Saturday, September 11, 2010

புன்னகை தேசமா? புரளி தேசமா?

எவ்விதமான சர்ச்சைகளிலும் ஈடுபடாமல் நானுண்டு, என் ஸ்ரேயா உண்டு, என் மொக்கையுண்டு என்றிருந்த என்னை இப்படியொரு இடுகை எழுத வைத்த இஷ்டசித்தி விநாயகருக்கு ஒரு தேங்காய் கேன்சல்! இந்த ஒன்பது மாதங்களாக வாயும் வயிறுமாய், மன்னிக்கவும், வலையும் பதிவுமாய் இருந்த நான் இப்போது இப்படியொரு இடுகை எழுதியிருப்பதற்காக, இதுவரை என்னை உற்சாகப்படுத்தி வருகிற சகபதிவர்கள் அனைவரிடமும் முதற்கண் மன்னிப்புக் கோருகிறேன்.

நான் வலைப்பதிவு எழுதுவது எனது வலிகளைக் குறைத்துக்கொள்ள; இயன்றவரை வாசிக்க வருகிறவர்களைச் சிரிக்க வைக்க! ஜாதிச்சண்டைகளும், மதமாச்சரியங்களும் அவ்வப்போது தலைதூக்கும் வலையுலகில், நடுநிலை வகித்து நல்ல கருத்துக்களைத் திறம்பட எழுதும் பல பதிவர்களின் நிழலில் இறைவன் அருளால் நிற்கிறேன். எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு, நகைச்சுவையாக எதையேனும் எழுதி ஒரு பத்துப் பேரை சிரிக்க வைக்கலாமே என்பதே எனது குறிக்கோள். இந்த சமூகத்தைத் திருத்துவதோ அன்றி தமிழ் வளர்ப்பதோ எனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. அதற்கு என்னிலும் படித்த, வாய்ப்புகள் மிக்க முன்னோடிகள் எண்ணற்றோர் உள்ளனர்.

எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும் அநாகரீகமாக, கண்ணியக்குறைவாக என்னால் எழுத முடியாது. குழுமங்களில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும், உடனே மன்னிப்புக் கோருவது எனது வழக்கம். இதற்குக் காரணம், என்னைச் சுற்றியிருக்கிற சகபதிவர்கள் எனக்குக் கற்றுத்தந்த நாகரீகம், கண்ணியம்!

புன்னகை தேசம் சாந்தி அவர்களது பிரச்சினை குறித்து வினவு வெளியிட்ட இடுகையில் நான் ஒரு கேள்வி எழுப்பினேன்! ஆணுக்கொரு நீதி; பெண்ணுக்கொரு நீதியா? - என்பதே அக்கேள்வியின் சாரம்! அது வினவுக்கு நான் எழுப்பிய கேள்வி! என்னைப் போலவே பலர் இதே கருத்தில் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்; சில பெண்பதிவர்கள் உட்பட! பிரபலத்தை விரும்பியவன் என்றால், நானும் வினவுக்கு ’ஆமா சாமி’ போட்டுக்கொண்டு ’ரொம்ப நல்லவன்,’ என்ற பெயரெடுத்திருக்கலாம். எனக்கும் முற்போக்கு சிந்தனையாளன் என்ற பட்டம் கிடைத்திருக்கும்! வடை போச்சே!

நேற்று ஒரு இடுகை எழுதி, அதை உடனே நீக்கினேன்; காரணம், ’நீயும் சேர்ந்து குட்டையைக் குழப்பாதே!’ என்று பல நண்பர்கள் எனக்கு வலியுறுத்திக் கூறியதன் பேரில்! மேலும் திருமதி.சாந்திக்கும் எனக்கும் பரஸ்பர நலவிரும்பிகள் சிலர் உள்ளனர். அவர்கள் மனம் நோகுமே என்ற எண்ணத்தில்! தவறோ?

