Monday, November 15, 2010

கை கொடுக்கும் கை!

வழக்கத்துக்கு மாறாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் காலை முதலே தொலைபேசியின் மணி அடித்துக்கொண்டேயிருந்தது.

"ஹலோ! நாங்க தினப்புளுகு பத்திரிகையிலிருந்து பேசுறோம்! தலைவரு இருக்காருங்களா?"

"கட்சித்தலைவரா? கோஷ்டித்தலைவரா?"

"ஓ! அதை மறந்திட்டேனுங்க சார்! சரி, இன்னி தேதியிலே உங்க கட்சியிலே எத்தனை கோஷ்டிங்க இருக்கு. சும்மா தோராயமா சொன்னாப் போதுங்க!"

"ஒரு பத்து நிமிஷம் கழிச்சுக் கூப்பிடறீங்களா? இன்னும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வரலே!"

"பரவாயில்லே சார்! எனக்கு ஒரே ஒரு தகவல் தெரியணுங்க! உங்க ஆபீஸ் வாசல்லே ஒரே கூட்டமாயிருக்கே, யாராச்சும் தில்லியிலேருந்து உங்க தலைவருங்க வராங்களா?"

"தில்லியிலேயிருந்து வந்தா இங்கே ஏன் வர்றாங்க? அவங்க பாட்டுக்கு கோபாலபுரத்துக்குப் போயி சி.எம்மைப் பார்த்திட்டு அடுத்த ஃபிளைட்டைப் புடிச்சு திரும்பிப் போயிருவாங்களே?"

"ஒ! நன்றி சார்!"

தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்ட மறுகணமே, மீண்டும் சிணுங்கியது.

"ஹலோ! காங்கிரஸ் ஆபீஸா? நாங்க சேட்டை டிவியிலேருந்து பேசுறோம்! உங்க ஆபீஸ் வாசல்லே ஒரே கூட்டமா இருக்குதாமில்லே? ஏதாவது பெரிய கோஷ்டிப்பூசலா? சண்டை சச்சரவு ஏதாவது நடக்குமுன்னா, நாங்களும் வாடகைக்கு ஒரு கேமிராவை வாங்கிட்டு உடனே வந்திடுவோம் சார்! என்ன சார் மேட்டர்?"

"என்னய்யா கிண்டலா? நாங்க என்ன இன்னி நேத்திக்கா கோஷ்டிச்சண்டை போடுறோம்? எங்க பராம்பரியம் தெரியாமக் கேள்வி கேட்காதீங்க! போனை வையுங்கய்யா!"

போனை வைத்துவிட்டு அந்தத் தொண்டர் வெளியே நோட்டமிட்டார். ’அட ஆமாம், வாசல்லே என்ன திடீர்னு இவ்வளவு கும்பல்?’

மீண்டும் தொலைபேசி.....! ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

"ஹலோ! சார், எனக்கு ஒரு லோடு சிமென்டு வேணும் சார்! வண்டியை அனுப்பட்டுங்களா?"

"ஹலோ! இது கட்சி ஆபீஸ்! சிமென்ட் கடையில்லை! எங்க கிட்டே சிமென்ட் இருந்திருந்தா, கட்சியிலே இருக்கிற பொத்தலையெல்லாம் அடைச்சிருக்க மாட்டோமா? வைய்யா போனை...!"

ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

"ஹலோ!"

"ஹலோ! அண்ணே! ஒரு வண்டி ஜல்லி கிடைக்குங்களா? கான்க்ரீட் வேலை அப்படி அப்படியே நிக்குதுண்ணே!"

"அடாடாடா! காலங்கார்த்தாலே ஏன்யா கழுத்தறுக்கறீங்க? ராங் நம்பர் போட்டிருக்கீங்கய்யா....!"

தொண்டர் ஆசுவாசமாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டார். "இன்று யார் முகத்தில் விழித்தோம்?"

ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

"ஹலோ! ஒரு மூட்டை பொன்னி பச்சரிசி; பத்து கிலோ அஸ்கா சர்க்கரை; துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஒவ்வொரு கிலோ; அப்படியே பெருங்காயம் ஒரு சின்ன டப்பா...."

"யாருலே அது? இதென்ன மளிகைக்கடையா? கட்சி ஆபீசுலே! நம்பரை சரியாப் பார்த்துக் கூப்பிடுங்க...!"

ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

தொண்டருக்கு உறைத்தது. ’என்னவோ தவறு நடந்திருக்கிறது; அதனால் தான் கட்சி அலுவலகத்தின் வாசலில் இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதோ? போய் என்னவென்று கேட்டு விடலாம்...!"

