Tuesday, January 18, 2011

புத்தக விமர்சனம்-மு.சோ.ம.எ?

"புத்தகக்கண்காட்சி பக்கமே போகாம, மூணு வாட்டி போனேன், நாலுவாட்டி போனேன்னு உடான்ஸா வுட்டுக்கினு இருக்கே? கீசிடுவேன் கீசி!" என்று என் அருமை நண்பன் சல்பேட்டா சபாபதி, மிகவும் பணிவன்புடன் எனக்கு மடல் எழுதியிருந்தான். எனவே, எனது டங்குவாரைக் காப்பாற்றிக்கொள்ள, இந்தப் புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கிய ஏதாவது ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாண்டு நான் வாங்கிய புத்தகங்களில் கபில் சிபல் எழுதிய "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி?" என்ற முழுநீள நகைச்சுவைப் புத்தகத்தைப் பற்றிய எனது விமர்சனத்தை உங்களது மேலான பார்வைக்கு அளித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ள டுபாக்கூர் பதிப்பகம் "இந்தியா-ஊழலற்ற தேசம்," "பாவம் தீர்க்கும் கூவம்," "அகில உலக சூப்பர் ஸ்டார் போண்டாமணி," போன்று பற்பல சிறந்த நூல்களை வெற்றிகரமாக வெளியிட்டவர்கள் ஆவார்கள். ஆங்கிலத்திலிருந்து இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிற நொள்ளக்கண்ணன் இதற்கு முன்னர் இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோக்கியின் சுயசரிதையை "ஒரு அப்பாவியின் கதை," என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் மூலத்தை ஆங்கிலத்தில் எழுதிய கபில் சிபல் என்ன சாமானியப்பட்ட எழுத்தாளரா? இத்தனை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்துள்ள இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் மட்டும் லேசுப்பட்டவராக இருக்க முடியுமா என்ன? அண்டப்புளுகூர் அலப்பறைவளவன் என்றாலே சமகால இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவராலும் அறியப்பட்டவரல்லவா? அணிந்துரையில் தனக்கே உரித்தான முத்திரையை தாறுமாறாகக் குத்தியிருக்கிறார். அதிலும், அவர் பூசணிக்காய், சோறு ஆகியவை குறித்து சில்லறையாகவும் மொத்தமாகவும் தொகுத்து எழுதியிருக்கிற விபரங்களை வாசிப்பவர்கள், அவரவர் மூக்கில் விரல்வைப்பதோடு அடுத்தவர்கள் மூக்கிலும் விரல்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"இந்தியக் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது பூசணிக்காய். ஆக்ரா என்றால் அனைவருக்கும் தாஜ்மகால் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலாக பூசணிக்காயை வைத்து அல்வா தயாரித்தது ஆக்ராவில்தான் என்று எத்தனை பேர் அறிவர்? சில ஆராய்ச்சியாளர்கள் மும்தாஜ் மரணத்துக்குக் கூட இந்த பூசணிக்காய் அல்வா தான் காரணம் என்று வாதிக்கிறார்கள் என அறிக."

"அது மட்டுமா? கண்திருஷ்டி படாமல் இருப்பதற்காக, பூசணிக்காயின் மண்டையின் மீது நாலணா கற்பூரத்தை கொளுத்தி அதை நாலைந்து சுற்று சுற்றி கீழே போட்டு உடைத்தால் கம்ப்யூட்டரை வைரஸ் அண்டாது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். தமிழகத்தில் வாசலில் சாணிபோட்டு மெழுகி, கோலமிட்டு அதில் பூசணிப்பூவால் அலங்கரிப்பது வழக்கம். எனவே காசினியில் சிறந்தது பூசணி என்பது உள்ளங்கை பூசணிக்கனியாய்ப் புரிகிறதன்றோ?"