நான் வலையுலகின் எந்தக் குழுவிலும் இல்லை! என்னை அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள். எனக்குப் பிரபலமடைய வேண்டுமென்ற ஆசையும் இல்லை! வலையில் எழுதுவது எனது பொழுதுபோக்கு! நிஜ வாழ்க்கையில் நான் யாரென்று யாருக்கும் தெரிய வேண்டாமென்றுதான், எனது பெயர், முகவரி கூட போடவில்லை. இப்படி ஒரு அனானியாக இருப்பதைப் பயன்படுத்தி கடுமையான விமர்சனங்களையோ, கண்ணியமற்ற வார்த்தைகளையோ என்றும் உபயோகித்ததில்லை. எனது இடுகைகளில் நான் உபயோகிக்கிற நடிகைகளின் படங்களைக் கூட கவனமாகத் தேர்ந்தெடுப்பது எனது வழக்கம். (ஒரு ஸ்ரேயா ரசிகனுக்கு இதனால் எவ்வளவு சிரமம் என்று சற்று யோசித்துப் பாருங்கள் ஐயா!)

நித்தி விஷயத்தில் வலையுலகில் பலர் ரஞ்சிதாவைக் கொச்சையாகத் திட்டியபோது, ’எனக்குப் பிடித்த பத்து பெண்கள்’ இடுகையில் ரஞ்சிதாவைப் பற்றி எழுதியிருக்கிறேன். பெண்ணியம், ஆணாதிக்கம் பற்றிப் பாடம் நடத்துகிறவர்கள் தயவு செய்து வேறு இடத்துக்குப் போங்கள்! இந்த இணையம் எனக்கு ஒரு அம்மாவையே கொடுத்திருக்கிறது. பல சகோதரிகளைக் கொடுத்திருக்கிறது. பல சகோதரர்களைக் கொடுத்திருக்கிறது. எண்ணற்ற நண்பர்களையும் நலவிரும்பிகளையும் கொடுத்திருக்கிறது. ஆண், பெண் என்று ஒருபோதும் நான் பகுத்துப் பார்த்தது கிடையாது.

வெகுஜனப் பத்திரிகைகளில் எழுத வலைப்பதிவு ஒரு சாதனம் என்றால், நாகேஷின் படத்தைப் போட்டுக்கொண்டு நடத்த வேண்டிய அவசியமும் எனக்கில்லை. பெயர், முகவரி, வயது எதுவுமே தெரியாத என்னை வலையுலகத்தில் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், நான் சர்ச்சைகளின்றி, வருகிறவர்கள் வாசித்து மகிழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுதிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டதனால் தான். சரி, புரளி தேசத்துக்கு, மன்னிக்கவும், புன்னகை தேசத்துக்கு வருவோம்!

இன்னும் வெளிப்படையாகக் கூறுவதென்றால், முழுப்பிரச்சினையும் எனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும். காரணம், புன்னகை தேசம் சாந்தி அவர்கள் எழுப்பிய பிரச்சினை சில வலைப்பதிவுகளில் மட்டும் வந்திருந்தால் பரவாயில்லை! இது அதையும் தாண்டி, குழுமங்கள், ஃபோரம்கள், தனிமடல்கள், மின்னரட்டைகள் என விரிந்து கொண்டே போகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து விளக்கங்கள்; மறுப்புகள்; ஆதாரமாக சில மடல்கள், உரையாடல்கள் என்று இது நீண்டுகொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, இவையத்தனையும் வாசித்தால் தான் முடியும். இது எத்தனை பேரால் முடிகிற காரியம்?

இது ஒரு கோர்ட் செய்ய வேண்டிய காரியம்! இருக்கிற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு திருமதி.சாந்திக்காக ஒரு மனிதன் எத்தனை பதிவுகளைப் படிப்பான்?

ஒரு புனைவில் ஒரு பெண்ணைக் குறிவைத்து எழுதி விட்டார்கள் - என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க வினவுக்கு அதிகாரம் இருக்கலாம். எனக்கில்லை! பெண் என்கிற காரணத்தாலேயே ஒருவர் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டும் என்றோ, ஆண் என்ற காரணத்தாலேயே அவர்களை பழிக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லையே!

