Friday, November 19, 2010

புள்ளாகொழம்பு

"சேட்டை, மணி ஒண்ணாச்சே? சாப்பிடப்போகலாமா?"

"வரதாச்சாரி சார், நீங்க வெளியிலே சாப்பிடவே மாட்டீங்களே?" நான் வியப்புடன் கேட்டேன். "என்னாச்சு இன்னிக்கு?"

"நோக்கு விஷயமே தெரியாதா? இன்னிக்கு ஆண்கள் தினமோன்னோ?" என்று உற்சாகமாகக் கூறினார் வரதாச்சாரி. "அதுனாலே தான் இன்னிக்கு எல்லாமே ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு பார்க்கிறேன்."

"அப்படீன்னா இன்னிக்கு ஒருநாள் உங்க வீட்டுலே மாமி சமையலா?"

"என்ன கொழுப்பா? ஒரு நாள் அவ பண்ணற புள்ளாகொழம்பையும் பருப்பு உசிலியும் சாப்பிட்டுப் பாரு! அடுத்த கோரமண்டலைப் புடிச்சு விசாகப்பட்டணத்துக்கே ஓடிப்போயிடுவே!"

"அதென்ன சார் புள்ளாகொழம்பு? கேள்விப்பட்டதேயில்லையே?"

"புளியில்லாக் கொழம்புடா அசடு! வளவளன்னு பேசிண்டிருக்காம எந்துண்டுவா! நேக்கு கபகபன்னு பசிக்கறது."

ஹும், பிஸ்மில்லாவிலிருந்து அரை பிளேட் பிரியாணி ஆர்டர் செய்யலாம் என்ற ஆசையில் மண் விழுந்தது. இன்றைக்கு ராம பவனோ, சங்கீதாவோ போய் சாப்பாடுதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வரதாச்சாரியோடு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

"சேட்டை, இந்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்னு ஒண்ணு இருக்காமே? நோக்குத் தெரியுமா?"

"கேள்விப்பட்டிருக்கேன் சார். என்ன விஷயம்?"

"அவா கிட்டே சொல்லி இந்த புள்ளாகொழம்பை தடைபண்ணறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா? நேக்கு நாக்கு செத்துப்போயிடுத்துடா!"

"சார், அவங்க எவ்வளவு பெரிய பெரிய விஷயங்களுக்காகவெல்லாம் போராடிட்டிருக்காங்க! போயும்போயும் உங்க புள்ளாகொழம்பு மேட்டருக்கெல்லாம் அவங்களை இழுக்கறீங்களே?"

"அதுவும் சரிதான், அவாளெல்லாம் எங்கே புள்ளாகொழம்பு சாப்பிட்டிருக்கப் போறா? கொடுத்து வச்சவா!"

"சார், அவங்கல்லாம் பெண்களாலே ரொம்ப பாதிக்கப்பட்டவங்க சார்!

"என்ன பாதிப்பாம்? கொஞ்சம் விபரமாத்தான் சொல்லேன். நானும் தெரிஞ்சுப்பேனோல்லியோ?"

"அதாவது சார், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் இருக்கில்லையா, அதுலே பொய் கேஸ் போட்டு, மாமனார், மாமியார் எல்லாரையும் கூண்டோட ஜெயிலுக்கு அனுப்பிடறாங்களாம்!"

"யாரு பொம்மனாட்டிகள் தானே? பண்ணுவா...பண்ணுவா! நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என் கல்யாணத்தப்போ ஜானவாசத்துக்கு கோட்டு தர்றேன்னு சொன்னா. நானும் ஜெமினி கணேசன் மாதிரி கோட்டெல்லாம் போட்டுண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கலாம்னு ஆசையா காத்திண்டிருந்தா, நேக்கு ரெயின்-கோட்டை வாங்கிக் கொடுத்துட்டாடா!"

