Friday, January 7, 2011

அழுக்கெழுத்து

சென்னையின் ஒப்பனையற்ற முகத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள் ஒரு சில முறை கூட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டால் போதும். சினிமாக்களிலும் புனைவுகளிலும் அனேகரால் எண்ணற்ற முறை எள்ளல்களுக்கு ஆட்படுத்தப்பட்ட இந்த நகரத்தின் எஞ்சியிருக்கிற ஆன்மா மூச்சுவிடுகிற மெல்லிய சத்தம், தடதடவென்ற பேரோசைக்கு நடுவே கூர்ந்து கவனித்தால் துல்லியமாய் ஒலிக்கும். மிகவும் சவுகரியமாக இது உருப்படாத ஊர் என்று உதாசீனம் செய்பவர்களும் இந்த ஒலியை அவ்வப்போது கேட்டிருக்கலாம்.

தினசரி வருகிறவர்களுக்கு சின்னச்சின்ன சலுகைகள் தருகிற நட்பு கிடைக்கிறது. பெயர்களை அறியாதபோதிலும் புன்னகைகளைப் பரிமாறிக்கொள்ள இயலுகிறது. செய்தித்தாள் பரிவர்த்தனைகளும், இருக்கைகளை விட்டுத்தருகிற பெருந்தன்மையும், பண்டிகைகளின் போது வாழ்த்துப்பரிமாறல்களும், சில நேரங்களில் இறுக்கமான கைகுலுக்கல்களும் கிடைக்கின்றன. இவை புதியவர்களுக்குக் கிடையாது என்பதே வாடிக்கையாக வருகிறவர்களை ஒரு அங்குலம் உயர்ந்தவர்களாய் எண்ண வைக்கிற வசதி!

’எல்லாம் பறிபோய்விடவில்லை,’ என்று சற்றே நம்பிக்கை துளிர்க்க வைக்கிற பல கணங்களை சென்னை நகரத்தின் மனிதர்கள் அவ்வப்போது அளித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். உதாரணமாக....

கடற்கரை ரயில் நிலையத்தில் கூடையில் கடலை விற்பனை செய்கிற பெண்மணி. வழக்கம்போல, வண்டி வந்ததும் உள்ளே வந்து கிளம்பும்வரையிலும் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து, சில சமயங்களில் கிளம்பியபிறகும் கோட்டை வரைக்கும் வந்து இறங்கிச்செல்வதைக் கவனித்திருக்கிறேன். கடற்கரை ரயில் நிலையத்தில் இப்படி மூன்று நான்கு பெண்மணிகள் எப்போதும் இருப்பர். அருகருகே உட்கார்ந்தபடி, வியாபாரம் இல்லாத சமயங்களில் அவ்வப்போது சிரிப்பும், சின்னச் சின்ன சண்டைகளுமாய், அவர்களுக்கென்று முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடைகளுக்கு மத்தியில் ஒரு குட்டி உலகம் இருக்கிறது. மாலைப்பொழுதுகளில் நெற்றியில் குங்குமம் வைத்தபடி பூ விற்பனையைச் செய்து முடித்தபின், வீடு திரும்புமுன்னர் குங்குமத்தை அழித்துவிட்டுச் செல்லும் ஒரு பெண்மணியைப்பற்றி முன்னரே எழுதியதாக ஞாபகம். பார்வையிழந்தவர்களாயிருப்பினும், பிச்சையெடுக்க விரும்பாமல் எதையெதையோ ஆண்டர்சன் தெருவில் மொத்த விலைக்கு வாங்கிவந்து விற்பனை செய்கிறவர்களும், உள்ளங்கை பொசுங்குகிற சூட்டில் மணக்க மணக்க கடலை விற்பனை செய்கிறவர்களும், அண்மைக்காலமாக சற்றே அடாவடித்தனமாக ’காசு கொடு ராசா,’ என்று எரிச்சலூட்டுகிற திருநங்கையரும் சென்னைக் கடற்கரை ரயில்நிலையத்தின் அடையாளங்கள்!

பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கத்தான் செய்கிறது. என்னதான் பெண்கள் பெட்டி காலியாக இருந்தாலும், பொதுப்பெட்டியின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்தபடி பண்பலை கேட்டுக்கொண்டுவரும் அந்த நடுத்தரவயதுப்பெண்மணி; ’ராஜஸ்தான் டைம்ஸ்’ வாசிக்கிற மார்வாடி ஆசாமி; இரயில்வேயின் அடையாள அட்டை வெளியே தெரியும்படி வைத்துக்கொண்டு, குதிரைப்பந்தயப் புத்தகத்தை தீர்க்கமாக வாசிக்கிற அந்த சந்தனப்பொட்டுக்காரர். இது தவிர காளிகாம்பாள் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புகிறவர்கள்; ஏசு அழைக்கிறார் கட்டிடத்திலிருந்து வெளிறிய ரோஜா நிறத்தில் புடவையணிந்த அந்தப் பெண்மணிகள்; கதவோரமாய் சினேகிதியின் காதில் எதையோ கிசுகிசுத்துச் சிரிக்கவைக்க முயல்கிற புதிய காதலர்கள் - ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் தொட்டு எடுத்துத் தீட்ட வசதியாய் ஆயிரம் வண்ணங்கள் எப்போதும் இருக்கின்றன.

நெருடல்கள் இன்றி வாழ்க்கை சுவாரசியமாவதில்லை - இந்த ரயில் பயணங்களின் ஆயாசங்களும் அப்படியே! எந்த அனுபவமுமின்றி இதுவரை எவராலும் காலியாக இறங்கியிருக்க முடியாது. ஒவ்வொரு பயணத்தின்போதும், ஏதோ ஒன்று கண்களுக்குத் தட்டுப்பட்டு சிரிப்பையோ, சினத்தையோ மூட்டுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் புருவங்களைச் சுருக்க வைத்தது, பெட்டிக்குள்ளே வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் நிர்வாணக் கேலிச்சித்திரமும், அதன்கீழ் எழுதப்பட்டிருந்த ஆபாசமான வாசகங்களும்...!

அதை எழுதியவன் எங்கோ மூக்கறுபட்டிருக்க வேண்டும்; தனது முகத்தில் உமிழப்பட்ட எச்சிலைத் தொட்டு எதையோ அருவருப்பாக எழுதி, எங்கோயிருக்கிற எவளுக்கோ பட்டமளித்திருந்தான். கூடவே ஒரு அலைபேசி எண்ணையும் எழுதியிருந்தான். வக்கிரத்தில் புத்திகெட்ட எவனேனும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டாலும் வியப்பதற்கில்லை! பெரும்பாலானோரின் புத்தியில் செக்ஸ் என்பது விஸ்தரிக்கப்பட்ட ஒரு பாகமாகி விட்டது. அதனால், அடுப்புக்கரியோ, சாக்பீஸோ அல்லது நூதனமான பேனாக்களோ, அவை எழுதுகிற எழுத்தை வாசித்ததும், மனசு அந்தப் பெண்ணைத் தத்தம் படுக்கையிலே வரவழைக்க யோசிக்க வைக்கிறது. புருஷலட்சணம் என்பது புணர்ச்சியில் ஆளுமை காட்டுவது என்ற மிருகபுத்தியே மேலோங்குகிறதோ? சில நேரங்களில் இந்த so called பெண்ணியவாதிகள் சொல்வதுபோல, ஆண்களில் நிறைய பேர்களுக்கு, பெண்களின் பெயரைக் கூடத் துகிலுரிய வேண்டும் என்ற அரிப்பு அதிகரித்து விட்டதோ?

’இதைப்பற்றியெல்லாம் ஏன் இவ்வளவு யோசிக்கிறோம்?’ என்று, அதைப் பார்த்துவிட்டதை அழித்து சுத்தமாக்க விரும்புவதுபோல ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால், கூட்டம் ஏற ஏற, அதைப் பற்றியே கேள்வி மேல் கேள்வியாக எழுந்துகொண்டிருந்தன.

"இதை எழுதியவன் யாராயிருப்பான்? எப்போது எழுதியிருப்பான்? சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணே இதை பார்த்திருப்பாளா? அப்படியென்றால், அவன் யாரென்று அடையாளம் கண்டிருப்பாளா அல்லது இப்படி எழுதுபவர்களைப் பற்றியெல்லாம் யோசிப்பது முட்டாள்தனம் என்று அலட்சியப்படுத்தியிருப்பாளா? இவ்வளவு பெரிய நகரத்தில் ஒரே ஒரு கோழையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிரித்திருப்பாளா?"

என்னென்னமோ கேள்விகள்!

"சூடு சுண்டல்! சூடு சுண்டல்!!" என்று அந்தப் பெண்மணி கணீரென்ற குரலில் கூவியபடி உள்ளே நுழைந்ததும், எனது கவனம் சற்றே திசைதிரும்பியது. பளபளவென்று, கருகருவென்றிருந்த கொண்டைக்கடலைச் சுண்டலையும், சற்றே நீளமாக அரிந்து போடப்பட்டிருந்த மிளகாயையும் பார்த்து ’சாப்பிடலாமா?’ என்ற கேள்வி எழுந்து, சற்றுமுன் வரை எழும்பியிருந்த கேள்விகளின் மீது ஏறி நசுக்கியது.