’வலைச்சரம்’ ஆசிரியராக இருந்தபோது ஒரே நாளில் 60+ பெண் பதிவர்களை அறிமுகப்படுத்தினேன். அதுகுறித்து, அவர்களுக்குத் தனிமடலும் அனுப்பியிருக்கிறேன். ஆனால், அதன்பிறகு, அவர்களில் ஒருவருக்கேனும் தனிமடலோ மின்னரட்டை அழைப்போ அனுப்பியதாக எவரும் கூற மாட்டார்கள். என்னை வழிநடத்துகிறவர்களில் பெண்கள் மிகமுக்கியமானவர்கள்.

திருமதி.சாந்தியுடன் எனக்குள்ள தொடர்பு மிக மிகக் குறைவு. குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. அவராகத் தான் சாட் உரையாடலுக்கு அழைத்தார். அதிகபட்சம் மொத்தமே ஒருமணி நேரம் பேசியிருக்கலாம். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில், அவர் கொடுத்த சுட்டிகளின் அடிப்படையில் நான் ஒரு முடிவுக்கு வர முடியாது. எழுத்து, வார்த்தை என்ற அளவிலே இருக்கிற பிரச்சினை என்பதால் எது சரி, எது தவறு என்பதை அனுமானிக்க பொறுமையும், நிதானமும் தேவை! நான் பெரிதும் மதிக்கிற மாதவராஜைப் போல சில வார்த்தைகளை என் போன்ற கற்றுக்குட்டிகள் உபயோகிக்க முடியாது. வினவுக்கு இருப்பதைப் போல எனக்குக் கூட்டம் கிடையாது. நான் தனிமனிதன்!

ஒவ்வொரு அடியையும் கவனித்து எடுக்கிற நிலையில் இருக்கிற எவனும் எதைச் செய்வானோ அதைத் தான் நான் செய்திருக்கிறேன். இதில் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதாக இருந்தால், அது சட்டத்தின் உதவி கொண்டு மாத்திரமேயன்றி, கட்டப்பஞ்சாயத்தின் மூலம் அல்ல என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். ஏற்கனவே சொன்னதுபோல, எனக்கும் திருமதி.சாந்திக்கும் பரஸ்பர நலவிரும்பிகள் இருப்பதால், இதை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளலாமே என்று சொன்னேன்; உண்மை! அதே சமயம், சம்பந்தப்பட்டவர்கள் தவறு இழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறேன். இதுவும் உண்மை!

ஆனால், எது தவறு, எது சரியென்று நிர்ணயிக்க எல்லா விபரங்களையும் சரிபார்த்துத் தான் செய்ய முடியும்.வார்த்தைகளைக் கொட்டினால் அள்ள முடியாது. குழுமங்களில் புரிந்து கொள்ளாமல் சிலரிடம் வார்த்தைகளை விரயம் செய்து பிறகு மனம் வருந்திய அனுபவம் காரணமாக, இப்போது நான் சுதாரித்துக் கொண்டிருக்கிறேன். இது தவறா?

தமிழமுதம் குழுமத்திலிருந்து விலகிவிட்டேன்! திருமதி.சாந்தியை எனது சாட் லிஸ்டில் தடை செய்து விட்டேன். காரணம், தனிமடல், மின்னரட்டைகள் மற்றும் குழும உரையாடல்களை ஆதாரமாகப் போடுகிற அநாகரீகமான செயலை அவர் படுமும்முரமாகச் செய்து கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி கூட பெறாமல், தனிமடல்களையும் மின்னரட்டைகளையும் பொதுவிடத்தில் பகிர்ந்து கொள்பவர்கள், அடுத்தவரது டயரியைப் படிக்கிறவர்களைக் காட்டிலும் அசிங்கமானவர்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

இருபக்கமும் கூரான இந்த ஆயுதத்தை அசிரத்தையாகக் கையாண்டிருக்கிறீர்கள்; அதன் ஆபத்தை உணராமலே! இறைவன் துணையிருப்பானாக - இந்த ஆயுதம் உங்கள் பக்கம் திரும்பாமல் இருப்பதற்காக!

நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற பிரச்சினையின் நியாயத்தை, நீங்கள் கடைபிடித்த வழிமுறைகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் தரத்தால் பிசுபிசுக்க வைத்து விட்டீர்கள். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழியை நிரூபித்து விட்டீர்கள். இன்று உங்கள் பக்கத்தில் வினவு இருக்கிறது; நீங்கள் என்ன சொன்னாலும், மறுபக்கத்தை ஆராயாமல் துணைபோக ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது. நடத்துங்கள் ராஜ்ஜியத்தை! தொடரட்டும் உங்களது பழிவாங்கும் படலம்!

என்னைப் பற்றி நீங்கள் குழுமத்தில் எழுதியிருப்பதற்கு, நான் தமிழமுதத்தில் இல்லாததாலும், நமது பிரச்சினையை மற்ற குழுமங்களில் போட விரும்பாததாலும் இங்கு போட்டிருக்கிறேன்! உங்களது புரளிப் பிரச்சாரம் மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத் தரட்டும்!

அப்புறம், இது குறித்து நீங்கள் எழுதுகிற பதிலுக்கோ, அல்லது உங்களது அல்லக்கைகள் எழுதுகிற பதில்களுக்கோ நான் பதில் அளிக்க மாட்டேன். அதனால், மைனஸ் ஓட்டுப் போடுகிறவர்கள் சண்டை போடாமல் வரிசையில் நின்று, நிதானமாகப் போட்டு விட்டு செல்லலாம். இது என் வலைப்பதிவு; வினவு அல்ல!

(சே! இன்றைக்கு விநாயகரைப் பற்றியோ, ஸ்ரேயாவைப் பற்றியோ எழுத முடியாம போச்சே! விநாயகரைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ஆனா, அடுத்த வருஸம் ஸ்ரேயாவுக்குக் கல்யாணம் ஆகியிருக்காதுன்னு என்ன நிச்சயம்? போச்சு, ஒரு வருசம் போச்சு!)

30 comments:

  1. அண்ணே,உங்க பக்கம் இருக்கிற நியாயம் புரிஞ்சிடுச்சு,ஆனா முழுசா என்ன நடந்துச்சுனு சரியாத்தெரியல.எனக்குத்தெரிஞ்சு நீங்க போட்டிருக்கிற முதல் சீரியஸ் பதிவு இது.

    ReplyDelete
  2. thala freeya vidunga.. avanga enna panromnu theriyama panranga

    ReplyDelete
  3. அண்ணே மொதத் தடவையா உங்க ப்ளாக்க வருத்ததோட படிக்கிறேன். நாங்கள்லாம் உங்ககூட இருக்கோம்ணே....!

    ReplyDelete
  4. உங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பா! என்றும் போல் உங்களுடன் நான்!

    பிரபாகர்...

    ReplyDelete
  5. சேட்டை! We know you man. எங்கள் கவலைகளை மறந்து சிரிக்கவைப்பது மட்டுமே உங்கள் சேவை:). We are with you:)). Cheers.

    ReplyDelete
  6. //அடுத்த வருஸம் ஸ்ரேயாவுக்குக் கல்யாணம் ஆகியிருக்காதுன்னு என்ன நிச்சயம்?//

    என்ன ஒரு கவலை??

    ReplyDelete
  7. என்ன பிரச்சினை என்று தெரியாது.அண்ணா.....ஆனால் உங்கள் எழுத்து மற்றும் உங்களை பிடிக்கும்...முதல் தடவை ரெம்ப சீரியஸ் எழுதி இருக்கீங்க..எல்லாம் சரியாகும்...கவலை வேண்டாம்...

    ReplyDelete
  8. //அடுத்த வருஸம் ஸ்ரேயாவுக்குக் கல்யாணம் ஆகியிருக்காதுன்னு என்ன நிச்சயம்? போச்சு, ஒரு வருசம் போச்சு!//

    :))

    ReplyDelete
  9. ||அவராகத் தான் சாட் உரையாடலுக்கு அழைத்தார்.||

    சரி...

    (இல்ல நானும் கதை கேக்கறேன்...)