"சோறு என்பதும் நமது வாழ்க்கையில் இன்றியமையாதது. தமிழகத்தில் வேலைவெட்டியில்லாதவர்களை "தண்டச்சோறு," என்று அழைப்பது வழக்கம். ஆனால், வட இந்தியாவில் "தண்டச்சப்பாத்தி," என்றோ "தண்டப்பூரி" என்றோ அழைப்பதில்லை என்பதிலிருந்தே சோற்றின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும். தமிழ்நாட்டோடு பூசணிக்காயும், சோறும் இவ்வளவு தொடர்புடையதாக இருப்பதால்தான், இங்கு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் பலர் விற்பன்னர்களாக இருக்கின்றனர்," என்று சரித்திரச்சான்றுகளுடன் எழுதியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்துவரும் கபில் சிபலின் முன்னுரையில், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் முழுப்பூசணிக்காய்களை சோற்றில் மறைப்பதென்பது காலத்தின் கட்டாயம் என்பதைத் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் இதுவரை எத்தனை கிலோ முழுப்பூசணிக்காய்கள் எத்தனயெத்தனை டன் சோற்றால் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கோயம்பேடு குமாஸ்தா சங்கம் கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை எள்ளிநகையாடியிருக்கிறார். புத்தகத்தை எழுதுவதில் காட்டியிருக்கிற முயற்சியை அவர் முன்னுரையிலும் காட்டியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

முதல் அத்தியாயத்தில், தேவையான பொருட்கள் குறித்த விபரங்களை எழுதியிருக்கிறார் ஆசிரியர் கபில் சிபல். அதிலும், முதல் பொருளாக அவர் அண்டாவை எழுதியிருப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. அத்தோடு, இதற்காக துளையேதுமில்லாத அண்டாக்களைத் தேடி அலைய வேண்டாம் என்றும் ஆங்காங்கே ஒருசில துளைகள் இருக்கிற அண்டாவை வாங்கினாலே போதும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது, அவர் எவ்வளவு திறமையான வழக்குரைஞர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.

"ஒரு பெரிய அண்டாவை எடுத்து, அதிலே ஒரு முழுப்பூசணிக்காயைப்போட்டு, அதன் மேலே சோற்றைக் கொட்டி நிரப்பினால், அது மறைந்து விடும்," என்று சுருக்கமாகச் சொல்லாமல், அண்டா, பூசணிக்காய், சோறு ஆகியவை குறித்து அவர் விபரமாக எழுதியிருப்பதை வாசிக்கும்போது, ’என்ன இருந்தாலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதை நிரூபித்துவிட்டார்," என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்தப் புத்தகத்தின் தனித்தன்மையே அதிலிருக்கும் புகைப்படங்கள் தான். அதிலும், ஒரு ஆளுயர அண்டாவுக்குள்ளே இருந்தவாறே தலையை மட்டும் வெளியே நீட்டியபடி அமர்ந்து கொண்டு கபில் சிபல் புன்னகை புரிகிற புகைப்படம் கண்ணைக்கவர்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் இருப்பதால், அந்த அண்டாவுக்குள்ளே கண்டிப்பாக ஒரு முழுப்பூசணிக்காய் நிச்சயமாய் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிற யுக்தி இதுவரை எந்த் எழுத்தாளராலும் பின்பற்றப்படாதது என்பது வியப்பு மேலிடும் தகவல்.

இறுதியாக, "இந்தப் புத்தகத்துக்கும் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கும் யாதோரு தொடர்புமில்லை," என்று முத்தாய்ப்பாக ஆசிரியர் குறிப்பிடுகிறபோது, விழுந்து விழுந்து சிரித்ததில் எனது விலா எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. ஆனாலும், ஒரு மனிதருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு ஆகவே ஆகாது!

மொத்தத்தில், இந்தப் புத்தகம் பூசணிக்காய் விரும்பிகள் அவசியம் விரும்பி வாங்கிப்படிக்க வேண்டியதொரு அரிய பொக்கிஷமாகும். தமிழகத்தில் பொதுத்தேர்தல் வருகிற இந்த சமயத்தில் இதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட டுபாக்கூர் பதிப்பகத்தின் சமயோசிதமான சேவை பாராட்டத்தக்கது.