விடுவிடுவென்று நகர்ந்துபோய்க்கொண்டிருந்த அந்தப்பெண்மணி, ஒரு கணம் நிதானித்து, கூடையை இறக்கி வைத்து, தனது இடுப்பிலிருந்து ஒரு துணியை எடுத்து, பெட்டிக்குள்ளே எல்லார் கண்களிலும் படுகிறாற்போல எழுதப்பட்டிருந்த அந்த அருவருப்பான வாசகங்களை சரசரவென்று துடைத்துவிட்டு, மீண்டும் தனது துணியும், கூடையையும் இருந்த இடுப்பிலேயே வைத்துக்கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்தாள்.

"நமக்குத் தோணலே பார்த்தீங்களா?" என்று அருகிலிருந்தவர் முணுமுணுத்தார். அவர் ’நமக்கு’ என்று பன்மையில் கூறியது எனக்குப் பிடிக்கவில்லை. என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டதனால் மட்டுமல்ல; என்னை முந்தி அவர் அந்தக் கேள்வியை எழுப்பிவிட்டதால்....!

நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன்- ’நமக்கு ஏன் தோன்றவில்லை?’ என்று கேட்டு, பழியை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டிருப்பேன்.

40 comments:

  1. சூப்பர் சேட்டை.....ஏன் நமக்கு தோணலை.....

    ReplyDelete
  2. ம்ஹிம்...

    நகரம் இன்னும் முழுதாய் நரகமாகவில்லை போலிருக்கிறதே...

    பூத கணங்களுக்கு நடுவே (சத்தியமா உங்கள சொல்லல...) தேவதைகளையும் படைத்திருக்கிறான் அவன்...

    :-)

    ReplyDelete
  3. அருமையான இடுகை..

    பழிவாங்குறதுக்காக இந்த மாதிரி நம்பர் எழுதறது, மற்றும் சில செயல்கள், மத்தவங்க வாழ்க்கையையே பலிகொண்டுவிடும்ன்ன்னு சில பிறவிகளுக்கு தெரிவதில்லை :-((

    ReplyDelete
  4. பாடங்களை எங்கெல்லாம் கற்று கொள்கிறோம். எப்படி எல்லாம் கற்று கொள்கிறோம். ம்ம்ம்ம்.......

    ReplyDelete
  5. //நமக்குத் தோணலே பார்த்தீங்களா?//

    படிப்பு ஏதோ அறிவு எல்லாம் குடுக்கும்ன்னு சொல்றாங்க..?!
    உண்மையா..?

    ReplyDelete
  6. சூப்பரா இருக்கு தல! எனக்கென்னவோ எஸ்.ரா எழுதுவது போலவே இருக்கு! டைட்டிலும் கொஞ்சம் அப்படியே! :-)
    பின்னிட்டீங்க!!!

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு சேட்டை. “நமக்கு ஏன் தோன்றவில்லை?” நல்ல கேள்வி. சென்னையின் ரயில் போலவே, நெடுந்தூரம் செல்லும் ரயில்களிலும் இது போன்ற கண்றாவி படங்கள், வாசகங்கள் கழிப்பறையில் காணும்போது, எனக்குத் தோன்றுவது “நாற்றமடிக்கும் கழிப்பறையில் உட்கார்ந்து அதை வரையும், எழுதும் நபரின் மனதில் எத்தனை அழுக்கு! அதை போக்குவதை விட்டு மேலும் மற்ற இடங்களையும் அழுக்கு ஆக்குவது ஏன்” என.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. உண்மைதான் நமக்கு தோணாது, இந்த மாதிரி சமயத்துல்தான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் நமக்கு வரும்:-( நானும் இது போல நிறையா பார்த்துள்ளேன்.

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  10. இது ரொம்ப வித்தியாசமாவும் அழகாவும் வந்திருக்கு சேட்டை. அருமை

    ReplyDelete
  11. ஆஹா!.. அசத்தல் நண்பா. ரயில் சம்ந்தமான உங்களின் படைப்புகளை புத்தகமாக மாற்ற ஆசை... இந்த இடுகையும் உங்களின் மகுடத்தில் பிரகாசிப்பவைகளுல் ஒன்று... தொடர்ந்து கலக்குங்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  12. பெரும்பாலான தருங்களில் நம் பேசிக்கொண்டு மட்டும் தானிருக்கிறோம்...