    ReplyDelete
  10. ||வினவுக்கு இருப்பதைப் போல எனக்குக் கூட்டம் கிடையாது. நான் தனிமனிதன்!||

    சிங்கம் சிங்கிளாத்தான் வரும்ன்னு சூப்பர்ஸ்டாரே சொல்லி இருக்காரே...

    ReplyDelete
  11. ||உங்களது புரளிப் பிரச்சாரம் மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத் தரட்டும்!||

    ஹூம்...

    _______

    ம்ம்... இதயும் ஆபாசப் போஸ்ட்டுன்னு சொல்லுவாய்ங்களோ...

    ReplyDelete
  12. இந்தப் பதிவை... நான் பஸ்ஸில் பகிர்ந்து கொள்கிறேன்... இது முற்று முழுதிலுமாக என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரிலேயே என்பதை இங்கு பதியக் கடமைப்பட்டுள்ளேன்..

    (என்னது உங்க கிட்ட பர்மிஷன் கேக்கலயா... இது பொதுவெளிப் போஸ்ட்... பொதுவெளியில் பகிர்ந்துக்க என்ன...:o) catch da point..)

    ReplyDelete
  13. ம்ம்மடிக்கடி இப்படி பிரச்சனை வருது
    உங்க பாணியிலெயெ பதிவு பொடுங்க சேட்டை

    ReplyDelete
  14. பாஸ் ப்ரீயா விடுங்க.
    ஸ்ரேயா தமன்னா ன்னு நாம பொழுதை ஓட்டுவோம்

    ReplyDelete
  15. "தனிமடல், மின்னரட்டைகள் மற்றும் குழும உரையாடல்களை ஆதாரமாகப் போடுகிற அநாகரீகமான செயலை அவர் படுமும்முரமாகச் செய்து கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி கூட பெறாமல், தனிமடல்களையும் மின்னரட்டைகளையும் பொதுவிடத்தில் பகிர்ந்து கொள்பவர்கள், அடுத்தவரது டயரியைப் படிக்கிறவர்களைக் காட்டிலும் அசிங்கமானவர்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
    "

    Necessity knows no law.

    தவிர்க்கமுடியாத்தேவையெனில் வெளிக்காட்ட்லாம். அப்பெண், தான் பாலியல் வக்கிரத்திற்கு ஆளானேன் எனச்சொல்வதற்கு அவர் எதையும் வெளிக்காட்டலாம்.

    ஆணோ பெண்ணோ, சாட் பண்ணும் நபர், எதுவும் நடக்கலாம் என்று நினைத்துத்தான் சாட் பண்ணவேண்டும்.

    Think before you act.

    ReplyDelete
  16. எனக்கு இந்த அக்கப்போரே பிடிக்காது..ஆமாம் என்ன சாப்பிடீங்க?

    ReplyDelete
  17. நிங்க வேறங்க, புதுசா வந்த எனக்கு இவங்க பண்ற அரசியல் இன்னும் புரியல. நானும் படித்த வரைக்கும் இவங்களோட பழைய பிரச்சினையை திர்த்துக்க ஏதோதோ வழி தேடுராங்க போல. விடுங்க

    ReplyDelete
  18. என்ன ஒரு நெகடிவ் ஓட்டுக்கூட விழலை?

    ReplyDelete
  19. எதுக்கு இவ்ளோ பெரிய விளக்க கடிதம் சேட்ட , எவனாவது தொல்லை பண்ணினான்னா போட்டு தள்ள வேண்டியது தானே ? இப்படி ஒதுங்கி போறதால்தான் கட்டபஞ்சாயத் நாட்டாமைகள் ஆட்டம் போடுராணுக , அப்புறம் யாருதான் பூனைக்கு மணி (மணிஜி உங்கள சொல்லல , ஹி.ஹி.ஹி )கட்டுறது

    ReplyDelete
  20. ஃப்ரீயா விடுங்க சேட்டை! சிரியஸ் ஆகாதீங்க

    ReplyDelete
  21. just ignore this ugly blog politics. be as u be always. u said u hv got a mother and few sisters so cheer up