எளிய மொழியில், எல்லா ஊழல்களும் பூசணிக்காய்கள், எல்லா அறிக்கைகளும் சோறு, எல்லா அமைச்சகங்களும் அண்டாக்கள் என்று வெளிப்படையாகச் சொல்லியிருப்பதோடு, சோறு வடிக்கப் பயன்படும் அடுப்பு அரசியல் என்பதையும், அடுப்பு எரிக்கப் பயன்படுகிற விறகுகள் பொதுமக்கள் என்பதையும் குறிப்பாலுணர்த்தியிருக்கிற ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மலிவு விலைப்பதிப்பாக இதை வெளியிட்ட டுபாக்கூர் பதிப்பகத்துக்கு எனது நன்றிகள்.

புத்தக விபரம்:

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி?
ஆசிரியர்: கபில் சிபல், மொழிபெயர்ப்பு: நொள்ளக்கண்ணன்
வெளியீடு: டுபாக்கூர் பதிப்பகம்
420, குப்புறப்படுத்தான் தெரு,
கேனயம்பாக்கம்
சென்னை-600420
விலை: ரூ.1.76 பைசா

28 comments:

  1. இங்கே யாருக்கும் வெட்கமில்லை. அவனுக்கு வெட்கமென்ன?
    அவனுக்கு என்பது கபில் சிபல், ராசா, கருணாநிதி என்று யாரும் நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பு அல்ல.

    ReplyDelete
  2. அண்ணாச்சி நல்ல கற்பனை. ஆனா ஒரு சின்ன தப்பு. அது முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது அல்ல. இதூ கால வழக்கில் சொல்வது.
    உண்மையில் இந்த பழமொழி முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைப்பது போல என்றுதான் வரும். வயலில் பூசணி திருடுவர்கள் யாராவது வந்தால் அதனை சேற்றில் போட்டு மறைப்பார்கள். அது காற்று உள்ளதால் உள்ளே நிற்க்காமல் வெளி வந்து காட்டிக் கொடுத்து விடும். அதுதான் இந்த பழமொழி. ஆனா இந்த பாவிங்க வயலையே இல்லை திருடுறவங்க.

    ReplyDelete
  3. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.. குப்புறப்படுத்தான் தெருவில உள்ள டீ கடையில இந்த பதிவு பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க...

    ReplyDelete
  4. சும்மாக்காட்டி நானும் புத்தக சந்தைக்கு வந்தேன்னு சொல்றதை நிறுத்துங்க... ஒரு கட்டத்துல வெறுப்பாகுது...

    ReplyDelete
  5. தரங்கெட்ட அரசியல்வாதிகள், அரசியல் என்பதை இதைவிடவும் நாசூக்காய் சொல்ல முடியாது நண்பா...

    பிரபாகர்...

    ReplyDelete
  6. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :):) அடுத்த முறை தமிழ் மன விருதுல இத புத்தக விமரிசனத்துல சேத்து விடுங்க :)

    ReplyDelete
  7. இவ்ளோ சிறப்பான புத்தகம் இவ்ளோ மலிவு விலையா.. ஆச்சரியம் :)

    ReplyDelete
  8. //எளிய மொழியில், எல்லா ஊழல்களும் பூசணிக்காய்கள், எல்லா அறிக்கைகளும் சோறு, எல்லா அமைச்சகங்களும் அண்டாக்கள் என்று வெளிப்படையாகச் சொல்லியிருப்பதோடு, சோறு வடிக்கப் பயன்படும் அடுப்பு அரசியல் என்பதையும், அடுப்பு எரிக்கப் பயன்படுகிற விறகுகள் பொதுமக்கள் என்பதையும் குறிப்பாலுணர்த்தியிருக்கிற ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//

    இதுக்கு மேல தாக்க முடியாது...

    ReplyDelete
  9. //கக்கு - மாணிக்கம் said...

    இங்கே யாருக்கும் வெட்கமில்லை. அவனுக்கு வெட்கமென்ன? அவனுக்கு என்பது கபில் சிபல், ராசா, கருணாநிதி என்று யாரும் நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பு அல்ல.//

    டுபாக்கூர் பதிப்பகமும் பொறுப்பல்ல என்று ஆட்டோ அனுப்புபவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  10. //பித்தனின் வாக்கு said...

