேஷம் சென்றவரின் மீது கோபமும், செத்துப்போனவள் மீது இறக்கமும் தான் எனக்கு. நன்றி.//

    விசுவின் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற கோபமே, இந்தப் புனைவின் வெற்றியெனக் கருதுகிறேன் நண்பரே! மிக்க நன்றி! :-)

    //ரெவெரி said...

    அருமையான நடை...நல்லதொரு படைப்பு ... நண்பரே...//

    மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே! :-)

    //மாலதி said...

    இன்றைய மனித உறவுகளை சிறப்பாக கூறுகிறீர்கள் பாராட்டுகள்//

    மிக்க மகிழ்ச்சி! எனது முயற்சியைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  14. //மென்று விழுங்கி ரோஷமின்றி வாழ்பவனை கண்ணியவான் என்றும், சற்றே விறைத்து உணர்ச்சிவசப்படுபவனை மூர்க்கன் என்றும் உலகம் தன் வசதிக்கேற்ப அடையாளம் கண்டுகொள்கிறது//


    சூப்பர் சேட்டை பாஸ்! செம்ம வரிகள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. விசு கம்பளிக்காகவும் அந்தப் பெண்ணுக்காகவும் காத்திருந்தார். பெண் தானே கம்பளி கொண்டுவரப் போனார். அவருக்காகக் காத்திருப்பதில் உள்ளர்த்தம் இருக்கிறதா.?

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!