Sunday, September 19, 2010

சட்னிப்பிரவேசம்

Justify Full
"என்னங்க, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என்ன?"

"இன்னிக்கு டிபன் இட்லி பண்ணியிருக்கேனுங்க!"

"இதுக்கெல்லாம் நான் கோவிச்சுக்குவேனா? நியாயமாப் பார்த்தா இட்லி தான் கோவிச்சுக்கணும்!"

"அதில்லீங்க! தொட்டுக்க தக்காளிச்சட்டினி தானிருக்கு! பரவாயில்லையா?"

"நல்லதாப் போச்சு! ஒரு தட்டுலே நாலு இட்டிலியைப் போட்டு, அது மேலே தக்காளிச்சட்டினியை ஊத்தி வையி! இன்னிக்குப் புரட்டாசி சனிக்கிழமை, எண்ணை தேய்ச்சுக் குளிச்சிட்டு அரை மணியிலே வந்திடறேன். அதுக்குள்ளே இட்லியும் ஊறிப்போய் சுமாரா கடிச்சாவது சாப்பிடுறா மாதிரியிருக்கும். சரியா?"

கோலம்மாளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதால், கோவிந்தசாமி சொன்னதுபோலவே இட்டிலியை தக்காளிச்சட்டினியில் ஊறவைத்து விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று இன்னும் உடையாமலிருந்த ஒரே ஒரு சுத்தியலையும் டைனிங் டேபிளின் மீது வைத்தாள். ஆத்திர அவசரத்துக்கு ஓடவா முடியும்?

கோவிந்தசாமி குளித்து விட்டு, பக்திசிரத்தையாக சுவற்றில் மாட்டியிருந்த நான்குநேரி வானமாமலைப் பெருமாளை வேண்டிக்கொண்டு, சற்றே ஆன்மபலம் அதிகரித்தவராக இட்லியைச் சாப்பிட்டு முடித்தார். அப்பாடா! சென்ற வாரம் ஆந்திரா ஸ்டைலில் தேங்காய்ச்சட்டினி அரைக்கிறேன் என்று மிக்ஸியில் புளிய மரத்தின் ஒரு பாதிமரத்தையே போட்டு அரைத்திருந்தாள் கோலம்மாள். அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவரது வயிற்றுக்குள்ளே காக்காய், குருவியெல்லாம் கூடுகட்டிக் குஞ்சு பொரித்தது போலவும், இரவு நேரத்தில் அவரது குடலுக்குள்ளே வௌவால்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலவும் பயங்கரமான கனவுகள் வரத் தொடங்கியிருந்தன. ஆகையினால், அனாவசியமான விஷப்பரீட்சை எதுவும் செய்யாமல், எந்த வில்லங்கமும் இல்லாத தக்காளிச்சட்டினியை அரைத்த மனைவி மீது அவருக்கு அளவற்ற பரிவே ஏற்பட்டு விட்டது. காலை எட்டுமணிக்குச் சாப்பிட்ட இட்லி மதிய உணவு இடைவேளை வரையிலும் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போலக் கரையாமலிருந்தபோதும், தேங்காய் சட்னி குறித்து அவர் மறந்தே போயிருந்தார். ஆனால், மதிய உணவின் போது, சக ஊழியர் மதுசூதனன் வெங்காய தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றைக் கவனித்தார்.

"என்ன மதுசூதனா, வழக்கமா கான்க்ரீட் மாதிரி கெட்டியா தேங்காய்ச் சட்னி தானே கொண்டுவருவே? இதென்ன, மறந்து போய் மருதாணியை வைச்சு அனுப்பிட்டாங்களா?"

"யோவ் கோவிந்தசாமி! உன் கண்ணுலே இந்தப் புதீனா சட்னியைத் தான் வைக்கணும். இதப் பார்த்தா மருதாணி மாதிரியா இருக்கு?"

"ஓ புதீனா சட்னியா?"

