Thursday, November 25, 2010

லிவிங் டுகெதர்-வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உனக்குத் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கிறாய்! ஆனால், உனது இச்செய்கையைக் கண்டு உனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று பலர் எள்ளி நகையாடுவார்கள் என்று புரியவில்லையா? நீ எவ்வளவு முயன்றாலும் அதற்கு உரிய பலனும் கிடைக்காமல் போவதால் உன் மீது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. உண்மையிலேயே நீ அறியாமையால் இதைச் செய்கிறாயா அல்லது எதற்கு வம்பு என்று புதுமையாக எதையும் முயற்சிக்காமல் உன்வழியே நீ போய்க்கொண்டிருக்கிறாயா என்று குழப்பமாக இருக்கிறது. ஒரு கதை கூறுகிறேன் கேள்," என்றது.

ஒரே ஒரு ஊரில் சேட்டைக்காரன் என்று ஒருவன் இருந்தான். அவனை சிறந்த அறிவாளி என்று தோராயமாக ஒரு நாலைந்து பேர் கருதினர். ’ஆத்துலே போற தண்ணியை அய்யாகுடி அம்மாகுடி,’ என்பது போல இந்த சேட்டைக்காரனும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, வருந்தி வருந்தி இடுகைகள் எழுதி எல்லாரையும் வருத்தி, அதாவது மகிழ்வித்துக் கொண்டிருந்தான். மம்மியே வந்து கும்மினாலும், ’மொக்கையது கைவிடேல்’ என்ற கொள்கையிலிருந்து அவன் அம்மியைப் போல இம்மியளவும் நகராமல் இருந்தான்.

டிசம்பர் சீசன்,மாம்பழ சீசன், சபரிமலை சீசன், குற்றால சீசன் என்று இருப்பதுபோல, வலையுலகில் அவ்வப்போது ஏதாவது சீசன் வந்துபோய்க்கொண்டிருக்கும். ஒரு சீசனும் இல்லாவிட்டாலும், எவனையாவது அல்லது எவளையாவது வம்புச்சண்டைக்கு இழுத்தாவது புதுப்புது சீசனைக் கண்டிபிடிக்காவிட்டால், வலையுலகில் நிறைய பேருக்கு ஹிட்ஸ் கிடைக்காது; புதிதாகப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெங்காயவிலை போல குப்பென்று ஏறாது என்பது எழுதப்படாத விதி. சமீபகாலமாக வலையுலகில் சக்கை போடு போட்டுக்கொண்டிருப்பது லிவிங் டுகெதர் சீசன்!

சேட்டைக்காரனுக்கு அறிவு மிக அதிகம் என்பதால், அதை அவன் ஒருபோதும் உபயோகித்து இடுகைகள் எழுதுவதில்லை என்பதை அனைவரும் அறிவர். எனவே, அவன் வழக்கம்போல, ஸ்ரேயாவின் படத்தைப் போட்டு சிலபல மொக்கைகளை எழுதியும், இலவசமாகக் கிடைத்த ஒரு மென்பொருளை உபயோகித்து கச்சாமுச்சாவென்று சில படங்களைப் போட்டும் "நானும் ரவுடிதான்,’ என்று வலையுலகில் வலம்வந்து கொண்டிருக்கிறான்.

இந்த சூழ்நிலையில், சேட்டைக்காரனுக்கு மிகவும் வேண்டிய சகபதிவர்கள் ’லிவிங் டுகெதர்’ பற்றி ஒரு ரவுண்டு எழுதி முடித்து விடவே, அவனும் அவ்வப்போது தொகுதிக்குப் போகும் எம்.எல்.ஏ.போல சில இடுகைகளுக்குச் சென்று பின்னூட்டமும் எழுதித் தொலைத்துவிட்டான். ஆனால், லிவிங் டுகெதர் குறித்து தனது வலைப்பதிவில் அவன் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கவே, இதைக் கண்டித்து 25-11-2010 அன்று சென்னையில் நகரப்பேருந்துகள் எதுவும் ஓடவில்லை.