"இந்தாம்மா! இப்படி வாங்க, என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"தலைவரைப் பார்க்க தண்டையார்பேட்டையிலேருந்து வந்திருக்கேங்க!"

"அது சரி, எதுக்கு கையிலே ரெண்டு மூணு பையோட வந்திருக்கீங்க?"

"ஒரு மாசத்துக்குத் தேவையான அரிசி,பருப்பு வாங்கணுமில்லே?"

"என்னம்மா சொல்றீங்க?"

இதற்குள் கூட்டத்திலிருந்து இன்னொரு பெண்மணி முண்டியடித்து முன்னேறி வந்தார்.

"ஐயா மகராசா! நீங்க நல்லாயிருக்கணும்! அடுத்த வாரம் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். பாழாப்போன வெங்காயம் கிலோ நாப்பது ரூபாய் விக்குது. கிலோ மூணு ரூபாய்க்குச் சீரழிஞ்சிட்டிருந்த முருங்கைக்காய் இப்போ நூறு ரூபாய்க்கு விக்குது! தலைவர் கிட்டே சொல்லி நீங்கதானய்யா ஏதாவது சல்லிசா வாங்கித்தரணும்...!"

தொண்டருக்குத் தலை சுற்றியது.

"என்னம்மா எங்க கட்சி ஆபீஸ்லே வந்து காமெடி பண்ணிட்டிருக்கீங்க? அதுக்கெல்லாம் இங்கேயே நிறைய பேரு இருக்காங்க தெரியுமா? இங்கே மளிகை சாமானும் காய்கறியும் விக்குறோமுன்னு யாரு சொன்னாங்க? நாங்கல்லாம் கொள்கையைக் கூட விக்குறதில்லே தெரியுமா? ஸ்டாக் எப்பவோ தீர்ந்து போச்சு! போங்கம்மா, வீட்டுக்குப் போயிச் சேருற வழியைப் பாருங்க!"

"என்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க? உங்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தானே ’சிமென்ட் விலை குறையலேன்னா, சலுகை விலையிலே சத்தியமூர்த்தி பவன்லே காங்கிரஸ் விற்பனை செய்யும்,’னு அறிக்கை விட்டாரு! சிமென்ட், ஜல்லி, மணல் மட்டும் வித்தாப்போதுமா? மளிகை, காய்கறி விலையுந்தான் தினமும் ஏறிக்கிட்டே போகுது! அதையும் இங்கேயே சலுகை விலைக்கு வித்தீங்கன்னா, எங்களுக்குப் பணமும் மிச்சம்; கோயம்பேடு போற அலைச்சலும் மிச்சமாகுமில்லே?"

தொண்டர் மூர்ச்சையடைந்தார்.

11 comments:

  1. நல்லா கீது பா. ஒரு பத்து கிலோ கோதுமை மாவு கிடைக்குமான்னு கேட்டு சொல்லேன், தில்லில நாங்க ரொட்டிதான் சாப்டுவோம்!

    ReplyDelete
  2. இதுக்குதான் அப்பப்ப சேட்டை வரணும் கிறது.
    யார் என்ன சொன்னாலும் இவனுங்களுக்கு ஒறைகாது ராசா.

    --

    ReplyDelete
  3. நீங்க படிச்ச நியூசை நானும் படிச்சேன். அதை வைச்சு ஒரு அருமையான இடுகையயை நகைச்சுவையோடு கொடுக்க உங்களால தான் முடியும்னுட்டு நான் ஜூட் விட்டுட்டேன்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  4. //தொண்டருக்குத் தலை சுற்றியது.//

    அங்க தொண்டர்கள் இருக்காங்கலா?

    ReplyDelete
  5. இளங்கோவன்(ம்) உங்கள தேடிட்டு இருக்காராம்

    ReplyDelete
  6. எந்த செய்தி கிடைத்தாலும் அதை நகைச்சுவையாக்கும் சேட்டை, தொடருங்கள் உங்கள் வேட்டையை.

    ReplyDelete
  7. வரிக்கு வரி இப்படியா சேட்டை பண்றது. :)). முடியல சாமி

    ReplyDelete
  8. தற்போதெல்லாம் செட்டியின் வீரியம் மிகவும் குறைவாக உள்ளதே... வேலை அதிகமோ...

    ReplyDelete
  9. வந்துட்டீங்களா???
    அப்பப்ப காணாமப் போய்ட்றீங்களே..

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!