எனக்கு சின்னவயசிலேருந்தே பிள்ளையாருன்னா ரொம்பப் பிடிக்கும். எனக்கு "தல" தோஸ்த் மாதிரி! என்னிக்காவது சீக்கிரமா எழுந்து, சீக்கிரமாக் குளிச்சேன்னா தெருக்கோடியிலே பிள்ளையாருக்கு அபிசேகம் நடக்குறதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு குழந்தையை அம்மா குளிப்பாட்டுறபோது பாக்குறா மாதிரியே சந்தோஷமாயிருக்கும். செவ்வாய், வெள்ளி தவிர மத்த நாளுங்களிலே காளிகாம்பாள் கோவிலுக்கு வாரம் ரெண்டுவாட்டியாவது போவேன். அதுக்கு எதிர்ப்பக்கத்துலே இருக்கிற புள்ளையார் எனக்கு ரொம்ப ஃபிரண்டுங்க! அவரு கிட்டே எதுவும் கேட்க மாட்டேன். ஆனா, என்னைப் பார்த்தா அவரு "ஹலோ," சொல்லுறா மாதிரி ஒரு ஃபீலிங்க் இருந்திட்டேயிருக்கும்.
அவரு கிட்டே எனக்குப் புடிச்சதே அவரோட சிம்ப்ளிசிட்டி தாங்க! எதையாவது எழுதறதுக்கு முன்னாடி ஒரு ’உ’ போட்டாப் போதும், தல கூடவே வந்து முடிச்சுக் கொடுத்திருவாரு! இந்த தீபாவளியன்னிக்கு எங்க ஆபீஸ்லே பூஜை நடந்தபோது, ஐயரு மஞ்சளை அப்படியே குவிச்சு வச்சாரு! அதுவும் பிள்ளையார் தானாம்!
நமக்குத் தமிழே தகராறு! இதுலே சம்ஸ்கிருத ஸ்லோகம் எங்கே சொல்ல? "சாமி, பிள்ளையாரைக் கும்பிட வாயுலே நுழையுறா மாதிரி சின்னதா ஒரு மந்திரம் சொல்லிக்கொடுங்களேன்,"னு ஐயர் கிட்டே கேட்டேன்.
"போயி ஒரு நோட்டு வாங்கிண்டு வா,"ன்னாரு ஐயரு. அதுலே சீதக்களப செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட....ன்னு விநாயகர் அகவலை எழுதித் தந்தாருங்க! ஔவையார் எழுதினதாம், எந்த ஔவையாருன்னு கேட்கலே! கூடவே தமிழிலேயே சின்னச் சின்ன செய்யுளுங்க சிலதும் கொடுத்தாரு!
"பிள்ளையாருக்கு என்ன சாமி படைக்கணும்?"னு கேட்டேன்.
"குளிச்சிட்டு சுத்தமா ஒரு தம்ளர் பால் கூட வைக்கலாம்; ஒரு பழம் வைச்சாலும் போதும். அவர் எது கொடுத்தாலும் ஏத்துக்குவார்,"ன்னாரு ஐயரு.
இந்தவாட்டி புஸ்தகக் கண்காட்சியிலே வாங்குன ஆங்கிலப்புத்தகத்துலே ஒண்ணு -சகுந்தலா ஜகந்நாதன் & நந்திதா கிருஷ்ணன் எழுதின "கணேஷ்," புத்தகம். தலயைப் பத்தி அதுலே நிறைய தகவல் இருக்குதுங்க! புஸ்தகத்தை வாங்கிட்டு வரும்போது புள்ளையார் கோவிலைப்பார்த்து ஒரு லுக் விட்டேன்! அவரைப் பத்தி நிறையத் தெரிஞ்சுக்கணும் போலிருக்கு!
சில பிரச்சினைகளை காளிகாம்பாள் கிட்டே சொல்ல மாட்டேங்க! அம்மா கிட்டே எதை சொல்லுவேனோ அதை மட்டும் தான் அங்கே சொல்லுவேன். பிள்ளையார் கிட்டே மட்டும் எதுவாயிருந்தாலும் கூச்சமில்லாம சொல்லுவேன். பைக்குள்ளே ரேஷ்மா,ஷகீலா நடிச்ச படத்தோட சி.டியிருந்தாலும் சரி, அசட்டுச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டு அண்ணாத்தேயைப் பார்க்காம வர்றதில்லே!
எங்க ஆபீஸ்லே சாளுண்கேன்னு ஒரு மராட்டிக்காரர் இருக்காருங்க! போனவாட்டி அவர் ஊருக்குப் போயிட்டு வரும்போது எனக்கு ஒரு வலம்புரிப்புள்ளையார் கொடுத்தாருங்க! அவங்க பக்கத்துலே அஷ்டவிநாயக்னு ஒரு தீர்த்தயாத்திரை மாதிரி போவாங்களாம். எல்லாருக்கும் என்னென்னமோ வாங்கிட்டு வந்தவரு எனக்கு மட்டும் குட்டியா ஒரு பிள்ளையார் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தாங்க!
மேன்சனிலே கூட இருக்குறவனெல்லாம் பயமுறுத்தினானுங்க! வலம்புரி பிள்ளையாரை வச்சுக்காதேடா, அவருக்கு தினசரி பூஜை பண்ணனுமுன்னு! நான் கேட்கலே! சமீபத்துலே அந்தப் பிள்ளையாரைக் காணலே! யாரு திருடினான்னு தெரியலே! மொத்த மேன்சனும் என் ரூமுக்கு வந்திட்டுப்போகும்; யாரை என்ன குத்தம் சொல்ல முடியும்?
குடை,செல்போன்,ஐ-போட் இப்படி பல சங்கதிகளைத் தொலைச்சிருக்கேன். ஆனா, பிள்ளையார் காணாமப்போனதிலேருந்து ரெண்டு மூணு நாள் அப்செட்டாயிருந்தேன். அப்பத் தான் "கிரீடம்," படம் பார்த்தேன். அதுலே வருமே, "திருட்டுப்ப்புள்ளையாருக்குத் தான் பவர் அதிகம்,"னு! அதே மாதிரி யாராவது நம்பி எடுத்திட்டுப்போயிருப்பாங்களோ?
அண்ணாத்தே! நீங்க எங்கே இருந்தாலும் உங்களை நல்லா கவனிக்கிறவங்க கிட்டே தான் இருப்பீங்கன்னு நம்புறேன். திருட்டுப்போனா போவுது, மண்ணடி பிள்ளையாரை யாராலும் திருட முடியாது.
அது சரி, உங்க யார் வீட்டுலேயாவது பிள்ளையார் இருந்தா அட்ரஸ் தாங்களேன்!
6, vivekanandar Theru,
ReplyDeleteDubai Kurukku sandhu
Dubai Main Raod
Dubai