Sunday, December 26, 2010

மன்மதன் அம்பும் மசானத்தில் முத்தமும்

நேற்று (25-12-2010) 'ஆதித்யா’ டிவியில் இரவு "காதலிக்க நேரமில்லை," படத்தை ஒளிபரப்பினார்கள். அதில் செல்லப்பா (நாகேஷ்) தனது ஓஹோ புரொடக்ஷன்ஸ் கம்பனி எடுக்கப்போவதாக இரண்டு படங்களின் பெயர்களைக் குறிப்பிடுவார்:

மசானத்தில் முத்தம்
கத்திமுனையில் ரத்தம்

"நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!" என்று ஒரு காட்சியில் நாகேஷ் சச்சுவிடம் கூறுவார்.

ஒன்று நேற்று நான் அந்தப் படத்தைப்பார்த்திருக்கக் கூடாது; அல்லது இன்று ’மன்மதன் அம்பு’ படத்தையாவது பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். இரண்டையும் செய்து விட்டதால், இன்று மன்மதன் அம்பு படம் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் எனக்கு நாகேஷ் பேசிய வசனம் நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது.

’நான் என்ன எடுக்கிறேனோ..............................................’

வழக்கம்போலவே, இந்தப் படமும் கமல் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதில் வியப்பில்லை; வழக்கம்போலவே ’இந்தப் படத்தை ரசிக்கிறதுக்கு மேல்மாடியிலே சரக்கு வேணும்,’ என்று ரசிக்கமுடியாமல் உதட்டைப் பிதுக்கிறவர்களை எகத்தாளம் செய்வதிலும் வியப்பில்லை. வழக்கம்போலவே, மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற படங்களை வரவேற்காத தமிழர்களின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாகி விட்டது என்று தாடி சொறிகிறவர்கள் வலைப்பூக்களிலும், வாரப்பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் அங்கலாய்க்கப்போகிறார்கள். இவையனைத்துக்கும் நடுவிலே, "உலகநாயகன்" படம் என்ற எதிர்பார்ப்பில் போய், செமத்தியாக பல்பு வாங்கிவந்த சாமானிய ரசிகன், காசையும் தொலைத்து விட்டு, முட்டாள் என்ற பட்டத்தையும் இலவச இணைப்பாக வாங்கிக்கொண்டு வந்திருப்பதுதான் மிச்சம்!

அவ்வளவு மோசமான படமா இது என்றால் நிச்சயம் இல்லை. அரிவாளும் ரத்தமும் மீண்டும் அதிகரித்துக்கொண்டு வருகிற தமிழ் சினிமாவில் ஓரளவு சௌகரியமாக உட்கார்ந்து நெளியாமல் பார்க்கிற ஒரு படம்தான் மன்மதன் அம்பு என்பதில் துளியும் சந்தேகமில்லை! ஏறக்குறைய ராமேஸ்வரம் லின்க் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகரும் முன்பாதி, இயல்பாக இருப்பதான பாசாங்கில் இறைக்கப்பட்டிருக்கிற ஆங்கில சம்பாஷணைகள், கமலுக்கும் கமல் சார்ந்தோருக்கும் மட்டுமே புரிகிற முற்போக்கு சிந்தனைத்துளிகள் என தொடரும் பல நெருடல்களைப் புறந்தள்ளினால், இறுதி இருபது, இருபத்தைந்து நிமிடங்களில் வாய்விட்டு சிரித்தது மட்டுமே நினைவிலிருக்கிறது. வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடுகிற கிரேஸி மோகனின் நகைச்சுவைக்கு பதிலாக, சம்பாஷணைகளில் சுருக்கென்று இறக்குகிற நாசூக்கான நகைச்சுவை (ஒருசில புரியாதபோதும்) சுவாரசியமாக இருக்கின்றது.

கதை, இசை, நடிப்பு என்று ஆளாளுக்கு எழுதி அலசி, துவைத்து காயப்போட்டு விட்டதால், எனது கருத்து என்ற அளவில் இந்த விமர்சனத்தை எழுத விருப்பம்.

மாதவன், திரிஷா இருவரும் தங்களது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த மிகவும் முயன்றிருக்கிறார்கள். ரமேஷ் அர்விந்த்-ஊர்வசியும் கிட்டத்தட்ட அனுதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள். இசை படத்தில் பல வெற்றிடங்களை நிரப்பியிருக்கிறது; பாடல்கள் படத்தைத் தூக்கி நிறுத்த பகீரதப்பிரயத்தனம் செய்திருக்கின்றன. ஒளிப்பதிவு படம் முழுவதுமே, பார்வையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. ஆனால், ஒலிப்பதிவில் தான் திடீர் உப்புமா போன்று எதையோ முயன்று முதலுக்கே மோசமாகியிருக்கிறது! சில இடங்களில் கமல் பேசுகிற தமிழ் வசனங்களே புரியவில்லை. ஒரு வேளை, திரும்ப வந்து புரிந்து கொள்ளட்டும் என்ற வர்த்தக தந்திரமா என்று தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். அப்புறம், ஆங்கிலம் கரைபுரண்டு ஓடுகிறது!

