Tuesday, January 19, 2010

உறங்குதல் போலும்.!

அதிகாலை ஐந்து மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்தாக வேண்டும். கால் டாக்ஸி சரியான நேரத்தில் வரவேண்டும்; அதற்குள் எழுந்து தயாராக வழக்கமான தூக்கத்தில் ஒரு சில மணிநேரங்களைத் தியாகம் செய்தாக வேண்டும். சற்றே சீக்கிரமாகக் கிளம்பி, சீக்கிரமாக அறைக்கு வந்து, சீக்கிரமாக இரவுணவை முடித்தும், முதல் விமானபயணம் என்கிற பரபரப்பு முகத்துக்கு நேர் எரிகிற குழல்விளக்காய் பரபரப்பேற்றிக்கொண்டிருந்ததால், வருந்தியழைத்தும் வாராத உறக்கம் ஜன்னலுக்கு வெளியிலிருந்து கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறது. திட்டமிட்டு சில செயல்களை நிறைவேற்ற நினைக்கையில், கதவைத் தட்டியபடி உள்ளே நுழைகிற எரிச்சல்கார சினேகிதனாய் வேடத்தை மாற்றுகிற இந்த உறக்கத்தை, நாளைக்கு உறங்கியாக வேண்டும் என்பதால் சபிக்கவும் வழியில்லை.

"நீ தேடும்போது வருவதுண்டோ? விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ?" என்ற பாடல்வரிகள் பணத்துக்குப் பொருந்துவது போலவே உறக்கத்துக்கும் பொருந்துமோ?

இவ்வளவு தீவிரமாக யோசிப்பதன் நோக்கம், மூளை அயர்ச்சியடைந்து "போதும், படுத்து உறங்கு," என்று ஒரு அம்மாவின் அக்கறையோடு கட்டளையிடாதா என்ற நப்பாசையோ?

இந்தத் தூக்கத்தைக் குறித்து பல தகவல்களைக் கேள்விப்பட்டதுண்டு; படித்ததுண்டு. இதில் எத்தனை உண்மை, எத்தனை பொய்யென்று தோல்சீவுகிற பொறுமையின்றி, செரித்தாலும் செரிக்கலாம் என்ற அசட்டு நம்பிக்கையில் அப்படியே மென்றதே அதிகம்.

தூக்கம் என்றதும் உடனே குறட்டையும் "உள்ளேன் ஐயா," என்று கைதூக்கி நிற்கிறது. உறக்கக் குறட்டை விடுபவர்களுக்கு "ஸ்லீப் அப்னியா," என்ற உடல்நலக்குறைவு இருக்கிறதாம். ஒரு குடும்பத்தில் குறட்டை விடுபவர்கள் ஒருவர் இருந்தால், மற்றவர்களின் வாழ்நாளில் சராசரி இரண்டு வருடங்களுக்கு சமமான உறக்கம் குறைகிறதாம். ஆதாரம்: (BSASAA-British Snoring And Sleep Apnoea Association)

இந்தத் தூக்கம் எப்போதெல்லாம் நம்மை வஞ்சித்திருக்கிறது என்று கொஞ்சம் கணக்கெடுத்தால், ஏறக்குறைய எல்லா சுகதுக்கங்களின் போதும், நம்மை பலமணி நேரங்கள் தனிமையில் தவிக்க விட்டு, "வராவிட்டால் போய்த் தொலை," என்று கதவைச் சாத்துகிற நேரத்தில் ஒரு விசுவாசமான நாய்போல வாலைக்குழைத்துக்கொண்டு எனது காலைச் சுற்றிவந்திருப்பதை நினைவுகூர முடிகிறது.

இந்த உறக்கத்திலும் கடன் இருக்கிறது. வாரநாட்களில் சரிவர உறங்காமல், வார இறுதிகளில் ஈடு செய்தே தீர வேண்டியிருக்கிறது. நிறைய பேருக்கு இந்த உறக்கக்கடனும் ஏழுமலையானின் திருமணக்கடன் போலவே தீராமல் இருக்கிறது என்று தோன்றுகிறது.

வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகிற வாலிபக்கனவுகளைப் பற்றிக் குறிப்பிடாமல் உறக்கம் பற்றிய சிந்தனை நிறைவுறாது. நல்ல வேளை, தன்னிச்சையாக வரும் பல கனவுகள் எனக்கு என்றுமே நினைவில் இருந்ததில்லை; நிம்மதி! ஆனால், உறக்கத்துக்கு முன்னாலேயே என்னால் உற்பத்தி செய்யப்படுகிற கனவுகளின் ஆரம்பக்காட்சிகள் சராசரி தமிழ்த்திரைப்படங்களைப் போல என்னை ஒரு அதிநாயகத்துவத்தின் பிரதிநிதியாய் வரைந்து காட்டுகிறது. அந்தக் கனவுகளில் நான் காண விரும்புபவை தான் எனது குறிக்கோள்களா அல்லது அவை என்னை நானே எள்ளிநகையாடிக்கொள்ள செய்து கொண்ட இயல்பான ஏற்பாடுகளா என்பது எனக்கே புதிர்களாய் உள்ளன. இத்தனை ஆண்டுகள் கழிந்து மொத்தம் எத்தனை கனவுகள் மிஞ்சியிருக்கின்றன என எண்ணிப்பார்ப்பதற்கு பத்து விரல்களே தாராளமாயிருக்கும் போலிருக்கிறது.

எல்லாக் குழப்பமான கனவுகளையும் சுயநினைவின் ஆரவாரச்சிரிப்பு வந்து விரட்டுகிறது; அதிகாலையில் முகம் கழுவுகிறபோது முந்தைய இரவில் கனவில் நானே கற்பனை செய்து கொண்ட எனது முகத்தைக் கண்ணாடியில் காண முடிவதில்லை. உனக்கேன் இந்த ஆசையெல்லாம்? என்ற கேள்வியை எனது பிம்பத்தை நோக்கி தூக்கம் தெளியாத கண்கள் வினவுகின்றன. ஆனால், அன்றிரவு உறங்குவதற்கு முன்பு இன்று என்ன கனவுகாணலாம், அதில் யார் வர வேண்டும்,அது எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும் என்று திட்டமிடுவதற்குள்ளாகவே, வழக்கம்போலவே திட்டத்தைக் குலைத்துவிட்டு உறக்கம் வந்து என்னை இருட்டுக்குள்ளே இழுத்துச் சென்று விடுகிறது.

No comments:

Post a Comment

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!