"அதுனாலேன்ன சார், அடுத்த நாள் காசியாத்திரைக்குக் குடையும் கொடுத்திருப்பாங்களே? மழைக்காலத்துலே உங்களுக்கும் ஒரு செலவு மிச்சம் தானே?"

"அதுபோனாப் போறதுன்னு நானும் விட்டுட்டேன்னு வையேன். ஆனா, இந்தப் புள்ளாகொழம்புதான் டாலரேட்டே பண்ணமுடியலேடாப்பா! அது போகட்டும், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இன்னம் வேறே என்னென்னத்துக்குப் போராடறா?"

"இந்தக் குடும்ப வன்முறைச்சட்டம்னு ஒண்ணு இருக்கு சார்! புருசன் அடிச்சிட்டான்னு புகார் சொல்லி போலீஸ்லே புடிச்சுக்கொடுத்திடறாங்களாம்."

"நன்னாத்தானிருக்கு போ! இவா பண்ணற வயலென்ஸ் எதுலே சேர்த்தியாம்? போனமாசம் நான் ஆடி அசந்து ஆத்துக்குள்ளே போயி ’அடியே பங்கஜம், ஒரு வாய் காப்பி போட்டுத்தாயேன்,’னு கேட்டதுக்குப் பிலுபிலுன்னு பிடிச்சுண்டுட்டா...!"

"அப்படியா?"

"ஆமா, அங்கே அகிலா கேன்சர்லே செத்துண்டிருக்கா. உங்களுக்கு காப்பி கேக்கறதான்னு சண்டைக்கு வந்துட்டான்னா பாரேன்!"

"அடடா, யாரு சார் அகிலா?"

"எல்லாம் டிவி.சீரியல் ஹீரோயின் தான்! நேக்கென்னமோ அந்த அகிலா அடுத்த வைகுண்ட ஏகாதசி வரைக்கும் சாவாள்னு தோணலை. இப்போத்தான் டாக்டர் வந்து பார்த்துட்டு அம்பதாயிர ரூபாய் பணம் கேட்டிருக்கார். அவா பாத்திரம் பண்டத்தையெல்லாம் வித்துக் காசாக்கிண்டு வர்ற வரைக்கும் நான் காப்பி சாப்பிடாம இருக்க முடியுமோ?"

"அது சரி! கடைசியிலே காப்பி கொடுத்தாங்களா இல்லையா?"

"கொடுக்காம என்ன, ஒரு கப் காப்பியைக் கொடுத்துட்டு சீரியல் முடியுற வரைக்கும் வாயத்திறக்கப்படாதுன்னு வேறே சொல்லிட்டா...!"

"அட பாவமே, நீங்களும் வாயைத் திறக்காமலே இருந்தீங்களாக்கும்?"

"எப்படிடா திறப்பேன்? அவ காப்பியிலே சர்க்கரைக்குப் பதிலா ரவையைப் போட்டுக் கொடுத்திட்டாடா! இந்த லோகத்துலேயே தம்ளரிலே உப்புமா சாப்பிட்டவன் நான் ஒருத்தன் தான் தெரியுமோ?"

"அச்சச்சோ! உண்மையிலேயே இது ரொம்பக் கொடுமைதான்!"

"ஏதோ, தெனமும் புள்ளாகொழம்பு சாப்பிட்டு சாப்பிட்டு நேக்கு எல்லாமே இம்யூன் ஆயிடுத்தோ தப்பிச்சேனோ!"

"நீங்க சொல்லுறதைப் பார்த்தா எனக்கே ஒருவாட்டி உங்கவீட்டுப் புள்ளாகொழம்பு சாப்பிடணும் போலிருக்கு சார்!"

"நோக்கு ஏண்டா இந்த விபரீதமான ஆசையெல்லாம்? ஏதோ இது நைன்டீன் ஃபிஃப்டீ பாடிங்கிறதுனாலே தாக்குப்பிடிச்சிண்டிருக்கு! அப்புறம் இன்னொரு விஷயம்! ஆத்துக்காரி தளிகை பண்றச்சே, நான்தான் காய்கறியெல்லாம் நறுக்கிக் கொடுப்பேன் தெரியுமா?"

