Thursday, January 21, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.03

காட்சி.03

(தளபதி அடங்காவாயர் அரசரின் உத்தரவைக் குறித்து தனது இல்லத்தரசி குக்கரசியுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்)

குக்கரசி: அந்தோ! இதென்ன கொடுமை! இத்தனையாண்டு காலமாக....

த.அ.வாயர்: (இடைமறித்து) குக்கி! நீளமான வசனம் பேசுவதாக இருந்தால் எனக்கு ஒரு குவளை பருத்திப்பால் கொடுத்து விட்டுத் தொடர்வாயாக. தொண்டை வறண்டுகிடக்கிறது.

குக்கரசி: ஐயகோ! ஒருவேளை நாளைக்குள் ராஜநர்த்தகி கிடைக்காவிட்டால் உங்கள் தலையை யானையின் காலில் வைத்து நசுக்கி விடுவார்களா?

த.அ.வாயர்: இப்படியென்று தெரிந்திருந்தால் இருக்கிற ஒரு யானையையும் பாதிவிலையில் விற்று பால்காரன் கணக்கையாவது பைசல் செய்திருப்பேனே?

குக்குரசி: பேசாமல் அந்த யானைக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டால்...?

த.அ.வாயர்: எனக்குப் பருத்திப்பாலே வேண்டாம் பத்தினித்தெய்வமே! எதற்கும் சற்றுத் தள்ளி நின்றே உரையாடு!

குக்கரசி: ஏன் சுவாமி?

த.அ.வாயர்: உனக்குக் குக்கரசிக்குப் பதிலாக மக்கரசி என்று பெயர் வைத்திருக்கலாம். நம் நாட்டில் மனிதன் உண்ணவே விஷமில்லை! உள்ளூரில் அரளிவிதைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு கள்ளச்சந்தையில் கனஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதில் யானைக்கு அளிக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு மூட்டையாவது வேண்டாமா?

குக்கரசி: நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?

த.அ.வாயர்: இப்போது நானிருக்கும் நிலையில் யானையே யோசனை சொன்னாலும் கேட்பேன். சொல்.

குக்கரசி: நாளை என்னையே நீங்கள் ராஜநர்த்தகியாய் நியமித்து விடுங்கள்

த.அ.வாயர்: என்னது? நீயா?

குக்கரசி: மறந்து விட்டீர்களா? எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது என்னைக் கடத்திவந்து மணம் முடித்தீர்கள்?

த.அ.வாயர்: ஆமாம்! முதல்முறையாக போரில் வென்ற மகிழ்ச்சியில் எதையாவது கவர்ந்து வரவேண்டுமென்பதற்காக செய்த ஏடாகூடமான காரியம் அது அரையிருட்டு வேறு. சரியாகப் பார்க்காமல் ஆளை மாற்றிக் கடத்தி வந்து விட்டேன்.

குக்கரசி: விளையாடாதீர்கள்! என்னை ராஜநர்த்தகியாக்கினால் உங்களது தலையும் பிழைக்கும். இன்னொரு வருமானமும் கிடைக்கும்.

த.அ.வாயர்: அடுத்த மாதம் ஊதியமளிப்பதற்காக பாசறையிலிருக்கிற எல்லா ஆயுதங்களையும் பக்கத்து நாட்டில் எடைக்கு எடை போட்டு கிடைப்பதை வாங்கிவருமாறு ஆட்களை அனுப்பியிருக்கிறோம்.

குக்கரசி: அது போகட்டும்! இதில் ஒரே ஒரு சிக்கல் தான்! உங்கள் மன்னர் என்னைக் கண்டு பேதலித்து விட மாட்டாரே?

த.அ.வாயர்: பேதலிப்பதா? பேயறைந்தது போலானாலும் வியப்பில்லை.

குக்கரசி: போதும் கேலி! மன்னர் என் அழகில் மயங்கி விடக்கூடாதே என்று நான் பயந்து கொண்டிருக்கிறேன். கேலி செய்கிறீர்களே?

த.அ.வாயர்: அந்த பயமே உனக்கு வேண்டாம். எங்கள் மன்னர் மடையரே அன்றி குருடர் அல்லர்.

காட்சி.04

இடம்: யானைக் கொட்டில்

(நிதியமைச்சர் தில்லாலங்கடியூர் திருவாழத்தான் யானைப்பாகன் கன்னக்கோலனைத் தேடிவருகிறார்)

தி.திவாழத்தான்: அடேய் கன்னக்கோலா!