கூடிய விரைவில் ’லிவிங் டுகெதர்’ குறித்து சேட்டைக்காரன் இடுகை எழுதாவிட்டால், சென்னையிலுள்ள அனைத்து வலைப்பதிவர்களையும் ’விருதகிரி’ படத்தின் முதற்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக, அதன் தயாரிப்பாளர் தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வரவே, பல பதிவர்கள் தத்தம் கணினிகளைக் காயலான்கடைக்கு எடுத்துச் செல்வதாக காற்றுவாக்கில் செய்தி வந்தவண்ணம் உள்ளது.

"பொறுத்தது போதும்; பொங்கி எழுது,’ என்று சேட்டைக்காரனும் ’லிவிங் டுகெதர்’ குறித்து எழுதுவதற்காக வழக்கம்போலவே, தட்ஸ் டமில் மற்றும் மாலைமலர் இணையதளங்களுக்குச் சென்றபோது அவனது கண்களில் இந்தச் செய்திபட்டது.

"காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது: ரூ.7 லட்சம் நகை- பணம் பறிமுதல்

பெரம்பூர், நவ 24

சென்னை யானைக்கவுனி கல்யாணபுரத்தை சேர்ந்தவன் சோனிராஜ் (வயது 29). பிரபல கொள்ளையன். 2 முறை குண்டர் சட்டத்தில் சென்றவன். இவனது காதலி தனலட்சுமி.

காதலியுடன் உல்லாசமாக வாழ சோனிராஜ் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடி வந்தான். ஓட்டேரி ஈகின் கார்டன் ஜதர்கார்டன், வாளைமாநகர் பகுதியில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்தான்.

ஒட்டேரி உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி சோனிராஜை கைது செய்தனர். இவனிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்."

இந்தச் செய்தியைப் படித்ததும், இதையே தனது ’லிவிங் டுகெதர்’ இடுகையில் எழுதிவிடலாம் என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்தான் சேட்டைக்காரன். அப்படியே எழுதியும் விட்டான்.

இக்கதையைக் கூறி முடித்த பின் வேதாளம், "விக்கிரமா? இந்தச் செய்தியில் திருமணத்துக்கு முன்னர் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே! வழக்கம்போல சம்பந்தா சம்பந்தமில்லமால் இந்த இடுகையிலும் சேட்டைக்காரன் கிறுக்குத்தனமாக இதை எழுதியிருப்பது ஏன்? மற்ற வலைப்பதிவர்களைப் போல ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி எழுதாமல், அத்துடன் கொஞ்சம் கூட தொடர்பில்லாத இந்த செய்தியை இடுகையாகப் போட்டு வாசகர்களின் உசிரை வாங்குவது ஏன்? இது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன் "அட வெவரம் கெட்ட வேதாளமே! உனக்கு சேட்டைக்காரனே தேவலாம் போலிருக்குதே! இந்தச் செய்தியிலே வர்ற திருடனோட பேரு சோனிராஜ்! பொதுவா சேட்டைக்கு சோனியா அகர்வால், சோனியா காந்தி தவிர, சோனியா இருக்கிறதும் பிடிக்கும்; சோனியா இருக்குறவங்களையும் புடிக்கும். அத்தோட இந்தத் திருடன் தன் வயித்துப் பசிக்காகத் திருடலே! தன் காதலி மேலேயிருந்த கண்மூடித்தனமான காதலுக்காக திருடினான். வலைப்பதிவாளர்கள் இப்போ விவாதிச்சிட்டிருக்கிறது: LIVING TOGETHER! ஆனா, சோனிராஜோட கொள்கையோ "LIVING-TO-GET-HER". ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி இடுகை எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"

விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவனது மவுனம் கலையவே, பழையபடி அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது. விரக்தியடைந்த விக்கிரமன் சேட்டைக்காரனை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்துப்போனான்.

24 comments:

  1. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா?

    ReplyDelete
  2. நல்ல பதிவு, சோனிராஜ் என்ற உடன் என் மூளை கண்ணா பின்னா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது, இதை கொஞ்சம் கனிவுடன் சொல்லியிருந்தால் திருடன் நிலை தெளிவாக புரியும்.