    ReplyDelete
  13. வாசிப்பவனையும் நெருடலுக்கு உட்படுத்துகிறது உங்க பகிர்வும்.... எழுத்து நடையும்...........

    அதுபோல இருப்பதை அழிக்க முடியும் ...
    அதுபோல எழுதுபவனை அழித்தால் தேவல?

    ReplyDelete
  14. nallaa irukku .
    fabulous post.enakku ippave chhennaikku poganum pola irukku .
    HATS OFF TO THAT GREAT DEVADHAI.

    ReplyDelete
  15. மேற்கோள் காட்டி பாராட்ட முடியாதபடி ஒவ்வொரு வரியும் வார்த்தையும் நயமாக இருந்தது...

    ReplyDelete
  16. கடற்கரை ரயில் நிலையம், இயேசு அழைக்கிறார் கட்டிடம் என்றெல்லாம் எழுதியிருப்பதை பார்க்கும்போது பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரிகிறது... எப்போ மீட் பண்ணலாம்... புத்தக சந்தைக்கு வருவீர்களா...

    ReplyDelete
  17. இயலாமையும் ரசனையும் வழியும் இடுகை ...

    ரசித்தேன்...

    ReplyDelete
  18. //Ponchandar said...

    சூப்பர் சேட்டை.....ஏன் நமக்கு தோணலை.....//

    அதே! இன்னும் வாழ்க்கையைப் படிக்க வேண்டிய பாக்கி நிறைய இருக்கிறது போலும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. //அகல்விளக்கு said...

    ம்ஹிம்...நகரம் இன்னும் முழுதாய் நரகமாகவில்லை போலிருக்கிறதே...//

    ஆகாமல் இருக்கும் என்ற நம்பிக்கை (இன்னும்) இருக்கிறது.

    //பூத கணங்களுக்கு நடுவே (சத்தியமா உங்கள சொல்லல...) தேவதைகளையும் படைத்திருக்கிறான் அவன்...//

    சத்தியவாக்கு! மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. //அமைதிச்சாரல் said...

    அருமையான இடுகை..பழிவாங்குறதுக்காக இந்த மாதிரி நம்பர் எழுதறது, மற்றும் சில செயல்கள், மத்தவங்க வாழ்க்கையையே பலிகொண்டுவிடும்ன்ன்னு சில பிறவிகளுக்கு தெரிவதில்லை :-((//

    ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது, அறிவீனம் சொல்வதையே பின்பற்றுகிற சாபக்கேடுதான்! கருத்துக்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  21. Chitra said...

    //பாடங்களை எங்கெல்லாம் கற்று கொள்கிறோம். எப்படி எல்லாம் கற்று கொள்கிறோம். ம்ம்ம்ம்.......//

    உண்மை! இந்தப் பாடங்களை எந்தப் புத்தகமும், பாடசாலையும் கற்றுத்தராது.
    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  22. சேலம் தேவா said...

    //படிப்பு ஏதோ அறிவு எல்லாம் குடுக்கும்ன்னு சொல்றாங்க..?! உண்மையா..?//

    இல்லை நண்பரே! படிப்பு புத்தியைத் தீட்ட உதவுகிற சாணைக்கல் என்று தான் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், அனுபவம் அப்படியில்லையே...?

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  23. ஜீ... said...

    // சூப்பரா இருக்கு தல! எனக்கென்னவோ எஸ்.ரா எழுதுவது போலவே இருக்கு! டைட்டிலும் கொஞ்சம் அப்படியே! :-) பின்னிட்டீங்க!!!//

    முதலில் எஸ்.ரா என்பது யாரென்றே விசாரித்துத் தான் தெரிந்து கொண்டேன். :-)
    எப்படியோ, உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  24. //வெங்கட் நாகராஜ் said...

    நல்ல பகிர்வு சேட்டை. “நமக்கு ஏன் தோன்றவில்லை?” நல்ல கேள்வி. சென்னையின் ரயில் போலவே, நெடுந்தூரம் செல்லும் ரயில்களிலும் இது போன்ற கண்றாவி படங்கள், வாசகங்கள் கழிப்பறையில் காணும்போது, எனக்குத் தோன்றுவது “நாற்றமடிக்கும் கழிப்பறையில் உட்கார்ந்து அதை வரையும், எழுதும் நபரின் மனதில் எத்தனை அழுக்கு! அதை போக்குவதை விட்டு மேலும் மற்ற இடங்களையும் அழுக்கு ஆக்குவது ஏன்” என.//

    தோல்விகளையும், அவமானங்களையும் சகித்துக்கொள்ள இயலாதவர்கள், சேற்றை வாரி இறைக்கிற ஈனச்செயல்தான் இது ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  25. இரவு வானம் said...

