Monday, January 24, 2011

கடுதாசு போடுவோம் வாங்க!

இப்பொழுதெல்லாம் இணையத்திலேயே அதிகம் புழங்குகிறோம். அலைபேசிகள் கையடக்கப்பதிவு கணினிகளைப் போலாகிவிட்டதால், நமது தகவல் தொடர்புகள் அனைத்தும் எழுதுகோலின் உதவியின்றியே விசைகளின் உதவியால் மிகவும் எளிமையாகி விட்டன. அதனால், கடிதம் எழுதுவது என்ற பழக்கமே வழக்கொழிந்து போய் விட்டது. இனிவரும் காலங்களில் தபால் நிலையங்களை மாநில அரசு குத்தகைக்கு எடுத்து டாஸ்மாக் கடைகளாகவும் மாற்றுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே, அனைவரும் மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதுவது என்ற பாரம்பரியக்கலைக்குப் புத்துயிர் அளிக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோமாக. இல்லாவிட்டால், இதையெல்லாம் பிற்கால சென்னை சங்கமத்தில் தான் பார்க்க நேரிடும்!

கடிதம் எழுதத் தேவையான பொருட்கள்: ஒரு காகிதம், ஒரு எழுதுகோல் மற்றும் ஒரு தபால் உறை. (தபால் நிலையங்களில் ஐந்தே ஐந்து ரூபாய் கொடுத்தால் தருவார்கள்!) இது மட்டுமிருந்தால் போதாது அல்லவா? உங்களது உறவினர், நண்பர்களுக்கு கடிதம் எழுதினால் "சுத்தப் பழைய பஞ்சாங்கமாக இருக்கிறாயே?" என்று உங்களை ஏளனம் செய்ய வாய்ப்பிருக்கிறது. இதற்காக முன் பின் பரிச்சயமில்லாதவர்களுக்கு கடிதம் எழுதினாலும் விவகாரம்தான். ஆக, யாருக்குத் தான் கடிதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்படுகிறது அல்லவா?

இது போன்ற குழப்பங்களைத் தீர்ப்பதற்கென்றே, இப்புண்ணிய பூமியில் ஒரு ஆதர்ஷ புருஷர் அவதரித்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல; இந்தியாவின் பிரதம மந்திரி மாண்புமிகு டாக்டர்.மன்மோகன் சிங்! யார் கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணினாலும், டாக்டர்.மன்மோகன் சிங், புது தில்லி என்று இரண்டு வரிகளில் சிக்கனமாக முகவரி எழுதினாலே போதும்.

ஆயிற்று, கடிதம் எழுத என்னென்ன தேவையென்று அறிந்துகொண்டோம். யாருக்குக் கடிதம் எழுதுவது என்பதும் முடிவாகிவிட்டது. இனி கடிதம் எழுத ஏதாவது விஷயம் வேண்டாமா? இங்குதான் நாம் அனைவரும் அவரவரது புத்திகூர்மையை உபயோகிக்க வேண்டும்.

இந்திரா காந்தி அம்மையார் காலத்திலிருந்து ஒவ்வொரு காங்கிரஸ் அரசிலும் அமைச்சரவைகளில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிற ஒரு மத்திய மந்திரி "அரசியல் சாசனத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் போய் சேருங்கள்" என்று ஒரு பொதுமேடையில் பேசியது சரியா? என்று கேட்டு கடிதம் எழுதிவிடாதீர்கள். தப்பு!

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய ஒரு மத்திய அமைச்சரையே, உச்சநீதிமன்றம் கண்டிக்கிற அளவுக்குப் பொறுப்பற்றுப் பேசியது சரியா? என்று கேட்டு கடிதம் எழுதி விடாதீர்கள். பெரிய தப்பு!

ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல, மேற்கூறியவை எல்லாம் உதாரணங்கள் தான். இது தவிர, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியலமைப்பு, மதச்சார்பின்மை போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்தெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதி அவரது பொன்னான நேரத்தை வீணடித்து விடாதீர்கள். அவருக்கு கெட்ட கோபம் வந்து விடும்.