    ReplyDelete
  3. அக்மார்க் சேட்டை.... :-)

    ReplyDelete
  4. //அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்துப்போனான்.//

    என்ன சோகமா முடிச்சிட்டீங்க

    ReplyDelete
  5. LIVING TOGETHER! ஆனா, சோனிராஜோட கொள்கையோ "LIVING-TO-GET-HER". ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி இடுகை எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"


    ...... சேட்டைக்காரனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ள நக்கல் பதிவு.

    ReplyDelete
  6. Spelling மிஸ்டேக்கு...

    பேரு சோனிராஜ்! என்பதற்குப்பதில்...
    சோனியாராசா என்று இருக்கவேண்டும்..ஹா..ஹா

    ReplyDelete
  7. ஆந்திராவுக்கு வந்து வெட்டுவேன்

    ReplyDelete
  8. //விரக்தியடைந்த விக்கிரமன் சேட்டைக்காரனை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்துப்போனான்.//

    இது தான் லிவிங் டு கெதர் ன்னு எனக்கு தெரியாம போச்சு :)

    ReplyDelete
  9. //"பொறுத்தது போதும்; பொங்கி எழுது,’

    செம சேட்டை

    //LIVING TOGETHER! ஆனா, சோனிராஜோட கொள்கையோ "LIVING-TO-GET-HER".

    எப்படிங்க இப்படில்லாம்..

    அசத்தலா சேட்டை பண்ணிருக்கீங்க..

    ReplyDelete
  10. living to get herக்கு ஒரு புது விளக்கமே கொடுத்துடீங்க தல ... நக்கல் கலக்கல்

    ReplyDelete
  11. "LIVING TOGETHER - LIVING TO GET HER" - ஆஹா, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க சேட்டை. கலக்கல். இதுல சோனிராஜா வேற...:))))

    ReplyDelete
  12. எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ..கலக்கல்

    எழுதிய விதம் அருமையிலும் அருமை..

    ReplyDelete
  13. ஹா,ஹா,ஹா,...... சேட்ட........ ஆனாலும் கடைசில உன் நேர்மை யானைக்கு புடிச்சிருக்கு ..... ஒழிந்தான் சேட்டைக்காரன்......ஹா,ஹா,ஹா

    ReplyDelete
  14. சேட்டையின் மற்றுமொரு சிறப்பான கைவண்ணம்.

    ReplyDelete
  15. செம பதிவு சார்! தங்கள் நகைச்சுவைக்கு என் வணக்கங்கள்!

    ReplyDelete
  16. உண்மையாலுமே நீர் சேட்டைக்காரன் தான்.

    உமது நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்க்ள்.

    ReplyDelete
  17. //விரக்தியடைந்த விக்கிரமன் சேட்டைக்காரனை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு //

    இது இது இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு சேட்டை..

    ReplyDelete
  18. //KANA VARO said...

    இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா?//

    இது ஒரு பிரச்சினையே இல்லேங்குறது தானே என் வாதம்! நன்றி!

    //பித்தனின் வாக்கு said...

    இதை கொஞ்சம் கனிவுடன் சொல்லியிருந்தால் திருடன் நிலை தெளிவாக புரியும்.//

    கடுமையான வார்த்தைகளை நான் எப்போதுமே கையாள்வதில்லையே! நன்றி!

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    kalakkal post//

    மிக்க நன்றி!

    //அகல்விளக்கு said...

    அக்மார்க் சேட்டை.... :-)//

    மிக்க நன்றி! பார்த்து ரொம்ப நாளாச்சு! :-)

    வார்த்தை said...

    //என்ன சோகமா முடிச்சிட்டீங்க//

    என்னத்தைப் பண்ண? வேதாளம் தற்கொலை பண்ணிக்க முடியாதே? :-)
    நன்றி!

    //Chitra said...

    ...... சேட்டைக்காரனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ள நக்கல் பதிவு.//

    மிக மிக நன்றி! :-)

    ReplyDelete
  19. //பட்டாபட்டி.. said...

    Spelling மிஸ்டேக்கு...
    பேரு சோனிராஜ்! என்பதற்குப்பதில்...சோனியாராசா என்று இருக்கவேண்டும்..ஹா..ஹா//

    ஆஹா, இந்த மேட்டருலே இருக்கிற சங்கதியே போதாதா? இதுலே அரசியலை வேறே நுழைக்கிறதா? நன்றி! :-))

    //LK said...