’அவ்வை சண்முகி,’ ’தெனாலி,’ ’பஞ்சதந்திரம்,’ படங்களில் தென்பட்ட கே.எஸ்.ரவிகுமாரைக் காணவில்லை. (தசாவதாரம்? ஹிஹி, அது வேறே இருக்கில்லே?)

கமலின் நடிப்பு குறித்து புதிதாக என்ன எழுதுவது?

கமல்ஹாசன்- சற்றே அபரிமிதமாக கொண்டாடப்படுகிற ஒரு நடிகர் (over-rated) என்பது தான் எனது கருத்து. முறைப்படி இசை, நாட்டியம் பயின்றவர்; நடிப்பு, எழுத்து, இயக்கம் என்று பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்துகிறவர் என்று சொல்வோமேயானால், ஆமாம், கண்டிப்பாக பன்முகத்திறமைகளை உள்ளடக்கிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் அவர்தான் வரிசையில் முதலில் தென்படுகிறார் என்பது மிகவும் உண்மை. ஆனால், உலகநாயகன்....? மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ள முடியாது! அதுவும், மன்மதன் அம்பு படம் பார்த்தபிறகு, முடியவே முடியாது!

தான் இயல்பாய் நடிப்பதாய், எதையுமே இயல்பாய் செய்வதாய் வெளிக்காட்டும் பிரயத்தனங்களில் தன்னையுமறியாமல் சில தவிர்க்க முடியாத செய்ற்கைத்தனங்களை அவர் சுவீகரித்துக்கொண்டு விட்டார். மன்மதன் அம்பு படத்தில் பல இடங்களில் அவரது நடிப்பு மிகவும் ஊகிக்கத்தக்கதாக, சலிப்பூட்டுவதாக இருக்கிறது.

எண்பதுகளில் சிவாஜி ரசிகர்களுக்கே அவரது நடிப்பு குறித்து ஏற்படத்தொடங்கிய அதே சலிப்பின் அறிகுறிகள் இப்போது கமலின் நடிப்பு குறித்தும் தலைதூக்கியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ, வெறும் நடிப்பு போதாது என்று கதை, வசனம், பாடல்கள் என்று பல விசயங்களைக் கையாண்டு இதை ஒரு கமல் படமாக்க அவர் மிகவும் முயற்சி எடுத்திருக்கிறார். அதன் பலன் என்னவென்று, ஞாயிறன்றும் காலியாக இருக்கிற அரங்கங்கள் தெரிவித்திருக்கும்.

அதையும் மீறி, இந்த ’மசானத்தில் முத்தம்,’ படத்தை அடுத்து, ’கத்திமுனையில் ரத்தம்,’ என்று அவர் இதே மாதிரி ஒரு படத்தைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். அப்போதும் அதை வானளாவப்புகழ்கிற புத்திஜீவிகளுக்கும், ’புரியலியே’ என்று விழிக்கிற ரசனைகெட்ட ஆசாமிகளுக்கும் பஞ்சமிருக்காது.

13 comments:

  1. முதல் வடை எனக்கு



    இதையும் படிச்சி பாருங்க

    இந்தியா பைத்தியகார நாடு...?

    ReplyDelete
  2. பதிவர்கள் உதவி செய்வார்களா???


    http://selvanuran.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  3. நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்

    ReplyDelete
  4. அது மசானத்தில் முத்தம் அல்ல, மகாராணி முத்தம்!

    ReplyDelete
  5. ஒரு இயல்பான விமரிசனம், வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. /*** "அதை வானளாவப்புகழ்கிற புத்திஜீவிகளுக்கும், ’புரியலியே’ என்று விழிக்கிற ரசனைகெட்ட ஆசாமிகளுக்கும் பஞ்சமிருக்காது" ***/

    Appreciate that You understand this.

    ReplyDelete
  7. :))) இன்னும் பார்க்கவில்லை....

    ReplyDelete
  8. அப்போ படம் நல்லாயில்லீங்களா.

    ReplyDelete
  9. கமலின் எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகா வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கமலுக்கு உலக நாயகன் பட்டம் இதனால் தகுதி இல்லை என்பது உங்கள் வாதம்.