"நான் ஒன்றும் ஜோசியரில்லை!" என்று முகத்தில் அடிக்கிற மாதிரி பதில் எழுதி விடுவாராக்கும். கபர்தார்! ஆதாரமில்லாமல் சொல்வதற்கு நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல; சேட்டைக்காரன். இதோ பாருங்கள் ஆதாரத்தை...!

2008-ல் இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா என்று கேட்டபோது பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன பதில்: "நான் ஒன்றும் ஜோசியரில்லை!"

2009-ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தட்பவெட்பநிலை மாறுதல் குறித்துக்கேட்டபோது அவர் சொன்ன பதில்: "நான் ஒன்றும் ஜோசியரில்லை!"

2011-ல் விலைவாசிகள் எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கேட்டபோது பிரதமர் சொன்ன பதில்: "நான் ஒன்றும் ஜோசியரில்லை!"

(இப்படி தான் ஜோசியர் இல்லையே என்று புலம்புகிற டாக்டர் மன்மோகன் சிங், கேம்ப்ரிட்ஜுக்கும் ஆக்ஸ்ஃபோர்டுக்கும் போய் பொருளாதாரம் படித்ததற்கு பதிலாக, பேசாமல் கடலங்குடிக்குப் போய் ஜோசியத்தைப் படித்திருக்கலாமோ?)

ஆக, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை பாரதப் பிரதமரால் தீர்க்க முடியாது; அதற்கு நீங்கள் காழியூர் நாராயணன், க.ப.வித்யாதரன் போன்ற ஜோதிட விற்பன்னர்களை அணுக வேண்டும்; இல்லாவிட்டால் ஒருநடை திருநள்ளாறு போன்ற திருத்தலங்களுக்குப் போய்வர வேண்டும் என்பதை இப்போதாவது அறிக!

அப்படியென்றால், பிரதமருக்கு எதைப் பற்றித்தான் கடிதம் எழுதுவது? ஐந்து ரூபாய் வீண் தானா- என்று கேட்கிறீர்களா? அது தான் இல்லை. நீங்களும் நமது மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி போல "இலங்கைக் கடற்படைக்காரன் தமிழக மீனவனைக் கொன்று விட்டான்." என்று கடிதம் எழுதுங்கள். காரணம், அதற்கு பதில் எழுதுவது நமது பிரதமருக்கு கைவந்தகலை! கண்களை மூடிக்கொண்டு கூட பதிலெழுதுமளவுக்கு நமது பிரதம மந்திரி அதில் தேர்ச்சி பெற்றவராக்கும். அதுமாதிரி இதுவரை எத்தனை கடிதங்களுக்கு அவர் பதிலளித்திருக்கிறார் தெரியுமா? ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால், அதன் மீது ஏறிநின்று இலங்கை கப்பற்படை நமது மீனவர்களைப் படுகொலை செய்வதை நேரடியாகப் பார்க்கலாம்.

ஆகவே, அனைவரும் வாரீர்! ஐந்து ரூபாய் செலவில் தமிழக மீனவன் நடுக்கடலில் மடிகிற காட்சியையாவது கண்டுகளிக்கலாம். என் பங்குக்கு நானும் எழுதுகிறேன் - கடலங்குடி ஜோதிட நிலையம் தபால்வழிக் கல்வி விபரங்களையும் சேர்த்து அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாருங்கள், கடிதம் எழுதலாம். (என்னது, இளைஞன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பார்த்தபின்னர் பிழைத்துக்கிடந்தால் வாரீர்!)

வாருங்கள் தமிழர்களே! பிரதமருக்கு கடிதம் எழுதுவோம் வாருங்கள்!!

26 comments:

  1. (என்னது, இளைஞன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பார்த்தபின்னர் பிழைத்துக்கிடந்தால் வாரீர்!)