"சார், இதெலென்ன சார் தப்பு? நம்மாலானத நாமும் செஞ்சா அவங்களுக்கு உதவியாத்தானே இருக்கும்?"

"முழுசாக்கேளுடா அபிஷ்டு! அதுலே வெண்டைக்காய், கத்திரிக்காயெல்லாம் ஈஸியா நறுக்கிடலாம். அதை அவ பண்ணிட்டு, முட்டக்கோசு, சேனைக்கிழங்கு மாதிரி கஷ்டமான காய்கறியெல்லாம் என்னைக் கொடுத்து நறுக்கச் சொல்லுறாடா!"

"என்ன சார் அழுகுண்ணியடிக்கிறீங்க? இதெல்லாம் ஒரு மேட்டரா?"

"அப்படிச்சொல்லாதே சேட்டை! சேனைக்கிழங்கை வெட்டிப்பாரு தெரியும். அன்னிக்குப்பூரா உடம்பு அரிச்சிண்டே இருக்கும். சொறிஞ்சு சொறிஞ்சு இப்பல்லாம் நங்கநல்லூர்லே எல்லாரும் என்னை வரதாச்சொறின்னு தான் கூப்பிடறா தெரியுமோ?"

"கஷ்டம் தான் சார்! ராமபவனுக்கே போயிடலாமா?"

"ஓ யெஸ்! அப்புறம் சேட்டை, நீ எப்பவாச்சும் எங்காத்துக்கு வந்தேன்னா, நான் சொன்னதை மாமி கிட்டே சொல்லிடாதே! அவளுக்கு யாராவது என்னைப் பத்தித் தப்பாச் சொன்னாக் கூட கோபம் வராது; ஆனா, புள்ளாகொழம்பப் பத்தித் தப்பாச் சொன்னா துவம்சம் பண்ணிடுவா!"

"அடிப்பாங்களா சார்?"

"சேச்சே! அன்னிக்கு சாயங்காலம் பிரண்டை அல்வாய் பண்ணி சாப்பிட்டே ஆகணுமுன்னு அடம் பிடிப்பா! என் சம்பளத்துலே பாதி மல்லிகா பத்ரிநாத் புஸ்தகத்துக்கும், டாக்டருக்குமே போறதுடா!"

"கவலைப்படாதீங்க சார்! சொல்ல மாட்டேன்!"

"நீ சொல்ல மாட்டேன்னு தெரியும்! இருந்தாலும்....ஹிஹி!"

"நான் கூட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு மேட்டர் சொல்லணும் சார்! நடிகை சோனா அரசியலுக்கு வர்றாங்களாம். அவங்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுன்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சொல்லணும்."

"நேக்கு சோனாவெல்லாம் தெரியாதப்பா! நான் கடைசியாப் பார்த்தபடம் குலேபகாவலி!"

"என்ன சார்? முதலமைச்சரைப் பார்த்து அஞ்சு லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்திருக்காங்க! ரஜினியோட குசேலன் படத்துலே நடிச்சிருக்காங்க! பொறந்தநாளைக்கு அனாதைக்குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டிருக்காங்க! பேப்பருலே போட்டோ போட்டு நியூஸ் வந்திச்சே?"

"ஓ! அப்படியா? அப்படீன்னா, எலெக்ஷனிலே நின்னு ஜெயிச்சு சீஃப் மினிஸ்டராயிட வேண்டியதுதான். தப்பில்லை!"

"அப்படிச் சொல்லாதீங்க சார்! அவங்க கொள்கை என்ன தெரியுமா? "ஆண்களை நம்பாதே!" அவங்களுக்கு ஆம்பிளைங்க ஓட்டுப்போடலாமா சார்?"

"நான் போடுவேன். புள்ளாகொழம்பைத் தடை பண்ணினா, நான் கண்டிப்பாப்போடுவேன்!"