கன்னக்கோலன்: அமைச்சர் பெருமானே! வருக வருக!

தி.தி: நான் வருவது இருக்கட்டும்! எங்கேயடா இங்கிருந்த யானை?

கன்னக்கோலன்: அதோ, தொழுவத்தில் வைக்கோல் தின்று கொண்டிருப்பதைப் பாருங்கள் அமைச்சரே!

தி.தி: என்ன? இதுவா நம் யானை? என்னடா இது? எது வால் எது தும்பிக்கை என்று கண்டுகொள்ள முடியாதபடி இளைத்துத் துரும்பாகி விட்டதே?

கன்னக்கோலன்: ஆம் மன்னா! அரண்மனையிலிருந்து உண்டைச்சோற்றைக் கொண்டு வருகிறவர்கள் வழிநெடுக அதைத் தின்றுவிட்டு இங்கு வெறும் கூடை மட்டும் தான் வந்து சேர்கிறது. பட்டத்து யானை பட்டினியில் பப்படம் போல இளைத்து விட்டது.

தி.தி: கன்னக்கோலா! இது எழும்பி நிற்கவே ஏழுநாட்களாகும் போலிருக்கிறதே! இதால் நமது தளபதியின் தலையை மிதிக்க முடியுமா?

கன்னக்கோலன்: என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?

தி.தி: எனக்கும் ராஜநர்த்தகி வரலட்சுமிக்கும் மாத்திரமே தெரிந்த ஒரு ராஜாங்க ரகசியத்தை அறிவுகெட்ட அவியலூராரும் அவசரக்குடுக்கை அடங்காவாயருமாகச் சேர்ந்து மன்னரிடம் சொல்லி விட்டனர். அதன் விளைவாக நாளை தளபதியாரின் தலையை யானையின் காலில் வைத்து மிதிக்க வேண்டும் என்று மன்னர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கன்னக்கோலன்: ஐயோ, எழுந்து நின்றால் நமது யானை சுருண்டு விழுந்து செத்துவிடுமே?

தி.தி: சே! தளபதி அடங்காவாயரை அப்புறப்படுத்தி அவருக்குப் பதிலாக உன்னை தளபதியாக நியமிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

கன்னக்கோலன்: உண்மையாகவா?

தி.தி: இதில் சந்தேகமென்ன? என் திட்டத்தை நிறைவேற்றினால் சோற்றுப்புதூர் சாம்ராஜியத்துக்கு நீயே அடுத்த தளபதி!

கன்னக்கோலன்: நம்ப முடியவில்லையே அமைச்சரே! தளபதி என்றால் என்ன செய்ய வேண்டும்.

தி.தி: நம் நாட்டைப்பொறுத்தமட்டில் தளபதி ஒன்றும் செய்ய மாட்டார். சுற்றியிருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

கன்னக்கோலன்: போருக்குப் போக வேண்டியிருக்குமா?

தி.தி: இந்த நாட்டின் மீது யார் போர் தொடுக்கப்போகிறார்கள்? அமைச்சரவையில் தினசரி ஏற்படுகிற அக்கப்போரை சமாளித்தாலே போதாதா?

கன்னக்கோலன்: அப்படியென்றால், உடனடியாக இரண்டு கூடை சோறும் ஒரு வண்டி கரும்பும் கொண்டு வரச் செய்யுங்கள். சோர்ந்து கிடக்கும் யானையை எழுப்பி வீறு கொள்ளச் செய்கிறேன்.

தி.தி: இதையெல்லாம் சாப்பிட்டால் ஒருவரது தலையை மிதிக்கிற பலம் நமது யானைக்கு வந்து விடுமா?

கன்னக்கோலன்: இதிலென்ன சந்தேகம்? முதலில் உணவை அனுப்புங்கள்! வேண்டுமானால் ஒரு முறை உங்கள் தலையை மிதித்தே அதன் பலத்தை நிரூபித்து விடுகிறேன்.

தி.தி: இன்னும் தளபதியாகவேயில்லை, அதற்குள்ளாகவே ராஜதந்திரமா? சரி, உடனடியாக சோற்றையும் கரும்பையும் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.

கன்னக்கோலன்: கூடவே ஒரு சட்டி சாம்பாரும், பொறியலும் அனுப்புங்கள் அமைச்சரே! சாப்பிட்டு நான்கு நாட்களாகின்றன.

(தொடரும்)

1 comment:

  1. நல்லாருக்குங்க, தொடர்ந்து படிச்சிகிட்டு வர்றேன்....

    கலக்குங்க....

    பிரபாகர்.

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!