"அவரு புதீனா சட்னி! நான் பொட்டுக்கடலைச்சட்னி!," என்று சொல்லியபடி பி.ஆர்.ஓ. கிருஷ்ணவேணி வந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு? தேங்காய் விலை அவ்வளவு ஏறிடுச்சா?" கோவிந்தசாமி குழம்பியபடி கேட்டார். "எல்லாரும் அவங்கவங்க டிரெஸுக்கு மேட்சிங்கா கலர் கலரா சட்னி கொண்டுவந்திருக்கீங்க?"

"ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை மேட்டர் முத்திப்போயி கேரளாவிலேருந்து தேங்காய் வரதே நின்னிருக்குமோ?" என்று மதுசூதனன் புதிராகக் கேட்டார்.

"சாப்பிடுற நேரத்துலே ஏன் சார் தேங்காய்ச்சட்னின்னு அபசகுனமாப் பேசறீங்க?" என்று எரிந்து விழுந்த கிருஷ்ணவேணி தனது மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். "வீட்டுக்குப்போனதும் மாவிளக்கு ஏத்தணும்! நாளையிலேருந்து வெவஸ்தை கெட்டவங்களோட சாப்பிடக்கூடாது!" என்று கூறியபடி எழுந்து போனாள்.

"யோவ் மதுசூதனன், தேங்காய்ச்சட்னின்னு சொன்னதுக்குப் போயி ஏன் இவ்வளவு கோவிச்சுக்கிறாங்க?"

"ஒருவேளை இப்போ ஆம்பிளைங்களுக்கெல்லாம் நேரம் சரியில்லே, பொம்பிளைங்க தேங்காய்ச் சட்னி பண்ணக் கூடாதுன்னு புதுசா ஏதாவது ஐதீகத்தைக் கிளப்பி விட்டுட்டாங்களோ?"

"அட போய்யா, அவங்க இட்லி தோசையைத் தின்னுட்டே இன்னும் உசிரோட இருக்கோம். சட்னியாலயா பிரச்சினை வரப்போவுது?"

"அப்படி என்னதான் பிரச்சினை இந்தச் சட்டினியிலே? வீட்டுக்குப் போகும்போது ஆளுக்கு ஒரு தேங்காய் மறக்காம வாங்கிட்டுப்போயி, சட்னி அரைச்சே ஆகணுமுன்னு சொல்லிர வேண்டியது தான்!"

"மதுசூதனன், உங்களை மாதிரி ஆணாதிக்கத்திமிரோட என்னாலே பேச முடியாது. வேணுமுன்னா நானே சட்னி அரைக்கிறேன். என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமே?"

அதே போல அன்று அலுவலகம் முடிந்ததும் கோவிந்தசாமியும், மதுசூதனனும் கோவிலருகேயிருந்த தேங்காய்க் கடைக்குப் போனார்கள்.

"தேங்காய் என்ன விலைம்மா?"

"தேங்காய் சாமிக்கா? சட்னி அரைக்கவா?"

"ஏம்மா, எதுக்காயிருந்தா என்னம்மா? காசு கொடுக்கிறோம், தேங்காயைக் கொடு! நாங்க சாமிக்குப் போடுறோம் இல்லாட்டி சட்னி அரைக்கிறோம். உனக்கென்ன?"

"போங்கய்யா..சட்னியரைக்கிறதுக்கெல்லாம் தேங்காய் தர முடியாது."

கோவிந்தசாமியும், மதுசூதனனும் அதிர்ச்சியில் ஃபிரிட்ஜில் வைத்த தேங்காய்ச் சட்னிபோல உறைந்து போனார்கள்.

"யோவ், இந்த சட்னி மேட்டர் ஏதோ சீரியஸ் மேட்டர் போலிருக்குதே! என்னான்னு கண்டுபிடிச்சே ஆகணும்! போற வழியிலே உடுப்பி கிருஷ்ணபவனுக்குப் போயி விசாரிப்போம்," என்று கோவிந்தசாமி சொல்லவும், மதுசூதனனும் ஓசியில் கீரைவடை சாப்பிடுகிற நப்பாசையோடு பின்தொடர்ந்தார்.