பேசிக்கொண்டே ராமபவனுக்குள் நுழைந்து சாப்பாட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.

"நாராயணா..நாராயணா! ஹோட்டல்லே சாப்பிட்டு எவ்வளவு வருஷமாச்சு தெரியுமோ? இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப்போறேன் பாரேன்!" வரதாச்சாரி ஆர்வத்தோடு முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டுக்கொண்டு உட்கார, ஹோட்டல் சிப்பந்திகள் பரிமாறத்தொடங்க, திடீரென்று வரதாச்சாரியின் முகம் மாறியது.

"சேட்டை, என்னடா இது?"

"என்னாச்சு சார்?"

"இங்கேயும் புள்ளாகொழம்பா? பெருமாளே.....!"

15 comments:

  1. சேட்டைக்கு புள்ளாக் குழம்பும் ஆயுதம்:)))

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா.

    காலங்காத்தால நல்ல நகைச்சுவை மூடு வரவெச்சிட்டீங்க. மிக ரசித்தேன் சேட்டைத் தம்பி

    ReplyDelete
  3. அதென்ன சார் புள்ளாகொழம்பு? கேள்விப்பட்டதேயில்லையே?"
    //

    அண்ணே.. புளி கொட்டையோடா? இல்லாமலா?...

    ReplyDelete
  4. வழக்கம் போல் கலக்கல்.

    ReplyDelete
  5. //"அப்படிச்சொல்லாதே சேட்டை! சேனைக்கிழங்கை வெட்டிப்பாரு தெரியும். அன்னிக்குப்பூரா உடம்பு அரிச்சிண்டே இருக்கும். சொறிஞ்சு சொறிஞ்சு இப்பல்லாம் நங்கநல்லூர்லே எல்லாரும் என்னை வரதாச்சொறின்னு தான் கூப்பிடறா தெரியுமோ?//
    //எப்படிடா திறப்பேன்? அவ காப்பியிலே சர்க்கரைக்குப் பதிலா ரவையைப் போட்டுக் கொடுத்திட்டாடா! இந்த லோகத்துலேயே தம்ளரிலே உப்புமா சாப்பிட்டவன் நான் ஒருத்தன் தான் தெரியுமோ?"//
    அட்டகாசம் :)
    மனம் விட்டு சிரித்தேன் :).

    ReplyDelete
  6. என்ன சேட்டை, சமையலை கிண்டல் செய்து ஒரு பதிவா. ஜாக்கிரதை! அட்டாக் ஆரம்பிச்சிட போகுது….

    ReplyDelete
  7. சுப்பர் இருக்கு சேட்டை.. நேக்கு சிரிப்பா வருது..

    ReplyDelete
  8. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப்போனா,அங்கேயும் ரெண்டு கொடுமை தலை விரிச்சு ஆடிச்சாம் ன்ற கதையாவில்ல இருக்கு?

    வயித்துவலி மாத்திரை ஒண்ணு அனுப்புங்க!(சிரிப்புனாலே வந்தவலி)

    ReplyDelete
  9. புள்ளாகொழம்பை//

    ஹா ஹா

    ReplyDelete
  10. எங்க தாத்தாக்கு செய்யும் புளியிலாகுழம்புக்கு நாங்கல்ளாம் போட்டி போடுவோம் ;) அது நினைவுக்கு வந்தது..

    ReplyDelete
  11. அண்ணே பாத்து மகளிர் அணி அட்டாக் பண்ணிடப் போறாங்க!

    ReplyDelete
  12. ஒன்லி மொக்கைக்கு ஏன் இந்த பதிவை போஸ்ட் பண்ணலை. ஆளே காணம்

    ReplyDelete
  13. //"சேட்டை, என்னடா இது?"

    "என்னாச்சு சார்?"

    "இங்கேயும் புள்ளாகொழம்பா? பெருமாளே.....!"//
    நல்ல சிரிப்பா தானுங்க இருக்கு :D

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!