    // உண்மைதான் நமக்கு தோணாது, இந்த மாதிரி சமயத்துல்தான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் நமக்கு வரும்:-( நானும் இது போல நிறையா பார்த்துள்ளேன்.//

    அதை விட முக்கியமாக ’எனக்கென்ன வந்தது?’ என்ற அசட்டைதான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். (என்னையும் சேர்த்துத்தான்...!)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  26. //கோவை2தில்லி said...

    அருமையான பகிர்வு.//

    மிக்க நன்றி அம்மா! :-)

    ReplyDelete
  27. //வானம்பாடிகள் said...

    இது ரொம்ப வித்தியாசமாவும் அழகாவும் வந்திருக்கு சேட்டை. அருமை//

    மிக்க மகிழ்ச்சி ஐயா! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  28. //பிரபாகர் said...

    ஆஹா!.. அசத்தல் நண்பா. ரயில் சம்ந்தமான உங்களின் படைப்புகளை புத்தகமாக மாற்ற ஆசை...//

    தேன்வந்து பாயுது காதினிலே! :-)

    //இந்த இடுகையும் உங்களின் மகுடத்தில் பிரகாசிப்பவைகளுல் ஒன்று... தொடர்ந்து கலக்குங்கள்...//

    மகுடத்தை அணிவித்தவர்களுக்கே அந்தப் பெருமை சென்று சேர்வதாக. மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  29. //அமுதா கிருஷ்ணா said...

    ம்ம்ம்..//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  30. //வெறும்பய said...

    பெரும்பாலான தருங்களில் நம் பேசிக்கொண்டு மட்டும் தானிருக்கிறோம்...//

    ஆம். அது தான் சுடுகிற நிஜம். மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. //ஹுஸைனம்மா said...

    ம்ப்ச்..//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  32. //சி. கருணாகரசு said...

    வாசிப்பவனையும் நெருடலுக்கு உட்படுத்துகிறது உங்க பகிர்வும்.... எழுத்து நடையும்...........//

    உங்களது பாராட்டு உற்சாகத்தைப் பன்மடங்காக்குகிறது!

    //அதுபோல இருப்பதை அழிக்க முடியும் ...அதுபோல எழுதுபவனை அழித்தால் தேவல?//

    அவர்களின் மனதுக்குள்ளிருக்கிற சாத்தானை அழித்தால் போதுமானது. அதற்கு அவனைச் சுற்றியிருப்பவர்கள் துணிவுபெற வேண்டும். மிக்க நன்றி!

    ReplyDelete
  33. //சிநேகிதன் அக்பர் said...

    ம்....//

    மிக்க நன்றி அண்ணே!

    ReplyDelete
  34. //angelin said...

    nallaa irukku . fabulous post.enakku ippave chhennaikku poganum pola irukku . HATS OFF TO THAT GREAT DEVADHAI.//

    சென்னை- அதிகம் மட்டம்தட்டப்பட்ட ஒரு நகரம்; இன்னும் அதில் ஜீவன் இருக்கிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  35. //Philosophy Prabhakaran said...

    மேற்கோள் காட்டி பாராட்ட முடியாதபடி ஒவ்வொரு வரியும் வார்த்தையும் நயமாக இருந்தது...//

    நண்பா, உங்களது பாராட்டு மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    // கடற்கரை ரயில் நிலையம், இயேசு அழைக்கிறார் கட்டிடம் என்றெல்லாம் எழுதியிருப்பதை பார்க்கும்போது பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரிகிறது... எப்போ மீட் பண்ணலாம்... புத்தக சந்தைக்கு வருவீர்களா...//

    மண்ணடியில் தான் தற்சமயம் அலுவலகம். புத்தகக்கண்காட்சிக்கு மூன்றுமுறை சென்று விட்டேன். :-) விரைவில் சந்திப்போம் - இறைவன் அருள் இருந்தால்...!

    ReplyDelete
  36. //டக்கால்டி said...

    இயலாமையும் ரசனையும் வழியும் இடுகை ...ரசித்தேன்...//

    உண்மை. இயலாமை அதிகம் என்பது தான் எனது நிலை. :-)
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. i am still learning to type in tamil...read you for 4hrs and still reeling in the experience..i think we are the reflections of people around us...good and bad...thank you...you are a wonderful one...and glad that i had the previlege

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!