ஹோட்டலை அடைந்து, காலியாயிருந்த டேபிளைக் கண்டுபிடித்து இருவரும் அமர்ந்து கொண்டனர். இவர்களை அஞ்சியஞ்சிப் பார்த்தபடியே அங்கிருந்த சர்வர் பம்மியபடி இருவரையும் அணுகினான்.

"சூடா என்ன இருக்கு?"

"இட்லி,வடை,போண்டா,பஜ்ஜி, ரோஸ்ட்..."

"சட்னி இருக்கா?"

"அது சூடா இல்லை சார்!"

"என்ன நக்கலா? சட்னி இருக்கா இல்லியா?"

"இருக்கு சார், கொத்துமல்லிச் சட்னி, புதீனா சட்னி, கொத்துக்கடலைச் சட்னி..."

"தேங்காய்ச் சட்னி இருக்கா?"

"இருங்க சார், ஓனரை அனுப்பறேன்!" என்று கூறியபடி அந்த சர்வர் அங்கிருந்து நகர்ந்தான்.

"என்னய்யா, தேங்காய்ச் சட்னி இருக்கான்னு கேட்டா, ஓனரைக் கூப்பிட்டு வரப் போயிருக்கான்! டிபன் சாப்பிட வந்தவங்களை டின்னு கட்டி அனுப்பிருவாங்க போலிருக்கே!"

"வணக்கம் சார்!" பல்லெல்லாம் வாயாக ஓனர் வந்தார். "உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?"

"எனக்கொரு பிரச்சினையும் இல்லை, தேங்காய்ச் சட்னி இருக்கா இல்லையா?"

"இருக்கு சார்! அதுக்கு முன்னாலே இந்த பாரத்துலே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க சார்!"

"யோவ், நாங்க பஜ்ஜி சாப்பிட வந்தோமா, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க வந்தோமா?"

"பார்த்தீங்களா பார்த்தீங்களா, சட்னீன்னு சொன்னதும் கோபப்படுறீங்க பாருங்க! அதனாலே தான் யோசிக்க வேண்டியிருக்கு!" என்று மிகவும் பயந்து நயந்து சொன்னார் ஹோட்டல் ஒனர்.

"எதுக்குய்யா பயம்? இதுக்கு முன்னாடி நீ சட்னி போட்டதில்லையா, நான் சாப்பிட்டதில்லையா?" கோவிந்தராஜின் குரல் திடீரென்று கோபத்தில் உரக்கவே, கூட்டம் கூடியது.

"அதானே?" என்று கோவிந்தராஜுக்கு ஒத்து ஊதினார் மதுசூதனன். "இப்போ மரியாதையா தேங்காய்ச்சட்னி போடுறியா இல்லே மினிஸ்டருக்கு போன் பண்ணட்டுமா? ஐ வில் டேக் திஸ் மேட்டர் வித் தி கம்பீட்டன்ட் அதாரிட்டீஸ்!"

"சார், சத்தம் போடாதீங்க சார்! பப்ளிக் எல்லாரும் பார்க்கிறாங்க சார்! இதோ பாருங்க சார், பச்சைச் சட்னி, சிகப்புச் சட்டினி, மஞ்சள் சட்னி..இன்னிக்குப் புதுசா மிஞ்சிப்போன பீட்ரூட் பொறியலை அரைச்சு மரூன் கலருலே கூட சட்னி வச்சிருக்கோம் சார்!" என்று கையதுகொண்டு மெய்யது பொத்திக் கதறத்தொடங்கினார் ஹோட்டல் ஓனர்.

"கோவிந்தசாமி, இவரு என்ன பிளாட்பாரத்துலே பிளாஸ்டிக் சாமான் விக்குறவரு மாதிரி சொல்லுறாரு?" என்று உசுப்பேத்தினார் மதுசூதனன்.

"என்னய்யா ஆச்சு இன்னிக்கு? வீட்டுலேயும் தேங்காய் சட்னி இல்லை, வெளியிலேயும் தேங்காய் சட்னி இல்லேன்னா எப்புடி? இதுக்காக சபரிமலைக்குப் போறா மாதிரி கேரளாவுக்கா போக முடியும்? என்னய்யா பிரச்சினை? சொல்லித் தொலைங்கய்யா!"