    ReplyDelete
  22. ஜி ஒன்னுமே புரியல :) நீங்களும் இத பத்தி எழுதணுமா ? நான் வலை பூ ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது , எனக்கு தெரிஞ்சு இந்த மாறி பிரச்சனை தான் ஓடுது இந்த ஒரு வாரமா , தலையும் புரியல காலும் புரியல, படிக்க ஆர்வமும் இல்ல ..நீங்கள் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வேண்டும் , உங்கள் profile படமாக உள்ள நாகேஷ் அவர்கள் அதுக்கு உங்களுக்கு உதவுவார் :)

    ReplyDelete
  23. நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் வந்து படிப்போம்...:))

    ReplyDelete
  24. அடப்போங்கய்யா....
    நான் எதிர்பார்த்த ஒரு க்ருப் இங்கே ஆஜர்....நல்லாருங்க மக்களே...

    ReplyDelete
  25. //நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற பிரச்சினையின் நியாயத்தை, நீங்கள் கடைபிடித்த வழிமுறைகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் தரத்தால் பிசுபிசுக்க வைத்து விட்டீர்கள்//

    சேட்டைஜி, ஒருவகையில் மிகச்சரியான, தெளிவான பார்வை. சாந்தி அவர்களின் வாதத்தில் நியாயமிருப்பதாக நான் கொண்டாலும் அதற்கான வழிமுறை வேறு வகையில் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  26. //இன்னும் வெளிப்படையாகக் கூறுவதென்றால், முழுப்பிரச்சினையும் எனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.//

    நீங்கள் சொன்னது போல் இந்த பிரச்சினையின் முழுமையைப் படிக்காமல் அதை புரளி என அடைமொழியிட்டுக் கூறக் காரணம் என்ன?

    ReplyDelete
  27. நன்றி @ சி.பி.செந்தில்குமார்
    நன்றி @ LK
    நன்றி @ பன்னிக்குட்டி ராம்சாமி
    நன்றி @ பிரபாகர்
    நன்றி @ வானம்பாடிகள்
    நன்றி @ ராதை/Radhai
    நன்றி @ ganesh
    நன்றி @ சென்ஷி
    நன்றி @ கலகலப்ரியா

    //இந்தப் பதிவை... நான் பஸ்ஸில் பகிர்ந்து கொள்கிறேன்... இது முற்று முழுதிலுமாக என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரிலேயே என்பதை இங்கு பதியக் கடமைப்பட்டுள்ளேன்..//

    தாராளமாக! :-)

    நன்றி @ பிரியமுடன் பிரபு
    நன்றி @ ராம்ஜி_யாஹூ
    நன்றி @ Jo Amalan Rayen Fernando

    //தவிர்க்கமுடியாத்தேவையெனில் வெளிக்காட்ட்லாம். அப்பெண், தான் பாலியல் வக்கிரத்திற்கு ஆளானேன் எனச்சொல்வதற்கு அவர் எதையும் வெளிக்காட்டலாம்.//

    வெளிக்காட்டலாம். ஆனால், அதற்காக பிற பெண்பதிவர்கள் சம்பந்தப்பட்ட உரையாடல்களை, வினவில் போடுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு அனுமதி பெற வேண்டும். இவருக்கு மட்டும் தான் மானம், அவமானமா? மற்றவர்க்கு இல்லையா?

    நன்றி @ மணிஜீ
    நன்றி @ தியான் - Dyan
    நன்றி @ முகிலன்

    என்ன ஒரு நெகடிவ் ஓட்டுக்கூட விழலை?