    ரஜனிக்கு கூட இந்த மாதிரி ஹைப் எல்லாம் ரொம்பவே ஓவர். ரஜனி ஒரு சாதாரண நடிகன். பல்வேறு மாறுபட்ட பரிமாணங்களில் அவரால் நடிக்க இயலாது. ஒரு அவ்வை ஷன்முகியிலோ ஒரு பஞ்சதந்திரத்திலோ ஒரு மைகல் மதன காமரசநிலோ அவரை நினைத்து கூட பார்க்க முடியாது. 'கடவுளே கடவுளே' காட்சியை தவிர அவரின் வேறு எந்த நகைச்சுவை காட்சியும் சட் என்று நினைவுக்கு வருவதில்லை. அவரின் காமடி படங்கள் என்று பார்த்தால் தில்லு முல்லு மட்டும்தான் இருaaக்கிறது. அதுவும் அவ்வளவு சிறப்பான காமடி என்றும் சொல்ல முடியாது. இந்த மாதிரியான ஒரு நடிகனுக்கு சூப்பர் ஸ்டார் என்று எபோதும் சொல்லலாம் என்றால், கமலுக்கு உலக நாயகன் பட்டம் மிக சிறப்புத்தான்,

    அதே சமயம் ஒரு கிராமத்து விவசாயி குப்பனிடம் இருக்கும் எதிர்பார்ப்பை விட ஒரு அப்துல் கலாமிடம் நமது எஹிர்பார்ப்பு மிக மிக அதிகமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  10. // அவ்வளவு மோசமான படமா இது என்றால் நிச்சயம் இல்லை //

    இந்த ஒரு வார்த்தையே போதும் சேட்டை...

    ReplyDelete
  11. //"நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!"// ஹா...ஹா....ஹா... நல்ல தமாஷா உண்மையை எழுதியிருக்கீங்க. இவரு ரொம்ப நாளா இதைத்தான் பண்ணி, நம்ம தலைஎழுத்தை நாமே நொந்துக்க வச்சிக்கிட்டு இருக்காரு. //சில இடங்களில் கமல் பேசுகிற தமிழ் வசனங்களே புரியவில்லை......அப்புறம், ஆங்கிலம் கரைபுரண்டு ஓடுகிறது!
    // இவரு நிஜ வாழ்க்கையில் கூட மேடைகளில் பேசுறாரு, தொலைக் காட்சிக்குப் பேட்டியும் குடுக்குறாரு. அங்கேயும் அதே பிரச்சினை. என்ன சொல்ல வராருன்னு புரியவே மாட்டேங்குது. [தமிழே இந்த பாடுபடும் போது ஒரு தடவை ஆங்கிலத்தில் பேட்டி, எவ்வளவு கொடுமையை இருக்கும்? இவரு எங்கேயிருந்துதான் வார்த்தைகளைப் புடிச்சுகிட்டு வந்தாருன்னே தெரியல்லை. நானும் எத்தனையோ பேரு ஆங்கிலம் பேசுறத கேட்டிருக்கேன், ஆனா இந்த இங்கிலீஷைக் கேட்டதேயில்லடா சாமி. NDTV காரன் ஏதோ புரிஞ்ச மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிகிட்டு ஆப்பப்ப ஹெ...ஹெ... என்று சிருச்சுகிட்டு இருந்தான். கொடுமை.] //தான் இயல்பாய் நடிப்பதாய், எதையுமே இயல்பாய் செய்வதாய் வெளிக்காட்டும் பிரயத்தனங்களில் தன்னையுமறியாமல் சில தவிர்க்க முடியாத செய்ற்கைத்தனங்களை அவர் சுவீகரித்துக்கொண்டு விட்டார்.// ரொம்ப இயல்பா இருக்கிறேன்னு சொல்லிட்டு கூட நடிகிரவளுங்களோட உதட்டை [டைரக்டர்கிட்ட கூட சொல்லாம] அடிக்கடி கவ்விடுராறு. நடிப்பு நடிப்பாத்தான் இருக்கணும், ரொம்பவும் நிஜம் மாதிரி ஆயிடக் கூடாது. பயித்தியக்காரன் மாதிரி நடிக்கணும், நிஜமாவே அந்த லெவலுக்குப் போகக் கூடாது. அதுக்கு பேசாம கீழ்ப்பாக்கம் போனா ஆயிரக் கணக்கில் நேராவே பாத்துட்டுப் போகலாம். சினிமாவுக்கு எதுக்கு வரணும்?ஆயிரம்தான் திறமைகள் இருந்தாலும் மக்கள் ஏத்துக்கணும், அது இல்லைன்னா நீ டம்மி பீசு/காமெடி பீஸஸாயிடுவே!!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!