"யோவ்!" சாதுமிரண்டது போல திடீரென்று குரலை உயர்த்தியபடி, இடுப்பிலிருந்து பிச்சுவாக்கத்தியை வெளியே எடுத்தார் ஓனர். "நானும் போனாப் போகுதுன்னு சும்மாயிருந்தா, மேலே மேலே பேசிட்டே போறியா? இப்போ மரியாதையா எந்திரிச்சு வெளியே போறியா இல்லாட்டி ஒரே சொருவா சொருவிடுவேன்!"

"ஐயோ! எனக்கு தேங்காய் சட்னி வேண்டாம்! என்னைக் குத்திடாதீங்க!" என்று அலறினார் கோவிந்தசாமி.

"என்னங்க...என்னாச்சு? ஏன் தூக்கத்துலே கத்தறீங்க?" என்று கோலம்மாள் கணவனை உலுக்கவும், கோவிந்தசாமியின் கனவு கலைந்தது.

"இது...கனவா...?"

"என்னாச்சுங்க? ஏன் இப்படிக் கத்தினீங்க? யாரு குத்த வந்தாங்க?"

"கோலம்மா!" கோவிந்தசாமி கூச்சத்தோடு பேசினார். "இன்னிக்கு நான் ஒரு நியூஸ் படிச்சேன். தாராபுரத்துலே ஒரு கல்யாணத்துலே வேண்டாம் வேண்டாமுன்னு சொல்லியும் கேட்காம இட்லிக்கு தேங்காய் சட்னி போட்டவனோட மண்டையை உடைச்சிட்டாங்களாம். அதைப் பத்தியே யோசிச்சிட்டே தூங்கினேனா, கனவுலேயும் தேங்காய்ச் சட்னி வந்துருச்சு!"

"இவ்வளவு தானா? நான் வேண்ணா உங்க பயம் தெளியுற வரைக்கும் இனிமே சட்னியே அரைக்க மாட்டேன்," என்று ஆறுதலாகக் கூறினாள் கோலம்மாள்.

"நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினார் கோவிந்தசாமி. "நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"

31 comments:

  1. நல்லா இருக்குங்க சேட்டை

    ReplyDelete
  2. // "நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"//

    அப்போ அவங்க அரைக்கிறது லேகியம் கணக்கில சேருதா என்ன சேட்டை? நல்லா காமெடி பண்றீங்கப்பா? பேஷ்! பேஷ்!

    ReplyDelete
  3. /"நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"//

    இது உங்கள் ஆணாதிக்கக் மேட்டிமை மனப் பாங்கை காட்டுகிறது.. இந்த பதிவை நான் கண்டிக்கிறேன்,

    ReplyDelete
  4. ஏதோ இட்லி சட்னினு பாத்து என் சோக கதை மாதிரி ஏதோ இருக்கும் போல ஆறுதல் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... இது ஏதோ வெவகாரம் பெருசா இருக்கும் போலியே... நான் இல்ல... அது சரி அந்த தேங்க சட்னி ரெசிபி கொஞ்சம் கெடைக்குமா... ஹி ஹி ஹி

    ReplyDelete
  5. //LK said...
    /"நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"//
    இது உங்கள் ஆணாதிக்கக் மேட்டிமை மனப் பாங்கை காட்டுகிறது.. இந்த பதிவை நான் கண்டிக்கிறேன்,//

    சூரியன் மேக்கால உதிக்கராப்ல கனவு கண்டேன்... இதான் மேட்டரா? ஹா ஹா ஹா

    ReplyDelete
  6. மிக ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  7. உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கிறேன் . பெற்றுக் கொள்ளவும்

    http://lksthoughts.blogspot.com/2010/09/blog-post_19.html

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு சகா..

    ReplyDelete
  9. சட்னிக்கு வந்த சோதனை!

    ReplyDelete
  10. //"நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினார் கோவிந்தசாமி. "நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"//

    எய்யா...இந்தளவு குலை நடுங்கி நைட் தூக்கத்தை பறிகொடுத்தாலும் இன்னும் லொள்ளு போகலியே கோவிந்தசாமிக்கு...ஹ்ம்ம்...சட்னிக்கு பதிலா நம்ம தங்ஸ் இட்டிலியை அனுப்பிற வேண்டியதுதேன்...என்ன நான் சொல்றது?