    முதல் நெகடிவ் ஓட்டைப் போட்டு நாஞ்சில் பிரதாப் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கிட்டாரு! :-))

    நன்றி @ மங்குனி அமைசர்
    நன்றி @ என்.ஆர்.சிபி
    நன்றி @ Mahi_Granny
    நன்றி @ dr suneel krishnan
    நன்றி @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
    நன்றி @ நாஞ்சில் பிரதாப்

    //அடப்போங்கய்யா....நான் எதிர்பார்த்த ஒரு க்ருப் இங்கே ஆஜர்....நல்லாருங்க மக்களே...//

    கவலைப்படாதீங்க நாஞ்சில் அண்ணாச்சியோவ்! நல்லாவே இருப்போமில்லா? :-))))

    நன்றி @ ஜானகிராமன்

    நன்றி @ புலவன் புலிகேசி

    //நீங்கள் சொன்னது போல் இந்த பிரச்சினையின் முழுமையைப் படிக்காமல் அதை புரளி என அடைமொழியிட்டுக் கூறக் காரணம் என்ன?//

    புலவன் புலிகேசி இடுகையை முழுமையாகப் படிக்கவில்லை போலும். போகட்டும்! நியாயமோ, அநியாயமோ, வினவு-ல் இடுகை போட்டு, விவாதம் நடந்து முடிந்த பின்னரும் இதை தனது குழுமத்தில் நீட்டித்துக் கொண்டிருக்கும் திருமதி.சாந்திக்கு சில விஷயங்களைப் புரிய வைக்கவே இவ்விடுகை!

    எனக்கு ஆதரவாகப்பேசிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! மாற்றுக்கருத்தை இட்டவர்களுக்கும் நன்றி! இந்த விஷயத்தை நான் இத்தோடு நிறுத்துவதோ, தொடர்வதோ திருமதி.சாந்தியின் கைகளில் தான் இருக்கிறது. :-))

    ReplyDelete
  28. Follow-up:

    தமிழமுதம் குழுமத்திலிருந்து வருபவர்களுக்கு:
    ---------------

    வலைப்பதிவு என்பது எவர் வேண்டுமானாலும் வாசிக்கத்தக்கது; குழுமங்கள் அப்படியல்ல! இன்னும் Bloggers Forum குழுவில் என்ன நடந்தது என்பது அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தவிர எவருக்கும் முழுமையாகத் தெரியாது. அதே போல பிற குழுமங்களிலும் இந்த சர்ச்சைகுறித்து நடைபெறுகிற விவாதங்கள் குறித்து மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை. எனவே யார் வேண்டுமானாலும், குழுமம் என்ற பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு ’கருடா சவுக்கியமா?’ என்று கேட்கலாம்.

    அரைகுறைத் தகவல்களின் அடிப்படையில், அனுமானங்களின் அடிப்படையில் அல்லது தனிப்பட்ட மனிதர்களின் சொந்தக்கருத்துக்களின் அடிப்படையில் ஒரு விஷயத்தில் யார் மீது தவறு என்று கண்டுபிடிக்க அவகாசமும் நிதானமும் தேவை. இதில் யார் கோழை, யார் வீரன் என்பது பிரச்சினையே அல்ல! அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பது திருக்குறள். உணர்ச்சிவயப்பட்டு மேலோட்டமாக ஒரு பிரச்சினையை அணுகி, ’முட்டாள்’ என்ற பெயரை வாங்குவதைக் காட்டிலும், நிதானித்து ’கோழை’ என்ற பட்டம் வாங்குவது ஒன்றும் கேவலமில்லை.

    என்னைப் பொறுத்தவரையில், வினவு இந்தப் பிரச்சினையைக் கையாண்ட பிறகு, வெற்றி வெற்றி என்று கூரையின்மீது கூக்குரல் போட்டு முடித்தபிறகு, திரும்பத் திரும்ப இதை அங்கும் இங்கும் எழுதி சம்பந்தமில்லாதவர்களை இழுப்பது முறையல்ல! செத்த பாம்பை அடிப்பது தான் வீரம் என்றால் என்ன சொல்ல?

    முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்; அதை மீண்டும் கிளறி கிளறி, சும்மா இருப்பவர்களைச் சீண்டாதீர்கள்! என்னைப் பொறுத்தவரை இது முடிந்து போன விஷயம்; மற்றவர்களும் அப்படியே கருதி அடுத்த வேலையைக் கவனியுங்கள்! சேட்டைக்காரன் மட்டுமல்ல, எல்லாருக்குமே பொறுமை மிக மிக அளவானது.