    ஆந்திராவுக்கு வந்து வெட்டுவேன்//

    படிக்காதவன் படத்து விவேக் மாதிரியா கார்த்தி? :-)

    நன்றி!!

    //dr suneel krishnan said...

    இது தான் லிவிங் டு கெதர் ன்னு எனக்கு தெரியாம போச்சு :)//

    எனக்குக் கூட இதை எழுதுற வரைக்கும் தெரியாதுங்க! :-)

    நன்றி!

    //பிரியமுடன் ரமேஷ் said...

    செம சேட்டை எப்படிங்க இப்படில்லாம்..
    அசத்தலா சேட்டை பண்ணிருக்கீங்க..//

    ஹிஹி! எல்லாம் ஒரு ஃபுளோவிலே வர்றது தான்! :-))

    நன்றி!

    //"ராஜா" said...

    living to get herக்கு ஒரு புது விளக்கமே கொடுத்துடீங்க தல ... நக்கல் கலக்கல்//

    எல்லாரும் அதைத் தானே பண்ணிட்டிருக்காங்க! :-)
    நன்றி!

    //வெங்கட் நாகராஜ் said...

    "LIVING TOGETHER - LIVING TO GET HER" - ஆஹா, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க சேட்டை. கலக்கல். இதுல சோனிராஜா வேற...:))))//

    மிக்க நன்றி சார்! தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வருகிறீர்கள்! :-)

    ReplyDelete
  20. //முத்துலெட்சுமி/muthuletchumi said...

    :))

    ஒரே ஒரு நகைப்பான்? பெயருக்கேத்த மாதிரி எப்பவுமே ’சிறுமுயற்சி’ தானா? நன்றி! :-)

    //ஹரிஸ் said...

    எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ..கலக்கல்//
    எழுதிய விதம் அருமையிலும் அருமை..

    எல்லாம் சகவாசதோசம் தானுங்க! :-)
    மிக்க நன்றி!

    //மங்குனி அமைச்சர் said...

    ஹா,ஹா,ஹா,...... சேட்ட........ ஆனாலும் கடைசில உன் நேர்மை யானைக்கு புடிச்சிருக்கு ..... ஒழிந்தான் சேட்டைக்காரன்......ஹா,ஹா,ஹா//

    ஒழிஞ்சது விக்கிரமன்! சேட்டைக்காரன் இல்லை. அதுலே அவ்வளவு சந்தோஷமா? :-)) நன்றி!!

    //நாகராஜசோழன் MA said...

    சேட்டையின் மற்றுமொரு சிறப்பான கைவண்ணம்.//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    //எஸ்.கே said...

    செம பதிவு சார்! தங்கள் நகைச்சுவைக்கு என் வணக்கங்கள்!//

    மிக்க நன்றிங்க! எதுக்கு வணக்கமெல்லாம்..., நாமெல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு! :-)

    //வெட்டிப்பேச்சு said...

    உண்மையாலுமே நீர் சேட்டைக்காரன் தான்.
    உமது நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்க்ள்.//

    மிக்க நன்றிங்க! உங்களது மருத்துவ இடுகைகளை நான் வாசித்து வருகிறேன். :-)

    //இந்திரா said...

    //இது இது இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு சேட்டை..//

    ஒருத்தருக்கு சேட்டைக்காரன் தூக்குலே தொங்குனா பிடிச்சிருக்கு! இன்னொருத்தருக்கு சேட்டையை யாராவது கண்டபடி திட்டுனா பிடிச்சிருக்கா? ரொம்ப சந்தோஷமுங்க! நானும் பெரிய பதிவராயிட்டேன் போலிருக்குதே! நன்றி! :-)

    ReplyDelete
  21. ஊர்ல இருந்து வந்ததுக்கப்பறம் இந்த பதிவு படிச்சிட்டுத்தான் கொஞ்சம் சிரிச்சேன் தல. கலக்கல்.

    ReplyDelete
  22. //LIVING TOGETHER! ஆனா, சோனிராஜோட கொள்கையோ "LIVING-TO-GET-HER".//

    Oru puthiya artham
    \Valthukal settaikarare................

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!