    ReplyDelete
  11. நல்லாயிருக்குங்க சேட்டை. நான் ஏதோ இட்லியை பார்த்ததும் ரெசிபி சொல்லபோறீங்கன்னு நினைச்சா இப்படி எழுதிட்டீங்களே.

    ReplyDelete
  12. எப்டி இப்டி எல்லாம்.. ம்ம்.. நல்லாருக்கு..

    ReplyDelete
  13. ஒரு பிட்டு நியூஸ் வெச்சி முழுநீள நகைச்சுவைப்படம்:))

    ReplyDelete
  14. // "இப்போ மரியாதையா தேங்காய்ச்சட்னி போடுறியா இல்லே மினிஸ்டருக்கு போன் பண்ணட்டுமா?//
    ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கீங்க போல :) நடத்துங்க

    ReplyDelete
  15. நல்ல கனவு...நல்ல சட்னி!

    ReplyDelete
  16. ஒரு நியூஸுக்காக ஒரு கலக்கல் காமெடி கதை!

    //நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"
    //

    :))) இது செம கிளாஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  17. என்ன சேட்ட "சட்டுன்னு நீ" (அட சேர்ந்து எழுதிப்பாருங்க, சட்டுன்னு + நீ = சட்னி ) இப்படி ஒரு பதிவு போட்ட எங்கவீட்டு காரம்மா படிச்சிட்டு இப்போ நாலு பூரிக்கட்டை எச்ட்ரா வாங்கி வச்சிருக்கா

    ReplyDelete
  18. என்னது? சட்னி கேட்டவங்க மண்டைய உடைக்கலாமா???
    ம்ம்ம் மனசுல வச்சுக்குறேன்..

    ReplyDelete
  19. கலக்கிட்டிங்க சேட்டை. (சட்னியை இல்லை )

    ReplyDelete
  20. ஹா...ஹா... ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  21. சட்னி சட்னினு படிச்சு பயங்கரமா பசிக்க ஆரம்பிச்சிருச்சு. இங்க டோக்ளாவும் இனிப்பான புதினாச் சட்னியும் தான் கிடைக்கும் :(

    இப்ப தேங்காய் சட்னிக்கு நான் என்ன பண்ண போறேனோ தெரியலையே..

    ReplyDelete
  22. கிட்னி வலிக்கிற அளவுக்கு சிரிச்சுட்டேன் சட்னி மேட்டர் பார்த்து..சூப்பர் சேட்டை!!

    ReplyDelete
  23. எந்த சட்னியும் இல்லாமவெறும் இட்லி சுத்தியல் கொண்டு சாப்பிடும் தண்டனை தரப்படுகிறது.

    ReplyDelete
  24. entha theengai satinioda சேட்டை..

    naangalum varuvomula..

    sari neenga ennavo seriousa nalla story cholla poriyalakkumnu ninchen..eppadi comedy panitengaley..

    nice one.

    ReplyDelete
  25. mee too..இந்த பதிவை நான் கண்டிக்கிறேன்,...edle podi ellama nan sapidamaten.

    ReplyDelete
  26. சேட்டை!
    சட்னியிலும் சேட்டையா..??
    :)

    ReplyDelete
  27. அண்ணே,சாப்பாட்டுக்கடப்பதிவிலும் சேட்டையா.?

    >>>
    "யோவ், நாங்க பஜ்ஜி சாப்பிட வந்தோமா, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க வந்தோமா?"
    >>> செம கலக்கல் வரிகள்

    ReplyDelete
  28. // "ஒருவேளை இப்போ ஆம்பிளைங்களுக்கெல்லாம் நேரம் சரியில்லே, பொம்பிளைங்க தேங்காய்ச் சட்னி பண்ணக் கூடாதுன்னு புதுசா ஏதாவது ஐதீகத்தைக் கிளப்பி விட்டுட்டாங்களோ?" //

    Ha ha... haa....

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!