    ReplyDelete
  29. //இன்னும் வெளிப்படையாகக் கூறுவதென்றால், முழுப்பிரச்சினையும் எனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.//

    இந்த‌ ஒரு வார்த்தையிலேயே இந்த‌ ப‌திவின் த‌லைப்பு சிரிக்கிற‌து சேட்டைக்கார‌ன் அவ‌ர்க‌ளே..

    நீங்க‌ள் இந்த‌ ப‌திவு எழுதுவ‌தாக‌ இருந்தால் அந்த‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி முழுமையாக‌ தெரிந்து கொண்ட‌ல்ல‌வா? எழுத‌ வேண்டும்.

    இந்த‌ இடுகையில் சாந்தி அவ‌ர்க‌ளின் பெய‌ரை புர‌ளி சொல்லுகிறார் என்று சொல்லுவ‌த‌ற்கு என்ன‌ ஆதார‌ம் வைத்துள்ளீர்க‌ள்.. அதையும் வைத்துவிட்ட‌ல்ல‌வா? நீங்க‌ள் எழுதியிருக்க‌ வேண்டும்.,

    எப்ப‌டியோ உங்க‌ குருப்பின் ஆசையை நிறைவேற்றிவிட்டீர்க‌ள்.. :)

    இப்ப‌டியே ஒரு ப‌க்க‌ சார்பாக‌வே ப‌ண்ணுங்க‌ள் உங்க‌ள் சேட்டையை.. :)

    ReplyDelete
  30. //இந்த‌ ஒரு வார்த்தையிலேயே இந்த‌ ப‌திவின் த‌லைப்பு சிரிக்கிற‌து சேட்டைக்கார‌ன் அவ‌ர்க‌ளே//

    நாடோடி அவர்களே! பொதுவாக எனது இடுகைகளே நகைச்சுவை தான்! அதனால் தலைப்பு சிரிப்பதில் ஆச்சரியமில்லை. நன்றி...!

    //நீங்க‌ள் இந்த‌ ப‌திவு எழுதுவ‌தாக‌ இருந்தால் அந்த‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி முழுமையாக‌ தெரிந்து கொண்ட‌ல்ல‌வா? எழுத‌ வேண்டும்.//
    நீங்கள் முழுமையாக இடுகையைப் படித்த மாதிரி தெரியலியே! சம்பந்தா சம்பந்தமில்லாமல் திருமதி. சாந்தி என்னை இழுத்திருப்பதற்கு பதில் எழுதியிருக்கிறேன். பஞ்சாயத்துப் பண்ணுவதற்கு உங்களை மாதிரி ஆளுங்க இருக்கீங்களே...? நான் எதற்கு...? :-))

    //இந்த‌ இடுகையில் சாந்தி அவ‌ர்க‌ளின் பெய‌ரை புர‌ளி சொல்லுகிறார் என்று சொல்லுவ‌த‌ற்கு என்ன‌ ஆதார‌ம் வைத்துள்ளீர்க‌ள்.. அதையும் வைத்துவிட்ட‌ல்ல‌வா? நீங்க‌ள் எழுதியிருக்க‌ வேண்டும்.,//

    தனது குற்றச்சாட்டை வலுப்படுத்த சற்றும் தொடர்பில்லாதவர்களின் பெயரை இழுத்து, குழுமத்திலோ அல்லது வேறு எங்கோ நான்கு பேர் படிக்கிற மாதிரி இட்டுக்கட்டி எழுதுவதற்கு உங்கள் அகராதியில் என்ன பெயர்? :-)

    //எப்ப‌டியோ உங்க‌ குருப்பின் ஆசையை நிறைவேற்றிவிட்டீர்க‌ள்.. :)

    இப்ப‌டியே ஒரு ப‌க்க‌ சார்பாக‌வே ப‌ண்ணுங்க‌ள் உங்க‌ள் சேட்டையை.. :)//

    ஆஹா! கண்டு பிடிச்சிட்டாங்கய்யா...கண்டு பிடிச்சிட்டாங்கய்யா...! :-)))

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!