    அண்ணாச்சி நல்ல கற்பனை. ஆனா ஒரு சின்ன தப்பு. அது முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது அல்ல. இதூ கால வழக்கில் சொல்வது.//

    இம்புட்டு நாள் கழித்து உங்களை இங்கு காண்பதே மிகவும் மகிழ்ச்சி தருகிறது!

    //உண்மையில் இந்த பழமொழி முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைப்பது போல என்றுதான் வரும். வயலில் பூசணி திருடுவர்கள் யாராவது வந்தால் அதனை சேற்றில் போட்டு மறைப்பார்கள். அது காற்று உள்ளதால் உள்ளே நிற்க்காமல் வெளி வந்து காட்டிக் கொடுத்து விடும். அதுதான் இந்த பழமொழி.//

    அம்மாடியோ, இதுவா சமாச்சாரம்? இதுவரை இந்தத் தகவலை அறியாமலே இருந்தேன். மிக்க நன்றி! :-)

    //ஆனா இந்த பாவிங்க வயலையே இல்லை திருடுறவங்க.//

    அதே! அதே! மீண்டும் வருகைக்கும் கருத்துக்கும் ஒரு நன்றி ரிப்பீட்டிக்கிறேன். :-)

    ReplyDelete
  11. //Chitra said...

    ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.. குப்புறப்படுத்தான் தெருவில உள்ள டீ கடையில இந்த பதிவு பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க...//

    அங்கெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாய்ங்களா? அவ்வளவு பாப்புலராகிட்டேனா? :-)
    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  12. //Philosophy Prabhakaran said...

    சும்மாக்காட்டி நானும் புத்தக சந்தைக்கு வந்தேன்னு சொல்றதை நிறுத்துங்க... ஒரு கட்டத்துல வெறுப்பாகுது...//

    எனக்குக் கூட சில விசயங்கள் வெறுப்பாத்தானிருக்கு. ஆனால் வெளியே சொல்றதில்லை! :-)

    ReplyDelete
  13. //பிரபாகர் said...

    தரங்கெட்ட அரசியல்வாதிகள், அரசியல் என்பதை இதைவிடவும் நாசூக்காய் சொல்ல முடியாது நண்பா...//

    என்ன நண்பரே செய்வது? நம்மையும் அவர்கள் போலாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  14. //dr suneel krishnan said...

    ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :):) அடுத்த முறை தமிழ் மன விருதுல இத புத்தக விமரிசனத்துல சேத்து விடுங்க :)//

    ஞாபகத்துலே வச்சுக்கணும். அதுக்குள்ளே இன்னும் எத்தனை புதுப்புத்தகம் வருமோ, விமர்சனம் எழுத வேண்டியிருக்குமோ? :-)))

    மிக்க நன்றி டாக்டர்! :-)

    ReplyDelete
  15. //முத்துலெட்சுமி/muthuletchumi said...

    இவ்ளோ சிறப்பான புத்தகம் இவ்ளோ மலிவு விலையா.. ஆச்சரியம் :)//

    நியாயமாப் பார்த்தா, சும்மாவே கொடுத்திருக்கணும். அவ்வளவு ’சேல்ஸ்’ பண்ணியிருக்காங்க! :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  16. //சங்கவி said...

    இதுக்கு மேல தாக்க முடியாது...//

    ஹும், பெருமூச்சுத்தான் விடணும். மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. பூணிக்காயை வைத்து அல்வா தயாரித்தது ஆக்ராவில்தான் என்று எத்தனை பேர் அறிவர்? சில ஆராய்ச்சியாளர்கள் மும்தாஜ் மரணத்துக்குக் கூட இந்த பூசணிக்காய் அல்வா தான் காரணம் என்று வாதிக்கிறார்கள் என அறிக."