    ஆஹா....! இளைஞன் பார்க்கலாம் னு பிளான் பண்ணியிருந்தேன்! ( இதுக்குப் போயி யாராவது பிளான் பண்ணுவாங்களா? ) இப்புடி சொல்லிப் போட்டீங்க!!

    ReplyDelete
  2. கோபமும் எரிச்சலும்தான் வருகிறது. கையாலாகாத கபோதிகளிடம் நாடு சிக்குண்டு மக்கள் மாய்ந்து போகிறார்கள்.
    மன்மோகன் சிங்க் மாதிரி ஒரு கேவலமான பிரதமர் இனி இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. நாம் ஊரில் டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ஒருவனை பிரதமராக ஆக்கினால் கூட பிரமாதமாக செயல் படுவான்.

    ReplyDelete
  3. என்ன சொல்ல தமிழினனின் பொருமையை

    ReplyDelete
  4. உங்ககிட்ட பிடிச்சதே இந்த நான்ஸ்டாப் குறும்புதான்..

    ReplyDelete
  5. நீங்களும் வாருங்கள், கடிதம் எழுதலாம். (என்னது, இளைஞன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பார்த்தபின்னர் பிழைத்துக்கிடந்தால் வாரீர்!)


    .....சாட்டையடி!!!! Great punch!!!

    ReplyDelete
  6. சேட்டை -வர வர உங்கள் பதிவுகள் ,சவுக்கு -அவர்கள் போல சாட்டை அடியாக வருகிறது ,தொடருங்கள்

    ReplyDelete
  7. நெத்தி அடி!!

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  8. // (இப்படி தான் ஜோசியர் இல்லையே என்று புலம்புகிற டாக்டர் மன்மோகன் சிங், கேம்ப்ரிட்ஜுக்கும் ஆக்ஸ்ஃபோர்டுக்கும் போய் பொருளாதாரம் படித்ததற்கு பதிலாக, பேசாமல் கடலங்குடிக்குப் போய் ஜோசியத்தைப் படித்திருக்கலாமோ?) //

    செம சேட்டை...

    ReplyDelete
  9. //ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால், அதன் மீது ஏறிநின்று இலங்கை கப்பற்படை நமது மீனவர்களைப் படுகொலை செய்வதை நேரடியாகப் பார்க்கலாம்.//

    சிரிக்கறதா. அழுவறதான்னு.. தெரியல சேட்டை..!! மின்னஞ்சல் யுகத்திலும் கடுதாசி உபயோகிக்கற ஓரே தலைவர் கலைஞர்தான்..!கேட்டா ஆதாரம்ன்னு சொல்லுவார்..!

    ReplyDelete
  10. சரி தான்... வாங்க எழுதலாம்..
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  11. // (இப்படி தான் ஜோசியர் இல்லையே என்று புலம்புகிற டாக்டர் மன்மோகன் சிங், கேம்ப்ரிட்ஜுக்கும் ஆக்ஸ்ஃபோர்டுக்கும் போய் பொருளாதாரம் படித்ததற்கு பதிலாக, பேசாமல் கடலங்குடிக்குப் போய் ஜோசியத்தைப் படித்திருக்கலாமோ?) //

    அதானே!

    ReplyDelete
  12. >>>>(என்னது, இளைஞன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பார்த்தபின்னர் பிழைத்துக்கிடந்தால் வாரீர்!)

    aNNeeஅண்ணே இதுதான் ஃபினிஷிங்க் டச்..

    ReplyDelete
  13. //மாத்தி யோசி said...

    ஆஹா....! இளைஞன் பார்க்கலாம் னு பிளான் பண்ணியிருந்தேன்! ( இதுக்குப் போயி யாராவது பிளான் பண்ணுவாங்களா? ) இப்புடி சொல்லிப் போட்டீங்க!!//

    எல்லாம் ஒரு அக்கறை தான்! :-)
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. கக்கு - மாணிக்கம் said...