    என்ன ஒரு ஆராய்ச்சீ

    ReplyDelete
  18. ”போட்டுத் தாக்கு போட்டுத் தாக்கு” என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது சேட்டை. பதிப்பகத்தின் பெயரும் அதன் விலாசமும், அருமை. எல்லாவற்றைவிட அதன் விலை சூப்பர்! - திருந்துவார்களா இவர்கள்?

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்
    http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html

    ReplyDelete
  19. இந்தப் புத்தகம் பூசணிக்காய் விரும்பிகள் அவசியம் விரும்பி வாங்கிப்படிக்க வேண்டியதொரு அரிய பொக்கிஷமாகும். ////

    ஏன் சேட்ட இதுல பூசணிக்காய் வேற இருக்குங்குற .............. காய்கறி விக்கிற விலைவாசில எப்படி இத 1 .76 ரூபாயிட்டு தர்றாங்க ................ நல்லா பருப்பா அது குவைத் தினாரா இருக்கப் போகுது

    ReplyDelete
  20. //Speed Master said...

    என்ன ஒரு ஆராய்ச்சீ//

    நன்றி! :-)

    ReplyDelete
  21. //வெங்கட் நாகராஜ் said...

    ”போட்டுத் தாக்கு போட்டுத் தாக்கு” என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது சேட்டை. பதிப்பகத்தின் பெயரும் அதன் விலாசமும், அருமை. எல்லாவற்றைவிட அதன் விலை சூப்பர்! - திருந்துவார்களா இவர்கள்?//

    அந்த நம்பிக்கையெல்லாம் இல்லீங்க ஐயா! :-))

    ஏதோ, நம்மளாலே முடிஞ்சது ஒரு பாட்டம் புலம்பியாச்சு! விதிவிட்ட வழின்னு இருக்க வேண்டியதுதான்! மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  22. //மங்குனி அமைச்சர் said...

    ஏன் சேட்ட இதுல பூசணிக்காய் வேற இருக்குங்குற .............. காய்கறி விக்கிற விலைவாசில எப்படி இத 1 .76 ரூபாயிட்டு தர்றாங்க ................ நல்லா பருப்பா அது குவைத் தினாரா இருக்கப் போகுது//

    மங்குனிண்ணே, இதை இலவசமா பிரசாரத்துக்காக கொடுக்கிறதா இருந்தாங்க. ஆனா, தேர்தல் ஆணையம் ஆட்சேபிக்குமுன்னு யாரோ போட்டுக் கொடுத்திட்டாய்ங்க. அதான் இவ்வளவு சீப்பா வித்திட்டிருக்காங்க! :-)

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  23. நாங்க வயலையே சேற்றில் மறைப்போம்.

    அண்ணாச்சி பின்னூட்டத்துக்கு பதில் போடறார்

    ReplyDelete
  24. //எல் கே said...

    நாங்க வயலையே சேற்றில் மறைப்போம்.அண்ணாச்சி பின்னூட்டத்துக்கு பதில் போடறார்//

    ஹிஹி! கார்த்தி ஃபார்முலே இருக்கீங்க போலிருக்கே! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  25. பின்னூட்டத்திற்கு பதில் போடும் இந்த வழக்கத்தை நீங்கள் விட கூடாது ,இது நன்றாக உள்ளது

    ReplyDelete
  26. //dr suneel krishnan said...

    பின்னூட்டத்திற்கு பதில் போடும் இந்த வழக்கத்தை நீங்கள் விட கூடாது ,இது நன்றாக உள்ளது//

    அலுவலகத்தில் ஆணியின் அளவைப் பொறுத்தே இருக்கிறது. :-)

    ஆனால், அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றியாவது இனி அவசியம் தெரிவிப்பேன். நன்றி! :-)

    ReplyDelete
  27. எல்லாரோட காதுலயும் பூசணிப்பூவை சுத்திவிடாம இருந்தா சரிதான் பாஸ்

    ReplyDelete
  28. //இரவு வானம் said...

    எல்லாரோட காதுலயும் பூசணிப்பூவை சுத்திவிடாம இருந்தா சரிதான் பாஸ்//

    அப்படீன்னா, இன்னும் சுத்தலேன்னா சொல்ல வர்றீங்க? :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!