    //கோபமும் எரிச்சலும்தான் வருகிறது. கையாலாகாத கபோதிகளிடம் நாடு சிக்குண்டு மக்கள் மாய்ந்து போகிறார்கள்.//

    கையாலாகாதவர்களில்லை நண்பரே! இவர்களது கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறவர்கள், மக்களிலிருக்கும் ஒரு சில தனிநபர்கள் தான். அந்தத் துணிவு அனைவருக்கும் வர வேண்டும் (என்னையும் சேர்த்து...!)

    //மன்மோகன் சிங்க் மாதிரி ஒரு கேவலமான பிரதமர் இனி இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. நாம் ஊரில் டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ஒருவனை பிரதமராக ஆக்கினால் கூட பிரமாதமாக செயல் படுவான்.//

    கூட்டணி தர்மம் - என்ற கட்டாயங்களினால், ஒரு பொருளாதார மேதை சீரழிவதைப் பார்க்க மிகவும் வேதனையாயிருக்கிறது நண்பரே!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  15. //Speed Master said...

    என்ன சொல்ல தமிழினனின் பொருமையை//

    பொறுத்தது போதுமே! கொஞ்சம் சோம்பல் முறிக்கலாமே?

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  16. //ரிஷபன் said...

    உங்ககிட்ட பிடிச்சதே இந்த நான்ஸ்டாப் குறும்புதான்..//

    ஆஹா, பார்த்து ரொம்ப நாளாச்சுதே! நலமா??
    மிக்க நன்றிங்க! :-)

    ReplyDelete
  17. //Chitra said...

    .....சாட்டையடி!!!! Great punch!!!//

    குமுறலை அடக்க முடியாமத்தான் இப்படி எழுதினேன்...!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  18. //dr suneel krishnan said...

    சேட்டை -வர வர உங்கள் பதிவுகள் ,சவுக்கு -அவர்கள் போல சாட்டை அடியாக வருகிறது ,தொடருங்கள்//

    இந்தப் பெருமை அவர்களைச் சேரட்டும். மிக்க நன்றி டாக்டர்! :-)

    ReplyDelete
  19. //வெங்கட் நாகராஜ் said...

    நெத்தி அடி!!//

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  20. //Philosophy Prabhakaran said...

    செம சேட்டை...//

    மிக்க நன்றி நண்பா! :-)

    ReplyDelete
  21. //சேலம் தேவா said...

    சிரிக்கறதா. அழுவறதான்னு.. தெரியல சேட்டை..!! மின்னஞ்சல் யுகத்திலும் கடுதாசி உபயோகிக்கற ஓரே தலைவர் கலைஞர்தான்..!கேட்டா ஆதாரம்ன்னு சொல்லுவார்..!//

    ஆதாரம் சரி, ஏற்படுற சேதாரத்துக்குத்தான் விடிவே காணோம்! :-(
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //உமாபதி said...

    arumai. Nach//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  23. //Madurai pandi said...

    சரி தான்... வாங்க எழுதலாம்..//

    நான் எழு..திட்டேன்! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  24. //அம்பிகா said...

    // (இப்படி தான் ஜோசியர் இல்லையே என்று புலம்புகிற டாக்டர் மன்மோகன் சிங், கேம்ப்ரிட்ஜுக்கும் ஆக்ஸ்ஃபோர்டுக்கும் போய் பொருளாதாரம் படித்ததற்கு பதிலாக, பேசாமல் கடலங்குடிக்குப் போய் ஜோசியத்தைப் படித்திருக்கலாமோ?) //

    அதானே!//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  25. //சி.பி.செந்தில்குமார் said...

    >>>>(என்னது, இளைஞன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பார்த்தபின்னர் பிழைத்துக்கிடந்தால் வாரீர்!)

    aNNeeஅண்ணே இதுதான் ஃபினிஷிங்க் டச்..

    மிக்க நன்றி தல! :-)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!